விவசாயிகள் பயிர்களை பாதுகாக்க வயல்களில் மின்சார வேலி அமைப்பதை தவிர்க்க வேண்டும் என மேற்பார்வை பொறியாளர் சுரேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் மின் விபத்துக்களை தடுப்பதற்கும், சிக்கனமாக பயன்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், வீடுகளில் ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பதற்கு குறிப்பிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மேற்பார்வை பொறியாளர் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
ஒவ்வொரு நுகர்வோரும் மின்கசிவு தடுப்பான்களை மெயின் போர்டில் பொறுத்தி மின்கசிவினால் ஏற்படும் விபத்தை தடுக்க வேண்டும். தொலைக்காட்சி ஆண்டானவை வீட்டிற்கு அருகே செல்லும் மேல்நிலைக் கம்பிகளுக்கு அருகில் அமைக்க கூடாது. ஒவ்வொரு வீட்டு இணைப்புக்கும் சரியான நில இணைப்பு(எர்த் பைப்) அமைத்து, அதை குழந்தைகள், கால்நடைகள் தொடாத வகையில் பராமரிக்க வேண்டும். மின்கம்பத்தின் மீது கொடி கட்டி துணிகளை உலர வைக்கும் செயலை செய்யக் கூடாது.
அதேபோல் குளியலறையிலும், கழிப்பிட வளாக அறையில் ஈரமுள்ள பகுதியில் மின் அழுத்தான்களை(ஸ்விட்ச்) பொறுத்தக் கூடாது. மின்கம்பம், அவற்றை தாங்கிப் பிடிக்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டக்கூடாது, அதேபோல் பந்தல் தூண்களாகவும் பயன்படுத்த கூடாது. வீட்டு மின் இணைப்பு பணிகளை அதற்கான உரிமம் பெற்ற ஓப்பந்தகாரர்கள் மூலமே செய்ய வேண்டும். மின் அழுத்தான்கள் அனைத்தும் ஐ.எஸ்.ஐ முத்திரை பெற்ற மின்சாதன பொருள்களாக பயன்படுத்த வேண்டும்.
மின்சார பிளக்குகளை பொறுத்தும் போதும், எடுக்கும் முன்பும் மின் இணைப்பை துண்டித்து விடுங்கள். குளிர்சாதன பெட்டி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு மூன்று பின் பிளக்குகளை பயன்படுத்தியே மின் இணைப்பு கொடுக்க வேண்டும். உடைந்த மின் அழுத்தான்களையும், பிளக்குகளையும் உடனே மாற்றிவிட வேண்டும். எக்காரணம் கொண்டும் பழுதான மின்சாதன பொருள்களை உபயோகிக்க கூடாது. கேபிள் டிவி இணைப்பு வயர்களை மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்ல வேண்டாம். சுவற்றின் உள்பகுதியில் மின்சாரம் கொண்டு செல்வதற்கு பிவிசி குழாய்கள் பதிக்கப்பட்டிருந்தால், அக்குறிப்பிட்ட பகுதியில் ஆணி அடிப்பதை தவிர்க்க வேண்டும்.
மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள் அருகில் செல்ல வேண்டாம். அதேபோல், பலத்த காற்று மழைக்கு துண்டாகி விழந்து கிடக்கும் கம்பிகளின் அருகே செல்லாமல், உடனே மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவும். மின்மாற்றிகள், துணை மின்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் பாதுகாப்பு வேலி அருகே சிறுநீர் கழிக்க செல்ல வேண்டாம்.
மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு இடையே கட்டடங்களை போதுமான இடைவெளிவிட்டு அமைக்க வேண்டும். வயல்களில் மின்வேலி அமைப்பதை தவிர்க்க வேண்டும். பந்தல்கள் கூட்ட அரங்குகளில் அலங்கார விளக்குகள் அமைப்பதற்கு ஒட்டுப்போட்ட வயர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். எனவே மின் நுகர்வோர்கள் மேற்குறிப்பிட்ட ஆலோசனைகளை பின்பற்றி பயனடையும்மாறு மேற்பார்வை பொறியாளர் சுரேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.