கடலூர் மாவட்டம் கண்ணீர் கடலில் மிதக்கிறது: வைகோ பேட்டி
மழை, வெள்ளத்தால் கடலூர் மாவட்டம் கண்ணீர் கடலில் மிதக்கிறது என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.


மழை, வெள்ளத்தால் கடலூர் மாவட்டம் கண்ணீர் கடலில் மிதக்கிறது என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
சிதம்பரம் அருகே து.மண்டபம் கிராமத்தில் வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கடலூர் மாவட்டத்தில் மழை, வெள்ளத்தில் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வீடுகள் தரையோடு, தரையாக அடித்துச்செல்லப்பட்டு பொருள்களை இழந்து எங்கு வசிப்பது என்று தெரியாமல் மக்கள் கண்ணீர் விட்டு வருகின்றனர். இதுவரை ஏறத்தாழ கடலூர் மாவட்டத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏராளமான ஆடுகள், மாடுகள், கோழிகள் இறந்துள்ளனர். இவற்றுக்கெல்லாம் காரணம் மாவட்ட நிர்வாகமும், அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. ஏரி,குளங்கள் நீர்நிலைகளை தூர்வாரவில்லை. பெரும் மழை வரப்போகிறது என வானிலை மையம் அறிவித்திருந்தும் மழை பெய்தால் கடலூர் மாவட்டம் பாதிக்கும் என தெரிந்தும் அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. வருவதை தடுக்கும் பணியில் அரசு ஈடுபட்டிருக்கலாம் ஈடுபடவில்லை.
வீராணம்ஏரி தூர்வாரப்படவில்லை: வீராணம்ஏரியில் காட்டாமணி செடி, ஆகாயத்தாமரை உள்ளிட்ட செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. அதனை அகற்றி தூர்வாரவில்லை. தூர்வாரியிருந்தால் ஏரியில் ஒன்றரை டன் நீரை சேமித்திருக்கலாம். ஆனால் தற்போது 3-ல் 1பங்கு நீர் தேக்கி வைக்க வழியில்லாமல் போய்விட்டது. ஏரியை தூர்வார ரூ.40 கோடி அரசு நிதிஒதுக்கியது. ஆனால் நிதி இல்லை என அந்த பணி செய்யப்படவில்லை. தண்ணீரை சென்னைக்கு கொண்டு செல்ல வேண்டாம் என சொல்லவில்லை. ஆனால் விவசாயிகள் பாசனத்திற்கு நீர் கேட்டபோது ஏரியிலிருந்து நீரை திறந்து விடாமல் முழுக்கொள்ளளவு நீர் வைத்துக் கொண்டு மழை வந்தவுடன் நீரை திறந்துவிட்டதால் விவசாய பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளப் பெருக்கெடுத்துள்ளன.
தடியடி நடத்திய டிஎஸ்பியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்: சிதம்பரம் அருகே து.மண்டபம் கிராமத்தில் குடிநீர், உணவு கிடைக்காமல் அப்பகுதி மக்கள் ஜனநாயக முறைப்படி அறப்போராட்டமாக சாலைமறியலில் ஈடுபட்ட போது முகாமிட்டுள்ள மந்திரிகள் வந்து பார்த்து ஆறுதல் சொல்லவில்லை. ஆனால் டிஎஸ்பி சுந்தரவடிவேலு தலைமையில் அதிரடிப்படை காவலர்கள் தடியடி நடத்தியுள்ளனர். பெண்கள் அடித்து உதைக்கப்பட்டுள்ளனர். சோற்றுப்பானைகளை அடித்து உதைத்துள்ளனர். அரசு உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ரகு என்ற சிறுவன், மாற்றுத்திறனாளி பாக்கியராஜ் என்பவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். எனவே மனிதாபிமானமற்ற முறையில் பொதுமக்களை தாக்கிய டிஎஸ்பியை தமிழகஅரசு பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
போர்க்கால் அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும்: அரசு உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும், நெல் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், தென்னை, வாழை, கரும்பு, முந்திரி ஆகியவற்றிற்கு ரூ ஒன்றரை லட்சமும், இறந்து போன மாடுகளுக்கு ரூ.50 ஆயிரமும், ஆடுகளுக்கு ரூ.10 ஆயிரமும் அரசு வழங்க வேண்டும். மேலும் வெள்ளத்தில் மண்ணும், மணலும் மேடுற்ற நிலங்களை வேளாண்துறை மூலம் சீர்திருத்தம் செய்து தர வேண்டும். இனிமேலாவது நிரந்தரமாக எந்த அரசாக இருந்தாலும் சரி நீர்நிலை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். பெரியகாட்டுப்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அருந்ததியிர் குடும்பத்தினர் 10 பேர் இறந்துள்ளனர். அங்கு மக்கள் சாதி வேறுபாடின்றி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்களும் மனிதநேயத்துடன் சகோதரர்களாக இணைந்து உதவி செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மேலகாட்டுப்பாளையம், கீழக்காட்டுப்பாளையம், விசூர் உள்ளிட்ட வெள்ள பாதிப்பு பகுதிகளை முழுவதும் மக்கள் நல கூட்டு இயக்கம் சார்பில் வீடு, வீடாக சென்று சுற்றிப்பார்வையிட்டோம். என்ன புாதிப்பு, மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என கூட்டு இயக்கம் சார்பில் குறிப்புகளை எடுக்கப்பட்டு அறிக்கை தயாரித்து வழங்குகிறோம். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் போர்க்கால அடிப்படையில் அரசு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். காலஅவகாசம் தருகின்றோம். மக்கள் நல கூட்டு இயக்கம் சார்பில் கோரிக்கைகளை முன் வைக்கிறோம். நாங்கல் இதில் துளிக்கூட அரசியல் செய்யவில்லை. எனவே அரசின் உரிய நிவாரணம் கிடைக்காவிடில் மக்கள் நல கூட்டு இயக்கம் அறப்போராட்டத்தில் ஈடுபடும் என வைகோ தெரிவித்தார்.
மக்கள் நல கூட்டு இயக்கம் சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கற்பனைச்செல்வம், எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ஆர்.ராமச்சந்திரன், இந்திய கம்யூ கட்சி மாநிலக்குழு உறுப்பினர் கலியமூர்த்தி, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் செந்தில்அதிபன், மாவட்டச் செயலாளர் குணசேகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் உள்ளிட்டோர் கடலூர் மாவட்டத்தில் சிங்காரக்குப்பம், மேலகாட்டுப்பாளையம், கீழக்காட்டுப்பாளையம், விசூர் மற்றும் மருவாய், பின்னலூர், சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு, கந்தகுமாரன், லால்பேட்டை, சர்வராஜன்பேட்டை, வீரநத்தம், பரிவிளாகம், கூடுவெளிச்சாவடி, அண்ணாமலைநகர், கொடிப்பள்ளம், கிள்ளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...