விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், பெருமாள்பட்டி நாடார் உறவின் முறையில் திங்கள்கிழமை தலைவர் கோஷ்டிக்கும் செயலர் கோஷ்டிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 12 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெருமாள்பட்டி நாடார் உறவின் முறை தலைவராக மா.மாயாண்டி என்பவரும், செயலாளராக ப.வேலவன் என்பவரும் உள்ளார்கள். இவர்கள் இருவரும் தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் திங்கள்கிழமை உறவின் முறை சமுதாய அலுவலகம் அருகே சிலர் ஒன்று கூடி ஊர் கணக்கு பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட தகாறில் தலைவர் கோஷ்டியைச் சேர்ந்த த.முத்துக்குமார் (42) என்பவரை எதிர் தரப்பினர், கட்டைகள் மற்றும் மர நாற்காலியை வைத்து தாக்கியதில் அவர் பலத்த காயம் அடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ப.வேலவன் (37), ஆ.ரமேஷ் (34), ச.முத்துக்குமார் (44), ச.ராமநாதன் (40), அ.நாகராஜன் (50), சி.பன்னீர்செல்வம் (39) ஆகியோரைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள த.முருகேசன், ஆ.முருகேசன், மா.செல்வராஜ் ஆகியோரைத் தேடி வருகிறார்கள்.
செயலாளர் தரப்பில் ஆ.ரமேஷ் (34) என்பவர் மோதலில் தனக்கு காயம் ஏற்பட்டதாய் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மா.மாயாண்டி (92), மா.சௌந்தரபாண்டியன் (58), சீ.செல்வராஜ் (39), கணேஷ்வேல் (29), விஜயகுமார் (28), ராமசாமி (35) ஆகியோரைக் கைது செய்தனர்.