நெல்லையில் இளங்கோவனை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம்: காங்கிரஸ் வெளிநடப்பு
திருநெல்வேலியில் திங்கள்கிழமை துணைமேயர் தலைமையில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் 5 நிமிடங்களில் 56 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


திருநெல்வேலியில் திங்கள்கிழமை துணைமேயர் தலைமையில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் 5 நிமிடங்களில் 56 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கண்டித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு அதிமுக, பாஜக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர் வெளிநடப்பு செய்தார்.
மேயர் இ. புவனேஷ்வரி, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் மாமன்றக் கூட்டத்தை நடத்துமாறு மேயர், துணைமேயருக்கு அதிகாரம் அளித்ததை அடுத்து திங்கள்கிழமை மாநகராட்சியின் சிறப்புக் கூட்டம் மற்றும் சாதாரணக் கூட்டம் துணை மேயர் பூ. ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆணையர் சு. சிவசுப்பிரமணியன், மாநகராட்சி அதிகாரிகள், துணை ஆணையர்கள், மண்டலக்குழுத் தலைவர்கள் எம்.சி. ராஜன், கி. மாதராமானுஜம், எஸ்.கே.ஏ. ஹைதர்அலி, ந. மோகன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
திருக்குறள் வாசித்து கூட்டத்தை துணைமேயர் தொடங்கி வைத்தார். இதையடுத்து முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம், இசை அமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், முன்னாள் தமிழக அமைச்சர் பூ. செந்தூர்பாண்டியன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து மருத்துவத் திட்டங்கள், நடிகர் சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் கட்டுவது உள்ளிட்ட அரசின் திட்டங்களுக்கு முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து, பிரதமர் நரேந்திரமோடி, முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் சந்திப்பை கொச்சைப்படுத்தி பேசிய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.
இளங்கோவனுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தை துணைமேயர் வாசித்தார்.
இந்த தீர்மானத்திற்கு கண்டனம் தெரிவித்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஐ. விஜயன், மதுவிலக்கு போராட்டங்களை திசை திருப்ப முயற்சியில் ஆளும் கட்சி ஈடுபட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்து பேசினார்.
காங்கிரஸ் உறுப்பினரின் பேச்சுக்கு அதிமுக, பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் பொன். அழகுராஜ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து பேசினார். இளங்கோவனை கண்டிக்கும் தீர்மானம் வாசிக்கப்பட்டபோது, அதிமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். தீர்மானத்தின் மீது காரசார விவாதம் நடைபெற்றதால் அவையில் கூச்சல் நிலவியது.
அப்போது துணைமேயர் பேசியதாவது: மேயர் புவனேஷ்வரி உடல்நலம் பாதிக்கப்பட்டு 20 தினங்கள் விடுப்பில் உள்ளதால், அவர் அளித்த கடிதத்தின்பேரில், மாநகராட்சியில் மக்களின் வளர்ச்சிப் பணிகள் தேக்கமின்றி நடைபெறும் நோக்கத்தில் இக்கூட்டங்கள் நடைபெறுகிறது. எனவே உறுப்பினர்கள் தீர்மானங்கள் நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டும். மேலும் உறுப்பினர்கள் தங்களின் கருத்துக்களை அடுத்த மாமன்றக் கூட்டத்தில் தெரிவிக்கலாம் என்றார் அவர். இதனை தொடர்ந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.
5 நிமிடங்களில்...
சிறப்புக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட கடந்த 27.11.2014 அன்று மாமன்றக் கூட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட 36 தீர்மானங்கள் மற்றும் சாதாரணக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட 20 தீர்மானங்கள் உள்பட 56 தீர்மானங்களும் வாசிக்கப்பட்டு 5 நிமிடங்களில் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்து துணை மேயர் கூட்டம் முடிந்ததாக அறிவித்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட இனிப்பு, காரம், காபி ஆகியவற்றை அருந்தும் முன்பே கூட்டம் முடிவடைந்து விட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...