ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

தமிழகத்தின் மக்கள் தொகை 7.21 கோடி

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 என பதிவாகியுள்ளது.

News image
Updated On :31 மே 2013, 8:27 pm

தினமணி

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 என பதிவாகியுள்ளது.

2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்புக்குப் பின் மக்கள் தொகை 97 லட்சத்து 41 ஆயிரத்து 351 அதிகரித்துள்ளது. அதாவது கடந்த பத்தாண்டுகளில் மக்கள் தொகை 15.6 சதவீதம் அதிகரித்துள்ளது. ஊரகப் பகுதி மக்கள் தொகை 3 கோடியே 72 லட்சத்து 29 ஆயிரமாகவும், நகரப் பகுதி மக்கள் தொகை 3 கோடியே 49 லட்சத்து 17 ஆயிரமாகவும் பதிவாகியுள்ளது.

2011-ஆம் ஆண்டின் தமிழ்நாட்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு குறித்த முக்கியப் புள்ளி விவரங்கள் வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் அடங்கிய குறுந்தகட்டை பத்திரிகை தகவல் அலுவலக இணை இயக்குநர் எம்.வி.எஸ். பிரசாத் வெளியிட்டார். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கான இணை இயக்குநர் எம்.ஆர்.வி.கிருஷ்ணா ராவ் புள்ளி விவரங்கள் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கினார்.

இந்தப் புள்ளி விவரங்களின்படி மாவட்ட அடிப்படையில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக சென்னை மாவட்ட மக்கள் தொகை 46 லட்சமாகவும், மிகவும் குறைவாக பெரம்பலூர் மாவட்ட மக்கள் தொகை 5 லட்சத்து 65 ஆயிரம் எனவும் பதிவாகியுள்ளது.

மக்கள் தொகை அடர்த்தி: மாநிலத்தில் ஒரு சதுர கி.மீ. பரப்பளவுக்குள் வாழும் மக்களின் எண்ணிக்கை 555 ஆக அதிகரித்துள்ளது. இது 2001-ஆம் ஆண்டைவிட 75 புள்ளிகள் அதிகம். அதிகபட்சமாக சென்னை மாவட்ட மக்கள் அடர்த்தி 26 ஆயிரத்து 553 எனவும், மிகவும் குறைவாக நீலகிரி மாவட்ட மக்கள் அடர்த்தி 287 எனவும் உள்ளது.

பாலின விகிதம் அதிகரிப்பு: தமிழ்நாட்டின் ஆண் மக்கள் தொகை 3 கோடியே 61 லட்சத்து 37 ஆயிரத்து 975 எனவும், பெண் மக்கள் தொகை 3 கோடியே 60 லட்சத்து 9 ஆயிரத்து 55 எனவும் பதிவாகியுள்ளது. கடந்த 2001-ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது தற்போது ஆண் மக்கள் தொகைக்கும், பெண் மக்கள் தொகைக்கும் உள்ள இடைவெளி வெகுவாகக் குறைந்துள்ளது. 2001-ஆம் ஆண்டு 1000 ஆண்களுக்கு 987 பெண்கள் என்று இருந்த ஆண் - பெண் பாலின விகிதம் 2011-ஆம் ஆண்டில் 9 புள்ளிகள் அதிகரித்து 996 எனப் பதிவாகியுள்ளது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 1042 எனவும், மிகவும் குறைவாக தருமபுரி மாவட்டத்தில் 946 எனவும் ஆண் - பெண் பாலின விகிதம் உள்ளது.

தாழ்த்தப்பட்டோர் மக்கள் தொகை: தமிழ்நாட்டில் வாழும் தாழ்த்தப்பட்ட பிரிவினரின் மக்கள் தொகை 1 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 445 என பதிவாகியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் தாழ்த்தப்பட்டோர் மக்கள் தொகை 26 லட்சம் அதிகரித்துள்ளது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 10 லட்சத்து 15 ஆயிரத்து 716 தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 74 ஆயிரத்து 249 பேர் வசிக்கின்றனர்.

பழங்குடியின மக்கள் தொகை 7 லட்சத்து 94 ஆயிரத்து 697 என பதிவாகியுள்ளது. பத்தாண்டுகளில் பழங்குடியினர் மக்கள் தொகை 1 லட்சத்து 40 ஆயிரம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 369 பழங்குடியினர் வசிக்கின்றனர். மிகவும் குறைவாக கரூர் மாவட்டத்தில் 575 பேர் மட்டுமே உள்ளனர்.

எழுத்தறிவு பெற்ற மக்கள் தொகை: மாநிலத்தில் எழுத்தறிவு பெற்ற மக்கள் தொகை 5 கோடியே 18 லட்சமாக அதிகரித்துள்ளது. எழுத்தறிவு பெற்றோர் 80 சதவீதமாக உள்ளது. ஆண்களில் 86 சதவீதம் பேரும், பெண்களில் 73 சதவீதம் பெரும் எழுத்தறிவு பெற்றுள்ளனர். மாநிலத்திலேயே அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 91.7 சதவீதம் பேரும், குறைவாக தருமபுரி மாவட்டத்தில் 68.5 சதவீதம் பேரும் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.

கிராமங்கள் குறைந்தன: 2001-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 16 ஆயிரத்து 317 கிராமங்கள் இருந்தன. ஆனால் பத்தாண்டுகளில் 338 கிராமங்கள் குறைந்து தற்போது 15 ஆயிரத்து 979 கிராமங்கள் மட்டுமே உள்ளன. நகரமயமாக்கல் காரணமாக பல கிராமங்கள் நகரங்களுடன் இணைந்து விட்டன. 2001-ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது தற்போது புதிதாக 265 நகரங்கள் உருவாகியுள்ளன. மொத்த நகரங்களின் எண்ணிக்கை தற்போது 1,097 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.