

ஊராட்சி மன்றத் தலைவராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, ஊராட்சி ஒன்றியத் தலைவர், சட்டப்பேரவை உறுப்பினர், தமிழக அமைச்சர் என நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர் திமுகவின் தீர்மானக் குழுத் தலைவரான பொன்.முத்துராமலிங்கம் (77).
தமிழகத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய தேர்தலில் ஒன்றான திண்டுக்கல் மக்களவை இடைத் தேர்தலில் திமுக சார்பில் களம் இறக்கப்பட்டவர். அதிமுக தொடங்கிய சில மாதங்களிலேயே 1973-இல் இந்தத் தேர்தல் நடைபெற்றது. அதன்பிறகு 1977, 1980 பேரவைத் தேர்தல்களில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 1980-இல் இந்தத் தொகுதியில் எம்ஜிஆரை எதிர்த்துப் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மூன்றாவது முறையாக 1984-இல் இந்தத் தொகுதியில் களம் இறங்கிய அவர் வெற்றி பெற்றார். 1989 தேர்தலிலும் தொகுதியைத் தக்கவத்துக் கொண்டார். 1999 மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியிலும், 2014-இல் தேனி தொகுதியிலும் போட்டியிட்டுள்ளார்.
முந்தைய தேர்தல் கால அனுபவங்கள் குறித்து அவர் கூறியதாவது:
நான் சந்தித்த முதல் தேர்தலுக்கும் இப்போதைய அரசியல் சூழலுக்கும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அரசியல் அமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு முழுமையான அதிகாரத்தை வழங்காத அன்றைய காலத்தில், மாநில சுயாட்சி கோரிக்கை அழுத்தமாக வலியுறுத்தப்பட்ட காலம் அது. மொழிக் கொள்கை, மாநில சுயாட்சி, சமூக சீர்திருத்தங்கள், சமதர்ம அரசு என பல்வேறு கொள்கைகளை முன்வைத்தே மக்களைச் சந்தித்தோம். காங்கிரஸ் கட்சி மக்களிடம் இருந்து சற்று விலகி இருந்த காலகட்டத்தில் அந்த இடைவெளியை திமுக நிரப்பிக் கொண்டது.
1972-இல் அதிமுகவை எம்ஜிஆர் உருவாக்கியபோது, அடுத்த 6 மாதங்களில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வந்தது. திமுக சார்பில் நான் போட்டியிட்டேன். அதிமுகவில் மாயத் தேவரை எம்ஜிஆர் நிறுத்தினார். பரபரப்பாகப் பேசப்பட்ட அந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. அதன்பிறகு, 1980-இல் மதுரை மேற்கு தொகுதியில் எம்ஜிஆர் போட்டியிட்ட போது, அவரை எதிர்த்து களமிறங்க திமுக தலைவர் கருணாநிதி எனக்கு வாய்ப்பு அளித்தார்.
திண்டுக்கல் இடைத் தேர்தல், மதுரை மேற்கு பேரவைத் தேர்தலின் போது திமுகவை விமர்சித்த எம்.ஜி.ஆர், வேட்பாளரான என்னைப் பற்றி ஒரு வார்த்தைகூட விமர்ச்சித்துப் பேசவில்லை. மக்கள் செல்வாக்கு மிக்க தலைவரை எதிர்த்துப் போட்டியிடுகிறோம் என்ற எண்ணம் எல்லாம் ஏற்பட்டதில்லை. அன்றைய காலத்தில் தேர்தல் வெற்றி- தோல்வியை இயல்பாகவே எடுத்துக் கொண்டோம்.
திண்டுக்கல் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மதுரையில்தான் நடைபெற்றது. மாயத் தேவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் அவரிடம் நேரில் சென்று கை குலுக்கி வாழ்த்துத் தெரிவித்தேன். அந்த அளவுக்கு அரசியல் நாகரிகம் சிறந்து விளங்கிய காலம் அது.
அதேபோல, மதுரை மேற்கு தொகுதி தேர்தலின் போது தல்லாகுளம் பெருமாள் கோயில் திடலில் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி பெற்றிருந்தேன். ஏதோ காரணத்துக்காக அதே நாளில் குறிப்பிட்ட நேரத்தில் எம்.ஜி.ஆர். பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போதைய துணை மேயராக இருந்த நவநீதகிருஷ்ணனை நேரில் அனுப்பிய எம்.ஜி.ஆர், என்னிடம் பேசச் செய்தார். ஒரு கட்சியின் தலைவரே கேட்கும்போது, அதை ஏற்பதுதான் நாகரிகம். அதனால் ஏற்கெனவே அனுமதி பெற்றிருந்த குறிப்பிட்ட நேரத்தை எம்.ஜி.ஆருக்கு விட்டுக் கொடுத்தேன். இவ்விரு தேர்தல்களுமே சரித்திர முக்கியத்துவம் மிகுந்தவை.
பிரபலமான தலைவரை எதிர்த்துப் போட்டியிடக் கூடிய அனைத்து தகுதியும் இருப்பவர் என்று கருதி, திமுக தலைவர் கருணாநிதி எனக்கு எம்ஜிஆரை எதிர்த்துப் போட்டியிட வாய்ப்பு அளித்தார். தேர்தல் பிரசாரத்துக்கு அவர் வந்தபோதும் இதைக் குறிப்பிட்டார்.
அன்றைய காலத்தில் கொள்கை ரீதியிலான அரசியல் இருந்தது. தனிநபர் விமர்சனங்கள் இருந்ததில்லை. தேர்தல் செலவு என்பது போக்குவரத்து, உணவு, சுவர் விளம்பரம், வாக்காளர் அடையாளச் சீட்டு வழங்குவதற்கான செலவு மட்டுமே. சட்டப்பேரவைத் தேர்தலில் 1977-இல் போட்டியிட்ட போது ரூ.50 ஆயிரம் செலவழித்து இருப்பேன். கட்சிக்காரர்கள் தாங்களே முன்வந்து செலவுகளை மேற்கொள்வர். எனக்கு நினைவு தெரிந்த வகையில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்கியது கிடையாது. தேர்தலில் எப்போது பணம் நுழைந்ததோ அன்றைக்கே அரசியல் பாழ்பட்டுப் போய்விட்டது. இன்றைய தேர்தல் பிரசாரம் தலைகீழாக மாறிவிட்டது.
அந்தக் காலத்தில் அரசியல், சமூக, பொருளாதார மாற்றத்தை அடிப்படையாக வைத்து தேர்தல்கள் இருந்தன. இப்போது தேர்தல் என்பது, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போட்டியாக மடை மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு அரசியல் கட்சிகள் பிரதான காரணமாக இருந்தாலும், மக்களின் மனமாற்றம், ஊடகங்கள் தங்களது பொறுப்புகளில் இருந்து பின்வாங்கியது ஆகியனவும் முக்கியக் காரணம் என்றார் அவர்.
-சிவ.மணிகண்டன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.