இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நெல்லை அரசு போக்குவரத்து கழக  அலுவலகம் முற்றுகை: கட்டடத்தில் ஏறி தொழிலாளர் தற்கொலை மிரட்டல்

பாளையங்கோட்டையில் புதன்கிழமை போக்குவரத்துக் கழக மைய அலுவலகத்தை ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் திடீரென முற்றுகையிட்டனர்.

News image
Updated On :23 செப்டம்பர் 2015, 12:29 pm

ஷேக் அப்துல்காதர்

பாளையங்கோட்டையில் புதன்கிழமை போக்குவரத்துக் கழக மைய அலுவலகத்தை ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் திடீரென முற்றுகையிட்டனர். பணப்பலன்களை வழங்காத நிர்வாகத்தை கண்டித்து அலுவலகக் கட்டடத்தில் ஏறி தொழிலாளி ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் போக்குவரத்துக் கழக மைய அலுவலகத்தில் புதன்கிழமை தமிழக அரசு போக்குவரத்துக் கழகத் தலைவர் பிரபாகர்ராவ் தலைமையில் தமிழகத்தில் உள்ள 8 கோட்ட மேலாண் இயக்குநர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாண் இயக்குநர்கள் பாளையங்கோட்டை வந்தனர். தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் பி. சிவனாண்டி மற்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் வருகை தந்தனர்.

போக்குவரத்துக் கழக தலைவர் வருவதை அறிந்த ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் 200 க்கும் மேற்பட்டோர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் மைய அலுவலகத்தில் திரண்டனர்.
திருநெல்வேலி கோட்டத்தில் 2012 இல் டிசம்பர் மாதத்திற்கு பிறகு பணியிலிருந்து ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு நிர்வாகம் வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, பிராவிடன்ட் பண்ட் உள்ளிட்ட பணப்பலன்களை 3 ஆண்டுகளாக வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.

தங்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியப் பணப்பலன்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழகத் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க திரண்ட ஓய்வுபெற்ற தொழிலாளர்களை அலுவலக வளாகத்திற்குள் செல்ல விடமால் போலீஸார் தடுத்தனர்.

இதனால் தொழிலாளர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸாரின் நடவடிக்கையை கண்டித்து தொழிற்சங்கத்தினர் மைய அலுவலகம் வாசல் முன்பு திரண்டு கோஷம் எழுப்பினர்.
அப்போது அங்கு வந்த ஊழல் தடுப்புப்பிரிவுத் தலைவர் சிவனாண்டி, போக்குவரத்துத் தொழிலாளர்களை வெளியேற்றுமாறு போலீஸாரிடம் தெரிவித்தார். இதற்கு அவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஓய்வுபெற்றப் பணப்பலன்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட பாபநாசம் பணிமனையை சேர்ந்த நடத்துனர் காந்தையா என்பவர், மைய அலுவலக 2 மாடிக் கட்டடத்தில் ஏறி தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்காததை கண்டித்து தற்கொலை செய்யப்போவதாக தெரிவித்தார்.

போலீஸார் விரைந்து சென்று காந்தையாவை கட்டடத்தின் மாடி மீது இருந்து கீழே தூக்கி வந்தனர். கடும் வெப்பம் நிலவியதால் காந்தையா மயக்கமடைந்தார். இதனால் பரபரப்பு நிலவியது. ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் கோரிக்கையை செவி சாய்க்காத போக்குவரத்துக் கழக அதிகாரிகளை கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொமுச பொதுச்செயலர் அ. தர்மர், அமைப்பு செயலர் மா. மைக்கேல், சிஐடியூ செயலர் எஸ். பெருமாள், ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்க நிர்வாகி முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் ரத்து: தொழிலாளர்களின் போராட்டத்தால் பாளையங்கோட்டை மைய அலுவலகத்தில் போக்குவரத்துக் கழகத் தலைவர் பிரபாகரராவ் தலைமையில் நடைபெற இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. தலைவர் பிரபாகரராவ், மைய அலுவலகத்திற்கு வராமல் மதுரைக்கு சென்று விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அலுவலகத்தின் மற்றொரு வாசல் வழியாக வெளியேறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.