நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் சிறப்புக்குழு ஆய்வு!
திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை இந்திய மருத்துவத்திற்கான தமிழக சிறப்புக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.


திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை இந்திய மருத்துவத்திற்கான தமிழக சிறப்புக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்தில் சென்னை, திருநெல்வேலி, கோட்டாறு ஆகிய இடங்களில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் 2016-17 ஆம் கல்வி ஆண்டுக்கான இளங்கலை சித்த மருத்துவம் முதலாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் ஜூலை மாதம் விநியோகம் செய்யப்பட்டது.
நிகழாண்டு சித்த மருத்துவம் பயில மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு 800 மாணவர்கள் விண்ணப்பம் அளித்துள்ளனர். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதனிடையே முதலாண்டு சேர்க்கைக்கு முன்பாக கல்லூரியில் பணி செய்யும் பேராசிரியர்கள், வகுப்பறை, ஆய்வுக் கூடம், பரிசோதனை மையம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து இந்திய மருத்துவத்துக்கான குழு ஆய்வு மேற்கொள்வதுண்டு.
இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் சித்த மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்நிலையில் புதன்கிழமை திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் முன்னாள் அரசு கூடுதல் செயலர் (சுகாதாரப் பணிகள்) ராஜசேகர் தலைமையில் மருத்துவர்கள் செந்தில்குமரன், மணிமேகலை, யூஜிவனம் ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
மருத்துவமனைக்கு சிகிச்சை பெறும் வெளிநோயாளிகள் எண்ணிக்கை, சிறப்பு மருத்துவ பட்டப்படிப்பு வகுப்பறை, வகுப்பறைக் கட்டடங்கள், விடுதிகள் போன்ற கல்லூரியின் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். முன்னதாக கல்லூரி முதல்வர் விக்டோரியா, துணைமுதல்வர் திருத்தனி, துறைத் தலைவர்கள், பேராசிரியர்களிடம் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, முன்னாள் கூடுதல் செயலர் கூறியது: சித்த மருத்துவத்துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ளேன். அதனடிப்படையில் என் தலைமையில் சிறப்பு மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், மாணவர்களுக்கு தேவையான வசதிகள் குறித்தும் விரிவான ஆய்வறிக்கை அரசுக்கு அளிக்கப்படும் என்றார் அவர்.
மாணவர்கள் கோரிக்கை: இக்கல்லூரியில் தேவையான வசதிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வருகை தரும் குழுவினரிடம் அளித்து வருகிறோம். எனினும் உட்கட்டமைப்பினை மேம்படுத்த தேவையான நிதி ஒதுக்கீடு செய்து மேற்கொள்ளப் படவில்லை.
கல்லூரியில் 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு எக்ஸ்ரே வசதி, நுண்ணுயிரியில் ஆய்வகம், நோய் நாடல் ஆய்வகம், விலங்குகள், பசுமை ஆய்வுக் கூடம், மாணவர், மாணவியர் விடுதிகளுக்கு புதிய கட்டடம், குடிநீர், கழிவறை போன்ற வசதிகள் மிகவும் அவசியம்.
விடுதிகளில் போதிய வசதியில்லாததால் மாணவர்கள் வெளியே தங்க வேண்டிய சூழல் உள்ளது. ஆகவே அரசு மாணவர்களின் சித்த மருத்துவக் கல்வியை கருத்தில் கொண்டு உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என சித்த மருத்துவ மாணவர்கள் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...