தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிமே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

படிப்பை பாதியில் கைவிடும் மீட்கப்படும் சிறார் தொழிலாளர்கள்: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணம்

பர்கூர் மேற்கு மலைப் பகுதி கிராமங்களில் மேல்நிலைப் பள்ளி இல்லாததால், மீட்கப்படும் சிறார் தொழிலாளர்கள் மீண்டும் படிப்பைக் கைவிட்டு,

Updated On :14 செப்டம்பர் 2015, 7:01 pm

பர்கூர் மேற்கு மலைப் பகுதி கிராமங்களில் மேல்நிலைப் பள்ளி இல்லாததால், மீட்கப்படும் சிறார் தொழிலாளர்கள் மீண்டும் படிப்பைக் கைவிட்டு, வேலைக்குச் செல்லும் நிலை உருவாகி வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
 இந்த நிலை காரணமாக, குழந்தைத் திருமணங்களும் அதிகரித்து வருவதாகவும் தன்னார்வ அமைப்பினர் புகார் தெரிவிக்கின்றனர்.
 குடும்பச் சூழல் காரணமாக பள்ளி செல்லாமல் வேலைக்குச் செல்லும் 14 வயதுக்கு உள்பட்ட சிறார்களை மீட்டு, பள்ளிக்கு அனுப்பி அவர்களின் குடும்ப நிலையை உயர்த்தும் சிறந்த பணியை மத்திய குழந்தைத் தொழிலாளர் திட்ட அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
 அவ்வாறு மீட்கப்படும் சிறார் தொழிலாளர்கள், சிறப்புப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் பயிற்சிக்குப் பின்னர், முறையான பள்ளிகளில் சேர்க்கப்படுவர்.
 இந்த சிறார் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பை பொதுவாக தன்னார்வ அமைப்புகளிடமே அரசு ஒப்படைக்கிறது.
 இதுபோல் பர்கூர் மேற்கு மலைப் பகுதியில் உள்ள கிராமங்களில் சிறார் தொழிலாளர்களை மீட்டு, அவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளில் சேர்த்து பயிற்சி அளிக்கும் பொறுப்பை சுடர் தன்னார்வ அமைப்பு மேற்கொண்டுள்ளது.
 இந்த பர்கூர் மலைப் பகுதியில் 33 கிராமங்கள் உள்ளன. 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் இங்கு வசிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. கரும்பு வெட்டுவதும், காட்டு வேலையும்தான் இந்த மக்களுக்குத் தொழில். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தக் கிராமங்களைச் சேர்ந்த சிறார்களுக்கும் கல்வி எட்டவில்லை. அவர்களும் பெற்றோருடன் சிறு வயதிலேயே வேலைக்குச் சென்று விடுவர்.
 இப்போது மத்திய குழந்தைத் தொழிலாளர் மீட்புத் திட்டத்தின் மூலம் இந்தச் சிறார்களும் கடந்த சில ஆண்டுகளாகப் பள்ளி சென்று வருகின்றனர்.
 தொடர் கோரிக்கைகள், முயற்சிகள் மூலம் இந்த மலைக் கிராமத்தில் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி எனப் படிப்படியாக உயர்ந்து இன்று உயர்நிலைப் பள்ளி வரை இயங்கிவருகிறது. அதிலும் சில கிராமங்களில் இன்றும் நடுநிலைப் பள்ளிகள் மட்டுமே உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 ஆனால், இந்த 33 மலைக் கிராமங்களிலும் ஒரு மேல்நிலைப் பள்ளிகூட இல்லை. இதனால் மாணவர்கள் படிப்பைத் தொடர முடியாமல், பாதியில் நிற்கின்றனர் என்கின்றனர் தன்னார்வ அமைப்பினர்.
 இதுகுறித்து சிறார் தொழிலாளர் சிறப்புப் பள்ளியை நிர்வகித்து வரும் சுடர் அமைப்பின் இயக்குநர் நடராஜன் கூறியது:
 மீட்கப்படும் சிறார் தொழிலாளர்களில் பலர் படிப்பில் ஆர்வத்துடன் காணப்படுவதோடு, சிறந்தும் விளங்குகின்றனர்.
 ஆனால், இந்த மலைக் கிராமங்களில் ஒரு மேல்நிலைப் பள்ளிகூட இல்லை. அதோடு, ஒரு கிலோ மீட்டருக்கு ஓர் ஆரம்பப் பள்ளி இருக்க வேண்டும் என்கிறது கட்டாய கல்விச் சட்டம். ஆனால், இந்த மலைக் கிராமங்களில் 8 கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளி என்ற நிலைதான் உள்ளது.
 பிளஸ்-1, பிளஸ்-2 படிக்க வேண்டும், கல்லூரியில் சேர வேண்டும் என்றால் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்தியூர் அல்லது ஒசூருக்குத்தான் இந்த மாணவர்கள் செல்ல வேண்டும்.
 அவ்வாறு சென்று வருவதற்குப் பேருந்து வசதிகள் கிடையாது. தனியார் வேன்கள் மூலம்தான் பயணிக்க வேண்டும். ஒரு முறை மலையிலிருந்து கீழே இறங்கி ஏற சிறார்களுக்கு ரூ. 40, பெரியவர்களுக்கு ரூ. 100 என இந்த வேன்களில் கட்டணம் வசூலிக்கப்படும்.
 இந்த நிலை காரணமாக, மீட்கப்படும் சிறார் தொழிலாளர்கள் 8-ஆம் வகுப்பு அல்லது 10-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு மீண்டும் வேலைக்குச் செல்கின்றனர்.
 மாணவிகளை 15 வயதிலேயே அவர்களுடைய பெற்றோர் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். வெளிப்படையாகவே இந்த குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன.
 இந்த நிலை மாற, இந்த மலைப் பகுதியில் மேல்நிலைப் பள்ளியை அரசு கொண்டுவர வேண்டும் என்றார்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.