

கோடையின் தாக்கத்தால் தமிழகத்தின் 21 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் கட்டாயமாக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் திருவண்ணாமலை, திண்டுக்கல் மற்றும் தேனியில் நிலத்தடி நீர்மட்டம் கடந்த ஆண்டை விட 2 மீட்டருக்கு கீழ் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தவிர சென்னை, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் குறைந்துள்ளது.
11 மாவட்டங்களில் உயர்வு:தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், கரூர் உள்பட 11 மாவட்டங்களில் மட்டும் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக பெரம்பலூரில் 4 மீட்டர் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் மாநிலம் முழுவதும் நீர்மட்டம் பரவலாகக் குறைந்து வருவதால் வரும் நாள்களில் பாசனம் மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. வேளாண் தொழில் அதிகம் நடைபெறும் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர் இருப்பு குறைந்து கொண்டே வருவதால் அதிக ஆழத்துக்கு ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க வசதி இல்லாத சிறு விவசாயிகளின் நிலங்கள் வறண்டு வருகின்றன.
மாநிலம் முழுவதும் மழைநீர் சேகரிப்பை தீவிரப்படுத்துவதே இதற்கு தீர்வாக அமையும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள கோயில்கள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அமல்படுத்துமாறு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
அதே போல வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது விதி. புதிதாக குடிநீர் இணைப்பு வேண்டி விண்ணப்பிக்கும் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு திட்டம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற சட்டமும் நடைமுறையில் உள்ளது. ஆனால் சமீப காலமாக இந்த விதிகளை யாரும் பின்பற்றுவதில்லை.
குடிநீர் வாரியம் அலட்சியம்: சென்னையில் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான கட்டடங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான கட்டடங்களில் மழைநீரை சேகரிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.
மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை அண்மையில் சென்னை குடிநீர் வாரியம் மேற்கொண்டது. ஆனால் வெறும் கண்துடைப்புக்காக நடத்தப்பட்ட அந்த விழிப்புணர்வு பிரசாரத்தால் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை.
மேலும் புதிய இணைப்புகள் பெற விண்ணப்பிப்பவர்களிடமும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை குடிநீர் வாரிய அதிகாரிகள் அறிவுறுத்துவதில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்த தகவல்களைப் பெற குடிநீர் வாரிய தலைமைப் பொறியாளர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) மணியைத் தொடர்பு கொண்டபோது, செய்தியாளர்களிடம் பேசக் கூடாது என்று உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறி தொடர்பைத் துண்டித்து விட்டார்.
மழைநீர் சேகரிப்பை கட்டாயமாக்காமல் இருந்தால் அடுத்து வரும் ஆண்டுகளில் மாநிலத்தின் நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்துக்கு சென்று விட வாய்ப்புள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
மாவட்ட வாரியாக நிலத்தடி நீர் கிடைக்கும் விவரம் (மீட்டரில்) மாவட்டம் கடந்த இந்த
ஆண்டு ஆண்டு
சென்னை 4.73 5.19
திருவள்ளூர் 4.58 4.90
காஞ்சிபுரம் 5.27 5.14
திருவண்ணாமலை 6.96 9.82
வேலூர் 8.28 9.08
தருமபுரி 11.25 10.72
கிருஷ்ணகிரி 9.24 8.32
கடலூர் 8.18 7.12
விழுப்புரம் 7.22 8.05
தஞ்சாவூர் 4.33 5.84
திருவாரூர் 3.74 3.85
நாகப்பட்டினம் 3.27 3.31
திருச்சி 10.36 12.26
கரூர் 10.56 9.40
பெரம்பலூர் 13.18 9.00
புதுக்கோட்டை 7.29 9.03
அரியலூர் 5.81 5.41
சேலம் 12.88 13.21
நாமக்கல் 4.63 14.66
ஈரோடு 11.39 10.59
கோவை 14.70 16.15
திருப்பூர் 13.29 12.77
நீலகிரி 3.27 2.29
திண்டுக்கல் 11.23 13.40
மதுரை 8.40 9.22
ராமநாதபுரம் 4.91 5.18
சிவகங்கை 7.05 8.85
தேனி 13.51 15.51
தூத்துக்குடி 6.36 7.10
திருநெல்வேலி 6.73 8.25
விருதுநகர் 9.50 10.44
கன்னியாகுமரி 8.25 5.58
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.