புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

அனைத்து ரயில்களிலும் கூடுதலாக ஏ.சி. மூன்றாம் வகுப்பு பெட்டிகள்!

ரயில்வே துறைக்கு வருமானத்தைப் பெருக்கும் நோக்கில் தமிழகத்தின் முக்கிய விரைவு ரயில்களில் ஏ.சி. மூன்றாம் வகுப்பு பெட்டிகள் கூடுதலாக இணைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :13 மார்ச் 2015, 11:27 pm

ரயில்வே துறைக்கு வருமானத்தைப் பெருக்கும் நோக்கில் தமிழகத்தின் முக்கிய விரைவு ரயில்களில் ஏ.சி. மூன்றாம் வகுப்பு பெட்டிகள் கூடுதலாக இணைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

முதல் கட்டமாக, முக்கிய வழித் தடங்களில் செல்லும் விரைவு ரயில்களிலும், படிப்படியாக பிற விரைவு ரயில்களிலும் கூடுதல் ஏ.சி. மூன்றாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனைத்து முக்கிய ரயில்களிலும் காத்திருப்புப் பட்டியல் தொடர்ந்து அதிகம் இருந்து வரும் நிலையில், 2015-16-ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் புதிய விரைவு ரயில்கள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்து வந்ததது. ஆனால், பட்ஜெட்டில் புதிய ரயில்கள் அறிவிக்கப்படாதது, பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தையே அளித்தது.

இதற்கிடையே ரயில்வே துறை சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், ஏ.சி. மூன்றாம் வகுப்பு பெட்டிக்கு அதிக தேவை இருப்பது தெரியவந்தது. இந்தப் பெட்டிகள் மூலம் ரயில்வே துறைக்கு நல்ல வருமானமும் கிடைப்பதால், முக்கிய விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு ஏ.சி. மூன்றாம் வகுப்பு பெட்டி இணைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில்களில் ஏ.சி. மூன்றாம் வகுப்பு பெட்டி இணைக்கப்படும்போது, 75 சதவீதப் பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதாக ரயில்வே புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் நிரந்தரமாக ஒரு ஏ.சி. மூன்றாம் வகுப்பு பெட்டி இணைக்கப்பட்டது.

இதுபோல், முக்கிய விரைவு ரயில்களிலும் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விரைவு ரயில்களில் எத்தனை பெட்டிகள்?

பொதுவாக விரைவு ரயில்களில் ஒரு ஏ.சி. முதல் வகுப்பு, 2 ஏ.சி. இரண்டாம் வகுப்பு, 4 ஏ.சி. மூன்றாம் வகுப்பு, 12 முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி, 4 பொது வகுப்பு பெட்டியும் இணைக்கப்பட்டிருக்கும். ஒரு விரைவு ரயில்களில் இப்போது குறைந்தபட்சம் 22 பெட்டிகள் உள்ளன. அதிகபட்சமாக 24 பெட்டிகள் இருக்கலாம் என்பது ரயில்வே விதிமுறை.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:

முன்பெல்லாம் ஏ.சி. வகுப்பு பெட்டியில் வசதியானவர்கள் மட்டுமே செல்வர். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. எந்தவித இடையூறுமின்றி, சுகமான பயணத்தையை மேற்கொள்ள பயணிகள் விரும்புகின்றனர். இதனால், ஏ.சி. மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் முன்பதிவு பலமடங்கு அதிகரித்து வருகிறது.

தேவை அதிகரித்திருப்பதைக் கருத்தில் கொண்டு ஏ.சி. மூன்றாம் வகுப்பு பெட்டிகளை கூடுதலாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு வசதி அளிக்கும் என்பதோடு மட்டுமல்லாம், ரயில்வே துறைக்கும் லாபம் கிடைக்கும் என்றார்.

கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்படவுள்ள ரயில்கள்

1. கன்னியாகுமரி விரைவு ரயில்

2. முத்துநகர் விரைவு ரயில் (தூத்துக்குடி)

3. பாண்டியன் விரைவு ரயில் (மதுரை- திண்டுக்கல்)

4. மலைக்கோட்டை விரைவு ரயில் (திருச்சி)

5. மன்னை விரைவு ரயில் (மன்னார்குடி)

6. ராமேஸ்வரம் விரைவு ரயில்

7. தமிழ்நாடு விரைவு ரயில் (தில்லி)

8. கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் (தில்லி)

9. நீலகிரி விரைவு ரயில் (மேட்டுப்பாளையம்)

10. சேரன் விரைவு ரயில் (கோவை)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.