

சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேசத்தவரின் பதுங்கு குழியாக திருப்பூர் தொழில் நகரம் மாறிக் கொண்டிருப்பதை சமீபத்திய நிகழ்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. தொடர்ந்து இதேபோல் குடியேறி மறைந்து வாழும் அயல்நாட்டவரைக் கண்டறிந்து வெளியேற்ற போலீஸôர் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
பின்னலாடை உற்பத்தித் தொழிலில் சர்வதேச புகழ்பெற்ற திருப்பூருக்கு மிக முக்கியப் போட்டி நாடாக வங்கதேசம் விளங்குகிறது. பொருளாதார நிலையில் பின்தங்கிய அந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் வரிச் சலுகைகள் அளிப்பதே இதற்கு முக்கியக் காரணமாகும்.
அந்த வகையில், இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்துக்கு வங்கதேசம் போட்டியாக விளங்கினாலும், அந்நாட்டிலிருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் தொழிலாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அவ்வாறு இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேசத் தொழிலாளர்கள் தேர்வு செய்யும் நகரங்களில் ஒன்றாக திருப்பூர் மாறிக் கொண்டிருப்பதை சமீபத்திய நிகழ்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
அந்த வகையில், திருப்பூரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் உரிய ஆவணங்களின்றி வங்கதேசத்தவர் சுமார் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் வங்கதேசத்திலுள்ள ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணியாற்றிய தொழிலாளர்கள் என்பதும், அவர்களில் 4 பேர் திருப்பூரிலேயே குடும்ப அட்டை பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
""குறைந்தபட்ச தொழிலாளர் நலச் சட்டங்கள், தொழிற்சாலைகள் சட்டங்கள்கூட வங்கதேசத்தில் பின்பற்றப்படுவதில்லை என்பதால், அங்குள்ள பெரும்பாலான நிறுவனங்கள் நெருக்கடி மிகுந்த இடங்களில் பல அடுக்கு மாடிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்தக் கட்டடங்களில் தொழிலாளர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கும் எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து தரப்படுவதில்லை. மேலும், அந்நாட்டு நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கப்படுவதுடன், அதிகப்படியான நேரம் பணியாற்றவும் நிர்பந்திக்கப்படுகின்றனர். இதுவே அந்நாட்டுத் தொழிலாளர்கள் வேறு நாடுகளை நாடிச் செல்ல முக்கியக் காரணமாகும்'' என்கிறார் அந்நாட்டு நிறுவனங்களை ஆய்வு செய்தவரான "சேவ்' தன்னார்வ தொண்டு நிறுவன இயக்குநர் ஆ.அலோசியஸ்.
அவர் மேலும் கூறியது: சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேசத் தொழிலாளர்களில் ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் தங்களுக்கு தெரிந்த தொழிலின் அடிப்படையில் திருப்பூரை தேர்வு செய்யக்கூடும். அவ்வாறு சட்டவிரோதமாக திருப்பூரில் குடியேறும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை அடையாளம் காண, மத்திய அரசின் பிற மாநிலத்திலிருந்து இடம்பெயரும் தொழிலாளர் சட்டத்தை திருப்பூரில் முழுமையாக அமல்படுத்த வேண்டும். இதன் மூலம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தொழிலாளர் நல அலுவலகத்தில் முறையாகப் பதிவு செய்யப்படுவதுடன், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்களையும் எளிதில் கண்டறிய முடியும் என்றார்.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் எஸ்.என்.சேஷசாய் கூறியது: ஏற்கெனவே கிடைத்த தகவலின் அடிப்படையில் உரிய ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தவர் 10 பேர் கைது செய்யப்பட்டனர். தங்களிடம் பணியாற்றும் தொழிலாளர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை புகைப்படங்களுடன் தெளிவாகப் பதிவு செய்து வைத்திருக்குமாறு திருப்பூர் நிறுவன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலீஸôரும் இதுதொடர்பாக தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
நாட்டின் மிக முக்கியத் தொழில் நகரங்களில் ஒன்றான திருப்பூரில் ஏற்கெனவே கள்ளநோட்டு புழக்கம், போதைப் பொருள்கள் விற்பனை, நைஜீரியர்கள் அத்துமீறல் போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது வங்கதேசத் தொழிலாளர்களின் சட்டவிரோத குடியேற்றமும் அமைந்துள்ளது. இத்தகைய சர்வதேச பிரச்னைகள் தலைதூக்குவது திருப்பூரின் எதிர்கால தொழில் நிலையையே கேள்விக்குறியாக்கிவிடும் என்பதால் சட்டவிரோதமாக திருப்பூரில் தங்கியுள்ள வங்கதேசத்தவர் குறித்து ஆய்வு மேற்கொண்டு அவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை போலீஸôர் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.