20 ஆண்டுகளாக கிடப்பில் பள்ளி நலக் கல்வி முறை

தமிழக அரசின் ஒப்புதலோடு உருவாக்கப்பட்டு, 20 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ள பள்ளி நலக் கல்வி முறை திட்டம் வரும் கல்வியாண்டில் இருந்தாவது செயல்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
Updated on
2 min read

தமிழக அரசின் ஒப்புதலோடு உருவாக்கப்பட்டு, 20 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ள பள்ளி நலக் கல்வி முறை திட்டம் வரும் கல்வியாண்டில் இருந்தாவது செயல்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
தமிழக மாணவர்கள் நல்லறிவும், நன்னடத்தையும், வாழ்வுத்திறனும் படிக்கும் காலத்திலேயே பெற வேண்டுமென்ற நோக்கில் பள்ளி முழுக் கல்வித் திட்டம் என்ற ஒரு பாடத் திட்டம் 1996-ஆம் ஆண்டு தமிழிலும், ஆங்கிலத்திலும் தயாரிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், குழந்தைகள் தீ விபத்தில் தப்பிப்பது முதல் வாழ்வில் சமாளிக்க வேண்டிய பிரச்னைகள் அனைத்தும் பாடமாக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையும், ஆஸ்திரேலியாவின் டாக்டர் காலின் எல். யர்ஸாமும் இணைந்து இந்தப் பாடத் திட்டத்தைத் தயாரித்தனர். தமிழ்நாடு பாட நூல் கழகம் சார்பில் கவிஞர் மணமேடு குருநாதனை பதிப்பாசிரியராகக் கொண்டு இந்தப் பாடப் புத்தகம் வெளியிடப்பட்டது.
தமிழகப் பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வகுப்பு வரையில் மாணவர்களுக்குப் போதிக்க வேண்டிய பாடங்கள், வகுப்பு வாரியாக பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகுப்பிலும் படிக்கும் மாணவர்களின் அறிவுத்திறன், வயதுக்கேற்ப ஒவ்வொரு பாடமும் அமைக்கப்பட்டுள்ளன.
சமுதாய உறவுகள், குழந்தைகளுக்கான உரிமைகள், இலக்கு, பள்ளிச்சூழல், மனிதனின் முழு உடலியல் நலவாழ்வு, பாதுகாப்பு நலவாழ்வு, சுற்றுச்சூழல் நலவாழ்வு, சத்துணவு, போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், நுகர்வோர் நலவாழ்வு, கற்றல் முறை, பாடத் திட்டம், வகுப்பறை, மேலாண்மை, வகுப்பறையில் குழுப் பணிகள், கணித்தலும் மதிப்பிடலும், சமுதாயத்தை சென்றடையும் திட்டம், பாடல்களின் பட்டியல் போன்றவை முழுமையான விவரங்களுடன் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.
இந்தப் புத்தகம் மாணவர்களுக்கு ஒரு பொக்கிஷம் என்று கூறும் அளவுக்கு, முதல் வகுப்பில் இருந்து இதன்மூலம் போதனை பெற்று பிளஸ் 2 முடித்து வெளியேறும் போது அந்த மாணவர் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளில் இருந்து மீள முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது.
எனவேதான், இந்த முழு நலக் கல்வித் திட்டம் என்ற 211 பக்க புத்தகத்தை தமிழக அரசு அங்கீகரித்தது. ஒவ்வொரு பள்ளியிலும் படிக்கும் மாணவர்களுக்கு இந்தப் புத்தகத்தின் கருத்துகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 2003-04 ஆம் கல்வியாண்டில் இது ஆசிரியர் கையேடு என்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்காக பள்ளி நலக் கல்வித் திட்ட தயாரிப்புக் குழுவினர் தமிழகம் முழுவதும் பள்ளித் தலைமையாசிரியர்கள் கூட்டங்களை நடத்தி இந்தப் புத்தகம் பற்றியும், அதை ஒவ்வொரு பள்ளியிலும் போதிக்க வேண்டியது பற்றியும் அறிவுரைகளை வழங்கினர். ஒவ்வொரு தலைமையாசிரியரிடமும் பள்ளியில் உள்ள ஆசிரியர் எண்ணிக்கைக்கு ஏற்ப புத்தகம் பிரித்து வழங்கப்பட்டது.
பயிற்சி முடித்து தலைமை ஆசிரியர்கள் பள்ளி திரும்பியதோடு, நலக் கல்வித் திட்டத்தை மறந்துபோயினர். பாடப் புத்தகங்கள் குப்பைத் தொட்டிக்கும், சில புத்தகங்கள் டீ கடைக்கும் பழைய எடைக்கும் போய்விட்டன.
இந்தப் பாடத் திட்டத்தை 22.5.2003 அன்று தமிழக அரசின் அப்போதைய பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பொறுப்பு வகித்த வி.கே. சுப்புராஜ் மூலம் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்துப் பள்ளிகளிலும் உடல் நலன் மற்றும் சுகாதாரம் குறித்தான பாடத்தை அறிமுகப்படுத்த (அரசாணை நிலை எண் 63) ஆணை பிறப்பிக்கப்பட்டது. அந்த அரசாணை இன்று வரை நடைமுறைக்கு வரவில்லை.
பல்வேறு வகையிலான தொடர்புச் சாதனங்கள் மாணவச் சமுதாயத்தை அலைக்கழிக்கும் இன்றையச் சூழலில் இந்தக் கல்வியானது காலத்தின் கட்டாயம். இது முறைப்படுத்தப்பட்டால் அனைத்துப் பாடங்களுமே அவர்களுக்கு எளிதாய் வரும். அடுத்த தலைமுறை சிறப்பாக அமையும் என்கின்றனர் ஆசிரியர்கள்.
இதுகுறித்து இந்தப் புத்தகத்தின் பதிப்பாசிரியரும், ஓய்வு பெற்ற தலைமையாசிரியருமான கவிஞர் மணமேடு குருநாதன் கூறியதாவது:
ஆங்கிலத்தில் முதலில் தயாரிக்கப்பட்ட இந்தப் பாடத் திட்டத்தை 12 ஆண்டுகள் இரவு, பகல் பார்க்காமல் தமிழில் மொழியாக்கம் செய்தேன். இவ்வாறு உருவாக்கப்பட்ட இந்தப் பாடத் திட்டம் 20 ஆண்டுகளாகியும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
மாணவச் சமுதாயத்தை முறைப்படுத்த கல்விக்கூடம் மட்டுமே சரியான களம். கல்வித் துறையை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரும் இந்தக் காலகட்டத்தில், இந்தப் பள்ளி நலக் கல்வித் திட்டத்தை நிச்சயம் செயல்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com