சுற்றுலாப் பயணிகளின் விடுதிகளில் வாடகை குறைப்பு

தமிழகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கத்தில், சுற்றுலாத் துறையின் சார்பில் செயல்பட்டு வரும்
சுற்றுலாப் பயணிகளின் விடுதிகளில் வாடகை குறைப்பு
Updated on
2 min read

தமிழகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கத்தில், சுற்றுலாத் துறையின் சார்பில் செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகளின் வாடகைக் கட்டணத்தை குறைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
 தமிழகத்துக்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக சுற்றுலாத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் திருக்கோயில்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், புனிதத் தலங்கள், கடற்கரைத் தலங்கள், மலைப்பிரதேசங்கள், வன விலங்கு சரணாலயங்கள், நினைவுச் சின்னங்கள், தொல்லியல் துறை இடங்கள், கட்டடக்கலை, இசை உள்ளிட்ட பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன.
 இந்தத் தலங்களைப் பார்க்க நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அதோடு, பயணிகள் எளிதாகச் சென்று வரும் வகையில், சாலை உள்பட உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
 இதேபோல, சுற்றுலாத் துறை சார்பில் செயல்படும் தங்கும் விடுதிகளில், தனியாருக்கு ஈடாக பல்வேறு வசதிகள் செய்து கொடுக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
 இதைக் கருத்தில் கொண்டு, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதற்காக தங்கும் விடுதிகளில் வாடகைக் கட்டணத்தை குறைக்குமாறு அரசுக்கு அண்மையில் பரிந்துரை செய்யப்பட்டது. அந்த அடிப்படையில் சுற்றுலாத் துறை சார்பில் நடத்தப்படும் தங்கும் விடுதிகளில் வாடகைக் கட்டணத்தை குறைக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இது குறித்து சுற்றுலாத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் சுற்றுலாத் துறையின் சார்பில் 53 தங்கும் விடுதிகள் உள்ளன. இவற்றில் நீலகிரி, கொடைக்கானல், மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்பட பல்வேறு மாவட்டங்களில் 23 அரசு தங்கும் விடுதிகள் உள்ளன. மேலும் 30 தங்கும் விடுதிகள் தனியார் வசம் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
 தங்கும் விடுதிகளில் வசதிகளை ஏற்படுத்தும் வகையில் ஏற்கெனவே ராமேசுவரம், கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் உள்ள விடுதிகளில் இலவசத் தொலைபேசியுடன் இணையதள வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
 மேலும் மாமல்லபுரம், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் உள்ள விடுதிகளில் டிசம்பர் முதல் வாடகைக் கட்டணம் குறைக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. தற்போது, கூடுதலாக இரண்டு படுக்கைகளுடன் கூடிய அறைகளுக்கு, தனியார் விடுதிகளைவிட வாடகைக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
 வாடகைக் குறைப்புக்கு சுற்றுலாப் பயணிகளின் வரவேற்பைப் பொருத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தங்கும் விடுதிகளில் வாடகைக் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 கூடுதல் வசதி: சுற்றுலாத் துறை சார்பில் மாமல்லபுரம், மதுரை, திருச்சி தங்கும் விடுதிகளில் இரண்டு படுக்கைகள் கொண்ட அறைக்கு ரூ.250 முதல் ரூ.500 வரை குறைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, அரசு விடுதியில் இரண்டு படுக்கைகள் கொண்ட அறைக்கு முன்பு ரூ.3,000 நிர்ணயிக்கப்பட்டிருந்தது; தற்போது அது ரூ.2,500-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
 இதேபோன்று திருச்சி, மதுரை விடுதிகளில் இப்போதுள்ள கட்டணத்தில் ரூ.250 அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக கூடுதலாக வைஃபை வசதி, காலை உணவு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com