நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது: ஆட்சியர்
திருநெல்வேலி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டதாக திங்கள்கிழமை ஆட்சியர் மு. கருணாகரன் தெரிவித்தார்.


திருநெல்வேலி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டதாக திங்கள்கிழமை ஆட்சியர் மு. கருணாகரன் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே தாளார்குளம் கிராமத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பலர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். ரியோஜெஷி, ஆபரகாம் ஆகிய 2 சிறுவர்கள் இறந்தனர். அக்கிராமத்தை சேர்ந்த மேலும் பலர் மருத்துவமனையில் காய்ச்சலால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் சுகாதாரத்துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் ஆகியோர் தாளார்குளம் கிராமத்தில் முகாமிட்டு டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியினை தீவிரப்படுத்தினர். இதனிடையே அக்கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் பிரான்சிஸ் மோசஸ் ஞாயிற்றுக்கிழமை அம்மை பாதிப்பு ஏற்பட்டு மூளைக் காய்ச்சல் காரணமாக இறந்தார். திங்கள்கிழமை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த ஆட்சியர் மு. கருணாகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. டெங்கு கொசு உற்பத்தி ஆகாமல் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இம்மாவட்டத்தில் முக்கூடல் அருகேயுள்ள தாளார்குளம், ஆலங்குளம் அருகேயுள்ள மருதப்பபுரம் ஆகிய 2 கிராமங்களிலும், செங்கோட்டை, தேவிபட்டணத்தில் தலா ஒருவர் உள்பட 30 பேர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டது.
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு வார்டு திறக்கப்பட்டு அவர்கள் அங்கு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 22 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது அரசு மருத்துவமனையில் 7 குழந்தைகள் உள்பட 12 பேர் டெங்கு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு் வருகிறது. தாளார்குளத்தில் இறந்த 3 சிறுவர்களில் இருவர் டெங்கு பாதிப்பால் இறந்துள்ளனர். டெங்கு சிறப்பு வார்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் உள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்புள்ள 2 குழந்தைகள் உள்பட 4 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இம்மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் தீவிர டெங்கு தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து கிராமங்களிலும் நிலவேம்பு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் கழிவுநீரை தேங்காமல் கண்காணிக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் குடிநீரை பல தினங்களுக்கு சேமித்து வைக்காமல் தினமும் பயன்படுத்த வேண்டும்.
தாளார்குளம், மருதப்பபுரம் ஆகிய கிராமங்களில் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்கள் தலைமையில் குழுவினர் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை, அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து உயிரிழப்பு ஏற்படாத வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர். அப்போது அரசு மருத்துவமனை டீன் கே. சித்திஅத்தியமுனவரா உடனிருந்தார்.
டெங்கு சிறப்பு வார்டில் 13 பேருக்கு தீவிர சிகிச்சை
பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டில் திங்கள்கிழமை தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையை சேர்ந்த விஷ்ணு (6), கடையநல்லூர் சொக்கம்பட்டியை சேர்ந்த திலகபாரதி (11), ஆலங்குளம் அருகே மருதப்புரத்தை சேர்ந்த பிரேம்குமார் (9), மகாராணி (11), வீரகேளம்புதூரை சேர்ந்த காயத்ரி (8), முக்கூடல் அருகே தாளார் குளம் கிராமத்தை சேர்ந்த மரியபவுசி (10), லூர்துஅனிஷ் (6), பிரான்சிஸ் இனியா (7), பிரான்சிஸ் அபிநயா (6) மற்றும் தாளாளர் குளத்தை சேர்ந்த மேலும் 4 பேர் உள்பட 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் தாளார்குளத்தை சேர்ந்த மரியபவுசி, பிரான்சிஸ்அபிநயா உள்பட 4 பேர் டெங்கு காய்ச்சல் இருப்பதாக உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...