இன்னமும் வழங்கப்படாத சுனாமி குடியிருப்புகள்!
சுனாமியால் பாதிக்கப்பட்டு 11 ஆண்டுகளாகியும், வீடுகளை இழந்த பலருக்கும் அரசின் வீடுகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.


சுனாமியால் பாதிக்கப்பட்டு 11 ஆண்டுகளாகியும், வீடுகளை இழந்த பலருக்கும் அரசின் வீடுகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடந்த 2004ஆம் ஆண்டு, டிசம்பர 26-இல் சுனாமி என்னும் ஆழிப்பேரலை கடலூர் மாவட்டத்தைத் தாக்கியது. இந்தத் தாக்குதல் 51 மீனவக் கிராமங்களில் வசித்தவர்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டதுடன், பொதுமக்கள் ஏராளமானோரின் இயல்பு வாழ்க்கையிலும் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. பேரலையில் சிக்கி 617 பேர் இறந்தனர். 38 பேரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆழிப் பேரலையின் கோரத் தாக்குதலானது மனித உயிர்களையும், பல கட்டடங்களையும், மரங்கள், செடிகள், மீனவர்களின் படகுகளையும் இரையாக்கிக் கொண்டது.
இதில் பாதிக்கப்பட்டு நிர்க்கதியான மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு அரசும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும் முன்வந்தனர்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கவும், புதிய படகுகள் வழங்கி அவர்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கவும் உதவிக்கரங்கள் நீட்டப்பட்டன.
அதன்படி, கடலூர் அருகே ஏணிக்காரத் தோட்டத்தில் சுமார் ஆயிரம் வீடுகள் தொண்டு நிறுவனங்களால் கட்டிக் கொடுக்கப்பட்டன. இந்த வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு தற்போது வசித்து வருகின்றனர்.
இதேபோல, மீனவர்களுக்கு அரசு சார்பில் ராஜீவ் காந்தி தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ், கடலூர் முதுநகர் செல்லக்குப்பம் குட்டியாண்டவர் கோயில் அருகே 538 வீடுகள் கட்டும் பணி 2009 ஆம் ஆண்டு, பிப்ரவரியில் தொடங்கியது. ரூ.14.75 கோடி மதிப்பீட்டிலான இத் திட்டத்தில் தலா 325 சதுர அடி கொண்ட வீடுகள் தலா ரூ.2.75 லட்சத்தில் கட்டும் பணி நடைபெற்று வந்தது.
இதில், பெரும்பாலான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டபோதிலும், போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. சாலை, மின்சாரம், குடிநீர் வசதிகள் போதுமான அளவுக்கு இல்லை. மேலும், சுமார் 300 பேருக்கு மட்டுமே வீடுகள் ஒதுக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கப்படாததால், அந்த வீடுகள் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு புகலிடமாக உள்ளது.
மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் செல்லங்குப்பம் காலனி அருகே சுமார் 60 வீடுகள் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டும், உள்ளூர் மக்களின் எதிர்ப்பால் அங்கு வீடுகள் கட்ட முடியாத நிலை உள்ளது. 11 ஆண்டுகள் கடந்த பின்னரும் வீடுகள் கட்டுவதற்கான பணிகள்கூட தொடங்கப்படவில்லை.
இதுகுறித்து தமிழ்நாடு மீனவர்கள் பேரவையின் கடலூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் கூறியதாவது:
ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அறிவித்த பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. செல்லங்குப்பத்தில் அரசால் கட்டப்பட்ட வீடுகள் முழுமை பெறாமல் உள்ளதோடு, ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அரசால் பட்டியல் இடப்பட்டவர்களுக்கும்கூட வீடுகள் ஒதுக்கப்படவில்லை.
இதனால் சோனாங்குப்பம், சிங்காரத்தோப்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பழைய வீடுகளிலேயே வசித்து வருகின்றனர். புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளின் அருகில் உப்பனாறு செல்கிறது. அந்த ஆற்றின் அருகே தடுப்புச் சுவர் அமைக்க வேண்டுமென நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம்.
அண்மையில் பெய்த பலத்த மழையால் ஆற்று வெள்ளம் செல்லங்குப்பம் சுனாமி குடியிருப்பைச் சூழ்ந்தது. அங்கு வசித்து வருபவர்கள் மீண்டும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் சூழலுக்கு உள்ளாகினர். எனவே, முதல் கட்டமாக உப்பனாற்றின் அருகே தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும்.
மேலும், மீனவர்களின் நீண்ட காலக் கோரிக்கையான முகத்துவாரத்தை ஆழப்படுத்துதல், ஏணிக்காரத்தோட்டம்-செல்லங்குப்பம் சுனாமி குடியிருப்புகள் இடையே இணைப்புச் சாலை போன்ற கோரிக்கைகளும் நிலுவையில் உள்ளன. எனவே, அரசு மீனவர்களின் கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...