மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

காவிரி டெல்டா பகுதியில் மக்களை அச்சுறுத்தும் முதலைகள்!

கடலூர் மாவட்டத்தில் குறிப்பாக, கொள்ளிடம் பகுதி காவிரி ஆற்று கரையோரக் கிராமங்களில், தொடர்ந்து மக்களையும், கால்நடைகளையும் முதலைகள் கடித்து காயப்படுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

News image
Updated On :25 செப்டம்பர் 2013, 10:49 pm

ஜி.சுந்தரராஜன்

கடலூர் மாவட்டத்தில் குறிப்பாக, கொள்ளிடம் பகுதி காவிரி ஆற்று கரையோரக் கிராமங்களில், தொடர்ந்து மக்களையும், கால்நடைகளையும் முதலைகள் கடித்து காயப்படுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

எனவே, நீர்நிலைகளில் உள்ள முதலைகளைப் பிடித்து, பண்ணை அமைத்து அவற்றை பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்கள் காவிரி டெல்டாவின் கடைமடை பகுதிகளாக திகழ்கின்றன. ஆண்டுதோறும் வெள்ளம், வறட்சி என மாறி, மாறி விவசாயிகள் பாதிக்கப்படும் பகுதியாகும்.

வெள்ளக் காலங்களில் அதிக நீர் வந்தாலும், அதில் அடித்து வரும் முதலைகள் ஊர்க் குளத்தில் புகுந்து மக்களை கடித்து வருகிறது. வறட்சி காலத்தில் இரை தேடி ஊருக்குள் புகுந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை தின்றும், பொதுமக்களை கடித்தும் அச்சுறுத்தி வருகிறது. இதனால், கொள்ளிடக் கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் நீர்நிலைகளில் இறங்கி குளிப்பதற்கு அச்சப்படுகின்றனர்.

சிதம்பரம் அருகே தீத்திக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகசாமி (35), பாலமுருகன் (23), கோவிந்தராஜ் (37). இவர்கள் மூவரும் கொள்ளிடம் ஆற்றில் செப்டம்பர் 15-ம் தேதி குளித்தபோது, முதலை கடித்து பலத்த காயமடைந்தனர். மேலும் சிதம்பரம் அருகே பெராம்பட்டு ரயிலடி பகுதியைச் சேர்ந்த ஜோதிராஜன் (55) கடந்த ஜூலை 28 ஆம் தேதி முதலை கடித்து இறந்தார்.இந்த ஆண்டு மட்டும் இதுவரை முதலை கடித்து 5 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் இறந்துள்ளார். 20-க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளன.

÷எனவே, தமிழக அரசு, வனத் துறை மூலம் கீழணையின் கீழ்பகுதியில் உள்ள வடவாறு, வடக்குராஜன் வாய்க்கால், பழைய கொள்ளிடம் பகுதிகளில் உள்ள முதலைகள் அனைத்தையும் பிடித்து நெய்வேலி அருகே முதலைப் பண்ணை அமைத்து அதில் விட்டு பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதலை கறி விற்பனை

கொள்ளிடம் ஆற்றில் உள்ள முதலைகளை ஒரு சிலர் ஈட்டி, பாறாங்கல் உள்ளிட்டவைகளால் தாக்கிக் கொன்று, அதன் கறியை கிலோ ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.

கக்குவான் நோய்க்கு முதலைக் கறி சிறந்த மருந்து என்று தெரிகிறது. பாம்பு இனத்தைச் சேர்ந்தது முதலை எனவும், தன்னை தொந்தரவு செய்யாத வரை அது யாரையும் கடிக்காது எனவும் கூறப்படுகிறது.

முதலைகளை ஒரு சிலர் அழிப்பதால், முதலைகள் தனது பாதுகாப்பிற்காக நீர் நிலைகளில் இறங்குபவர்களை கடித்து குதறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, முதலை இனத்தை பாதுகாக்கவும், பொதுமக்களை காக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.