டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

எம்.பி.ஏ. இரண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் பேராசிரியராக பணியாற்றி வரும் 48 பேர்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கூடுதலாக இருக்கும் பேராசிரியர்கள் அரசு கல்லூரிகளுக்கு ஏற்கெனவே மாற்றப்பட்டு வரும் நிலையில்,

Updated On :28 ஆகஸ்ட் 2016, 6:30 pm


அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கூடுதலாக இருக்கும் பேராசிரியர்கள் அரசு கல்லூரிகளுக்கு ஏற்கெனவே மாற்றப்பட்டு வரும் நிலையில், அங்கு எம்.பி.ஏ. இரண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் பேராசிரியர் பணியில் இருந்து வரும் 48 பேரை என்ன செய்வதென்று தெரியாமல் அதிகாரிகள் திணறி வருவது இப்போது தெரியவந்திருக்கிறது.

பெரும் முறைகேட்டில் சிக்கிய சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு, பல்வேறு சீர்திருத்தங்கள் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கடந்த மார்ச் மாதம், அந்தப் பல்கலைக்கழகத்தில் கூடுதலாக இருந்த 370 உதவிப் பேராசிரியர்களை மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

அவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் பலர், குறிப்பாக அரசுக் கல்லூரிகளில் பி.பி.ஏ. துறைக்கு மாற்றப்பட்டவர்கள் வெறும் எம்.பி.ஏ. என்ற முதுநிலை பட்டப் படிப்பை மட்டுமே முடித்தவர்கள் என்பதும், பேராசிரியர் தகுதிக்கான "செட்' அல்லது "நெட்' தேர்வு தகுதி, பிஎச்.டி தகுதி பெறவில்லை என்பதும், முந்தைய தகுதியான எம்.ஃபில். படிப்பைக் கூட முடிக்காதவர்கள் என்பதும் தெரியவந்தது. ஆனால், கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தின் அறிவுறுத்தல் காரணமாக, வேறு வழியின்றி அவர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர்.

இப்போது, அந்தப் பல்கலைக்கழகத்தில் கூடுதலாக இருக்கும் மேலும் 300 பேரை அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதற்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

எம்.பி.ஏ. இரண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் 48 பேர்: இந்த நிலையில், பல்கலைக்கழக்தின் எம்.பி.ஏ. துறையில் பணியாற்றி வருபவர்களில் 48 பேர் எம்.பி.ஏ. இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்திருப்பது தெரியவந்திருக்கிறது.அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) வழிகாட்டுதலின்படி, ஒரு கல்லூரியில் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்படுபவர் முதுநிலை பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வழிகாட்டுதலின்படி, முதுநிலை பட்டப் படிப்பில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் "செட்' அல்லது "நெட்' (பேராசிரியர் தகுதி தேர்வு) தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும் அல்லது பிஎச்.டி. (ஆராய்ச்சிப் பட்டம்) பெற்றிருக்க வேண்டும். முந்தைய (2009-க்கு முன்பு) நியமனம் என்றால் குறைந்தபட்சம் எம்.ஃபில். பட்டத் தகுதி இருக்க வேண்டும். எனவே, பேராசிரியர் பணிக்குத் தகுதியில்லாத இந்த 48 பேரை அரசுக் கல்லூரிகளுக்கு மாற்றுவதா அல்லது வேறு துறைகளுக்கு மாற்றுவதா என்பது குறித்து பல்கலைக்கழக அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருவதாக அந்தப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்ற பொதுச் செயயலாளர் சிவராமன் கூறியது:

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து கூடுதல் பேராசிரியர்கள் அரசுக் கல்லூரிகளுக்கு மாற்றப்படுவதால், கல்வித் தரம் பாதிக்கப்படுவதோடு, இங்கு பல ஆண்டுகளாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுûராளர்கள் பணி வாய்ப்பை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.

எனவே, பிற பல்கலைக்கழகங்களுக்கோ அல்லது அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கோ அவர்களை மாற்ற வேண்டும். அதுவும், கல்வித் தரம் பாதிக்காத வகையில் உரிய கல்வித் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பை அரசு அளிக்க வேண்டும் என்றார்.


அரசு பொறியியல் கல்லூரிகளில் நியமிக்கஅனுப்பப்பட்டிருக்கும் 270 பேர் பட்டியல்

அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் துறைகளில் கூடுதலாக இருக்கும் பேராசிரியர்களை அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு இப்போது எடுத்து வருகிறது.

இதற்காக 270 பேர் கொண்ட பட்டியலைத் தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறியது: கூடுதல் பேராசிரியர்களை அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு மாற்றுவது தொடர்பான தகவல் குறிப்பு தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு அண்மையில் அனுப்பப்பட்டது.

அப்போது, வெறும் பி.இ. மட்டும் முடித்துவிட்டு பல்கலைக்கழக பொறியியல் துறைகளில் உதவிப் பேராசிரியர்களாகப் பணியாற்றி வருபவர்களை அரசுக் கல்லூரிக்கு மாற்ற முடியாது எனத் தெரிவித்துவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, எம்.இ. (முதுநிலை பொறியில் பட்டம்) முடித்த 270 பேரின் பட்டியல் இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் எம்.இ. இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

இந்தப் பட்டியலை பரிசீலித்து அவர்களில் எத்தனை பேரை அரசு கல்லூரிகளில நியமித்துக்கொள்ள முடியும் என்பதை இயக்குநர் அலுவலகம் முடிவு செய்யும் என்றார்.

இதற்கிடையே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து தகுதி குறைந்த நபர்களை அரசுக் கல்லூரி பேராசிரியர் பணிக்கு மாற்றுவது கல்வித் தரத்தைப் பாதிக்கும் என்று பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.