கட்டுமானப் பணியாளர்களுக்கு உதவ நடமாடும் மருத்துவ வாகனங்கள்: விரைவில் தொடக்கம் 

கட்டுமானத் தொழிலாளர்கள் பணியாற்றும் இருப்பிடங்களுக்கு நேரடியாகச் சென்று சுகாதார சேவை வழங்கும் வகையில்
Updated on
1 min read

கட்டுமானத் தொழிலாளர்கள் பணியாற்றும் இருப்பிடங்களுக்கு நேரடியாகச் சென்று சுகாதார சேவை வழங்கும் வகையில் மூன்று நடமாடும் மருத்துவ வாகனங்கள் விரைவில் இயக்கப்பட உள்ளன.
 சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உதவ, முதல் கட்டமாக மூன்று மருத்துவ வாகனங்களை இயக்க தமிழக அரசு,
 ரூ.16.25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மற்ற மாவட்டங்களில் மொத்தம் 50 மருத்துவ வாகனங்கள் மூலம் இந்தத் திட்டத்தை படிப்படியாகச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
 5 லட்சம் தொழிலாளர்கள்: தற்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் வெவ்வேறு இடங்களில் சென்று பணியாற்ற வேண்டி இருப்பதால், கட்டுமானப் பணியிடங்களிலேயே தங்கும் நிலை உள்ளது. இதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு தொழிற்சாலைகள், குடியிருப்பு வளாகங்கள் கட்டுமானப் பணிகளில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் ஈடுபட்டு வருகின்றனர்.
 வேலையின்போது எதிர்பாராத விதமாக விபத்துகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற நேரங்களில் தொழிலாளர்களுக்கு முதலுதவி மற்றும் உடனடி சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்புச் சம்பவங்களும் ஏற்படுகிறது.
 இவற்றை கருத்தில் கொண்டு கட்டுமானப் பணியிடங்களுக்கே சென்று தொழிலாளர்களுக்கு சுகாதாரச் சேவை அளிக்கும் வகையில் கட்டுமான தொழிலாளர் நல நிதி மூலம் நடமாடும் மருத்துவ வாகனங்களைக் கொண்டு மருத்துவ சேவைத் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் கட்டமாகச் செயல்படுத்த ரூ.16.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக மருத்துவ உபகரணங்களுடன் கூடிய நவீன வசதிகளுடன் கூடிய வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக தொழிலாளர்கள் நலவாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
 தயார் நிலையில்... இது குறித்து தொழிலாளர்கள் நலவாரிய அலுவலர் ஒருவர் கூறுகையில், தமிழக கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகத்தில் 25 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
 இவர்கள் பணியாற்றும் இடங்களில் விபத்துகள் ஏற்படும் போது, முதலுதவி சிகிச்சை கிடைக்காமல் அசம்பாவிதமும் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு கட்டுமான தொழிலாளர்கள் பணியாற்றும் இடங்களுக்கே நேரில் சென்று சுகாதாரச் சேவை அளிப்பதற்காக நடமாடும்
 மருத்துவமனைகள் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
 அதன் அடிப்படையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நடமாடும் மருத்துவமனைகள் திட்டம் செயல்படுத்த தயாராக உள்ளது. இதற்காக நவீன மருத்துவ உபகரணங்கள் அடங்கிய வசதியுடன் கூடிய 3 வாகனங்களும் தயார் நிலையில் உள்ளன. இந்த வாகனத்தில் தலா ஒரு மருத்துவர், செவிலியர், மருந்தாளுநர், தொழில்நுட்ப பணியாளர் அடங்கிய மருத்துவக் குழுவினர் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சுகாதாரச் சேவைகளை அளிக்க உள்ளனர் என்றார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com