

பாண்டியர், சோழர் காலக் கட்டடக் கலையின் பிரதிபலிப்பாக, மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கத்தின் பிரம்மாண்டமான கட்டடம் திறப்பு விழாவுக்குத் தயாராகி வருகிறது.
மதுரையில் 5-ஆவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற போது, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., உலகத் தமிழச் சங்கம் மதுரையில் அமைக்கப்படும் என அறிவித்தார். உலகத் தமிழ்ச் சங்கத்துக்கு, டாக்டர் தங்கராஜ் சாலையில் 14.15 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு, உலகத் தமிழ்ச் சங்கத்துக்கான செயல்பாடுகள் எதுவும் இல்லாத நிலையில், 2011-இல் அதிமுக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன், முதல்வர் ஜெயலலிதா, உலகத் தமிழ்ச் சங்கம் புதுப்பொலிவுடன் செயல்படும் என அறிவித்தார். உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகம் கட்டுவதற்கு ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டது.
பொதுக் குழு, நிர்வாகக் குழு...: அதிமுக அரசு பொறுப்பேற்றவுடன் உலகத் தமிழ்ச் சங்கத்துக்கு தனி அலுவலர் பணியிடம் உருவாக்கப்பட்டு, சங்கத்தின் நிர்வாகக் குழு, பொதுக் குழு அமைக்கப்பட்டது. தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகச் செயல்படுவார். அவரது தலைமையில், தமிழ் வளர்ச்சித் துறைச் செயலர், இயக்குநர், மதுரை மாவட்ட ஆட்சியர், தனி அலுவலர் உள்பட 16 பேர் பொதுக் குழுவில் இருப்பர். நிர்வாகக் குழுவில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், உலகத் தமிழ்ச் சங்க தனி அலுவலர், தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர், செம்மொழித் தமிழாய்வு நிறுவன இயக்குநர் உள்பட 8 பேர் நிர்வாகக் குழுவில் இருப்பர்.
உலக நாடுகளில் செயல்பட்டு வரும் அனைத்துத் தமிழ்ச் சங்கங்கள், அமைப்புகள், நிறுவனங்கள், தமிழ் ஆராய்ச்சி மேற்கொள்ளும் நிறுவனங்களை ஒருங்கிணைத்து, ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் நோக்கில் உலகத் தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு பற்றி உலக நாடுகளுக்கு பரப்புவது, வெளிநாட்டு அறிஞர்களை வரவழைத்து கருத்துப் பரிமாற்றம், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆராய்ச்சி மையம் அமைப்பது உள்ளிட்டவை சங்கத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.
முதல் பகுதி கட்டுமானப் பணி நிறைவு...: கடந்த 2015, பிப்ரவரியில் கட்டுமானப் பணிகள் தொடங்கிய நிலையில், 87 ஆயிரத்து 300 சதுர அடியில் பெருந்திட்ட வளாகத்தின் முதல் பகுதி கட்டுமானப் பணி நிறைவடைந்துள்ளது. பாண்டியர், சோழர் கால கட்டடக் கலையைப் பிரதிபலிப்பதாக கட்டடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டடத்தை வடிவமைத்துள்ள கட்டுமானக் கலைஞர் ராம.வள்ளியப்பன் கூறியதாவது:
பாண்டியர், சோழர்களின் கட்டடக் கலையை ஆய்வு செய்து, உலகத் தமிழ்ச் சங்கக் கட்டடத்தை வடிவமைத்துள்ளோம். கட்டடத்தின் மேற்பரப்பில் உள்ள கலசம், தூண்கள், முற்றம் போன்றவற்றில் பண்டைய கட்டடக் கலையைக் காண முடியும். மொத்த நிலப்பரப்பில் 30 சதவீதப் பகுதியில் மட்டுமே கட்டடம் அமைகிறது. அதிலும், இப்போது 15 சதவீதம் அளவுக்கே முதல் பகுதி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தரைத் தளம், முதல் தளத்துடன் 87,300 சதுர அடியில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதில் 400 இருக்கைகளுடன் குளிர்சாதன வசதிகொண்ட கலையரங்கம், தலா 150 இருக்ககைகள் கொண்ட இரு கருத்தரங்க அறைகள், நிர்வாக அலுவலகம், நூலகம், வெளிநாட்டு அறிஞர்கள் தங்குவதற்கான 10 அறைகள் இடம் பெற்றுள்ளன.
சிற்பங்களாக சங்கத் தமிழ் காட்சிகள்...: உலகத் தமிழ்ச் சங்கக் கட்டட சுற்றுச்சுவரில் 1,330 திருக்குறள் கல்வெட்டுகளாக நிறுவப்பட்டுள்ளன. கட்டடத்தில் ஆங்காங்கே தமிழ் இலக்கியங்களில் சொல்லப்படும் நிகழ்வுகள், சிலை மற்றும் சிற்பங்களாக வடிவமைக்கப்பட உள்ளன. மேலும், பெருந்திட்ட வளாகத்தில் கட்டுமானம் அல்லாத 70 சதவீத பகுதியில் தெப்பக் குளம், ஐவகை நிலங்களைக் குறிக்கும் ஐந்திணைப் பூங்கா ஆகியன அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.