கரூர் அருகே ஞாயிற்றுக்கிழமை மணல் லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் சுமார் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரூர் வாங்கல் அருகே உள்ள நன்னியூர்புதூர் ஊராட்சியில் கோவில்பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே காவரி ஆற்றில் உள்ள மணல்குவாரியில் இருந்து லாரிகள் மூலம் மணல் கேரளா, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் லாரிகள் இந்த கிராமத்தின் வழியே செல்வதால் கிராமச் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டதாம். லாரிகள் செல்லும் போது அவற்றில் இருந்து கிளம்பும் தூசிகள் வீட்டுக்குள் இருக்கும் பொருட்கள் மீது படிகிறதாம். சாலையின் குறுக்கேச் செல்லும் பைப் லைன்களும் உடைந்துவிடுகிறதாம். மேலும் வயதான முதியோர்கள், பள்ளிக்குழந்தைகள் சாலையை அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. தொடந்து விபத்துகளும் நடந்து வந்துள்ளது.
இதனால் கிராமத்திற்குள் வழியாக மணல் லாரிகள் செல்லக்கூடாது எனக்கூறி அப்பகுதியினர் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் அவ்வழியே வந்த மணல் லாரிகளை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மணல்குவாரிக்கு மணல் அள்ள வந்த லாரிகளும், மணலை அள்ளிக்கொண்டு திரும்பிய லாரிகளும் அப்படியே நின்றன.
இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீஸôர் மற்றும் மணல் குவாரி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இனி இந்தவழியாக லாரிகளை இயக்கக்கூடாது, இரவு, பகல் என மணல் லாரிகள் இயக்கப்படுவதால் இரவில் தூங்க முடிவதில்லை. பகலிலும் கூட வீட்டிற்குள் இருக்க முடிவதில்லை. காரணம் மணல் தூசிகள் வீட்டிற்குள் படிந்து விடுகிறது. லாரிகளை மாற்று இடத்தில் இயக்க வேண்டும் என்றனர். இதற்கு அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமையாக உள்ளது, நாளைக்குள் நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
காலை 8.30 மணிக்குத் தொடங்கிய போராட்டம் 11 மணி வரை சுமார் இரண்டரை மணி வரை நீடித்ததால் அப்பகுதியில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.