இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நெல்லையில் தனியார் ஆலையை கண்டித்து முற்றுகைப் போராட்டம்: போலீஸ் தடியடி, 10 பேர் காயம்

கங்கைகொண்டானில் செவ்வாய்க்கிழமை தாமிரவருணி நதியிலிருந்து தண்ணீர் உறிஞ்சுவதை கண்டித்து தனியார் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் வாழ்வுரிமைக் கட்சியினர் 115 பேர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :27 அக்டோபர் 2015, 12:10 pm

ஷேக் அப்துல்காதர்

கங்கைகொண்டானில் செவ்வாய்க்கிழமை தாமிரவருணி நதியிலிருந்து தண்ணீர் உறிஞ்சுவதை கண்டித்து தனியார் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் வாழ்வுரிமைக் கட்சியினர் 115 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் பங்கேற்றோர் மீது போலீஸார் தடியடி நடத்தியதில் 10 பேர் காயமடைந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள தனியார் ஆலைக்கு தாமிரவருணி நதியில் இருந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞசுவதால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

மேலும் நதியின் நீர் ஆதாரம் குறைந்து நிலத்தடி நீர் குறையும் அபாயம் இருப்பதால் தனியார் ஆலைக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழர் வாழ்வுரிமைக் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்த  போராட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் தி. வேல்முருகன் தலைமையில் பெண்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் பங்கேற்ற கட்சியினரை போலீஸார் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். அப்போது போராட்டக்குழுவினருக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கட்சியினர் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது அவர்களை போலீஸார் தடியடி நடத்தி விரட்டினராம். இதில் கட்சியின் பொதுச்செயலர் முன்னாள் எம்.எல்.ஏ. வை. காவேரி, கட்சியின் தென்மண்டல இளைஞரணி செ. செரோன்குமார், தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலர் மோகன்ராஜ், கட்சியின் திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலர் கருப்பசாமி உள்ளிட்ட 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களை கட்சியின் தலைவர் வேல்முருகன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தடை விதிக்க வேண்டும்:

அப்போது வேல்முருகன் அளித்தப் பேட்டி: தமிழகத்தில் உயிரோட்டமாக பாய்ந்து வரும் தாமிரவருணி நதியினால் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழும் தாமிரவருணி நதியிலிருந்து தனியார் ஆலைக்கு தண்ணீர் வழங்குவதை கண்டித்து

கட்சி சார்பில் கங்கைகொண்டானில் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் பங்கேற்ற கட்சியினர் மீது போலீஸார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தியிருப்பது கண்டனத்துக்குரியது. காவல்துறையினர் தனியார் ஆலைக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இதனை கண்டித்து புதன்கிழமை சென்னையில் டி.ஜி.பி. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

மக்களை பாதிக்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் தனியார் ஆலையை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். வற்றாத ஜீவநதியாக திகழும் தாமிரவருணி நதியை பாதுகாக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.