புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

தமிழகக் காடுகளில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தமிழகக் காடுகளில் யானைகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இப்போது தமிழகத்தில் 4,015 யானைகள் இருப்பதாக வனத் துறை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

News image
Updated On :2 ஏப்ரல் 2015, 12:41 am

தமிழகக் காடுகளில் யானைகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இப்போது தமிழகத்தில் 4,015 யானைகள் இருப்பதாக வனத் துறை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

தென் இந்தியாவில் கர்நாடகம், கேரளம் மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் யானைகள் அதிகம் காணப்படுகின்றன. சமீபகாலமாக பல்வேறு காரணங்களினால் கேரளம், கர்நாடகம் மாநிலங்களில் யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எதிர்பாராத விபத்துகள், மர்ம நோய்கள் உள்ளிட்டவற்றால் யானைகள் இறப்பு விகிதம் அதிகரித்து வந்தாலும், மத்திய அரசு மேற்கொண்ட யானைகள் பாதுகாப்பு முயற்சிகளால் அவற்றின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது என, வன உயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

1997-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்த மொத்த யானைகளின் எண்ணிக்கை 25,842. பத்தாண்டுகள் கழித்து இந்த எண்ணிக்கை 2007-ஆம் ஆண்டில் 27,719 ஆக அதிகரித்துள்ளன. பின்னர், 2012-ஆம் ஆண்டு 29,391-30,711 என அதிகரித்தது.

தமிழகத்தில்: தமிழகத்தில் 1997-ஆம் ஆண்டு மொத்த யானைகளின் எண்ணிக்கை 2,971 இது 2007-ஆம் ஆண்டில் 3,867 ஆக உயர்ந்தது. மேலும், 2012-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 4,015 ஆக யானைகள் எண்ணிக்கை கூடி இருப்பதாக தெரிகிறது.

பத்தாண்டுகளில் தமிழகத்தில் கிட்டதட்ட 900 யானைகள் அதிகரித்துள்ளன. கேரளத்தை ஒப்பிடுகையில் இந்த வளர்ச்சி விகிதம் குறைவுதான்.

1997-ஆம் ஆண்டு 3,600 ஆக இருந்த கேரள யானைகளின் எண்ணிக்கை 2007-ஆம் ஆண்டு 6,068 ஆக உயர்ந்தன. 2012-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கேரளத்தில் யானைகளின் எண்ணிக்கை 5,942 ஆக குறைந்துள்ளன.

தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஆணமலை, பெரியார் என யானைகள் பாதுகாப்பு சரணலாயங்கள் உள்ளன. இவை அனைத்தும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ளன.

இதுகுறித்து இயற்கைகான உலகளாவிய நிதியம் (World Wildlife Fund) மூத்த திட்ட அதிகாரி சிவ சுப்ரமணியம் கூறியதாவது:

மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசின் வழிக்காட்டுதல்படி யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன்படி இப்போது 3,987 முதல் 4,015 யானைகள் தமிழகத்தில் இருக்கும் என தெரியவந்துள்ளது. கேரளம், கர்நாடகம் ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் யானைகள் எண்ணிக்கை தமிழகத்தில் குறைவுதான். ஆனால், யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பில் தமிழகம் முன்னிலை மாநிலமாக திகழக்கிறது.

யானைகள் இறப்பது குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் உள்ளன. மின்வேலி மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பதும் அவ்வப்போது நடைபெறுகிறது.

மேலும் இயற்கையான உடல்நிலைக் கோளாறுகள் காரணமாக யானைகள் உயிரிழக்கின்றன. கடுமையான வனப் பாதுகாப்பு சட்டத்தின் காரணமாக தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுவது முற்றிலும் தடுக்கப்பட்டுவிட்டது. இதற்கு வனப் பகுதிகளில் உள்ள மக்களிடையே மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வே காரணம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.