ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

செய்யாறு அருகே நெமிலி கிராமத்தின் அவல நிலை: பள்ளிக்காக 4 கி.மீ. நடந்து செல்லும் பிஞ்சுக் குழந்தைகள்

செய்யாறை அடுத்த நெமிலி கிராமத்தில் தொடக்கப் பள்ளி இல்லாததால், அப்பகுதியைச் சேர்ந்த பிஞ்சுக் குழந்தைகள் கல்வி பயில தினமும் சுமார் 4 கி.மீ. தூரம் நடந்து செல்லவேண்டிய அவல நிலை உள்ளது.

News image
Updated On :17 செப்டம்பர் 2013, 10:57 pm

தே.சாலமன்

செய்யாறை அடுத்த நெமிலி கிராமத்தில் தொடக்கப் பள்ளி இல்லாததால், அப்பகுதியைச் சேர்ந்த பிஞ்சுக் குழந்தைகள் கல்வி பயில தினமும் சுமார் 4 கி.மீ. தூரம் நடந்து செல்லவேண்டிய அவல நிலை உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் வெம்பாக்கம் ஒன்றியத்தில் உள்ளது நெமிலி கிராமம். இங்கு 700 வீடுகளில் சுமார் 1500 பேர் வசித்து வருகின்றனர். ஊர் மற்றும் காலனி பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 150 பேர் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.

இக்கிராமத்தில் பள்ளிக்கூடம் இல்லாத காரணத்தால், 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் பிஞ்சுக் குழந்தைகள், தினமும் சுமார் 4 கி.மீ. தூரம் நடந்தே சென்று சிறுநல்லூர் தொடக்கப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

அதே போல 5-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்கள் 6 கி.மீ. தூரத்தில் உள்ள புதுப்பாளையம், உக்கல் கிராமத்துக்குச் சென்று படித்து வருகின்றனர். பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் 20 கி.மீ. தொலைவுக்கு மேல் உள்ள மாமண்டூர், பெருநகர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற பகுதிகளுக்கு சென்று படித்து வருகின்றனர்.

இக் கிராம மாணவர்கள் யாரும் உயர் கல்வியை எட்டுவதில்லை. உயர்நிலைப் பள்ளி வரையில் மட்டுமே படித்துவிட்டு விவசாயத் தொழிலை செய்து வருகின்றனர்.

50 ஆண்டுகளாகப் போராடும் கிராம மக்கள்:

நெமிலி ஊராட்சிப் பகுதியில், ஆரம்பப் பள்ளியை அமைக்க வேண்டும் என்று சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வரும் கிராம மக்கள், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆட்சியாளர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளிடம், சட்டப் பேரவை உறுப்பினர்களிடம் மனுகொடுத்து போராடி வருகின்றனர்.

பெற்றோர்கள் அச்சம்: சிறுநல்லூர் சென்று படித்து வர சரியான பஸ் வசதியில்லாத காரணத்தால் மாணவர்கள் நடந்துசெல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். உக்கல் கிராமத்து பள்ளிக் கூடத்துக்கு ஏரிக்கரை வழியாகச் செல்ல வேண்டியுள்ளது. ஏரிக்கரை வழியில் பாம்பு மற்றும் விஷபூச்சிகளின் நடமாட்டம் அதிகம் உள்ள காரணத்தாலும், மழைக் காலம் மற்றும் இதர நேரங்களில் பள்ளிக்கு செல்லாமல் இருந்துவிடுகின்றனர்.

தீர்மானம்: நெமிலி ஊராட்சி சார்பில் கிராம சபைக் கூட்டத்திலும், வெம்பாக்கம் ஒன்றியக்குழுக் கூட்ட மன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் நெமிலி ஊராட்சி சார்பில் பள்ளிப் பகுதிக்குத் தேவையான இடம் அளிக்க, கிராம மக்கள் தயாராக உள்ள நிலை குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளபோதும், கல்வித் துறை சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் நெமிலி கிராம மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.