அடையாள அட்டை :அலைக்கழிக்கப்படும் வீட்டு வேலைப் பணியாளர்கள்

நல வாரிய அடையாள அட்டை பெற வீட்டு வேலைப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். அடையாள அட்டை கிடைக்காத காரணத்தால், அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளைப் பெறுவதில் சிக்கல் எழுந்திருப்பதாகவும் பணியாளர்கள் கவலை தெரிவித்தனர்.
அடையாள அட்டை :அலைக்கழிக்கப்படும் வீட்டு வேலைப் பணியாளர்கள்
Updated on
2 min read

நல வாரிய அடையாள அட்டை பெற வீட்டு வேலைப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். அடையாள அட்டை கிடைக்காத காரணத்தால், அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளைப் பெறுவதில் சிக்கல் எழுந்திருப்பதாகவும் பணியாளர்கள் கவலை தெரிவித்தனர்.

உடல் உழைப்பு அமைப்புசாராத் தொழிலாளர்கள் பயனடையும் வகையில், கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், வீட்டு வேலைப் பணியாளர்கள் நல வாரியம், துப்புரவுப் பணியாளர்கள் நல வாரியம், பனைப் பொருள் நல வாரியம் என பல்வேறு நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் 50 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு பதிவு செய்து நல வாரிய அடையாள அட்டையைப் பெற்றிருப்பவர்களுக்கு மட்டுமே, தமிழக அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அதாவது, இந்த அடையாள அட்டை இருந்தால்தான் விபத்து, திருமணம், பேறுகால உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட அரசின் நிதி உதவிகளைப் பெற முடியும்.

இதுபோல, வீட்டு வேலைப் பணியாளர்களுக்கென தனி நல வாரியம் இயங்கி வருகிறது. இந்த நல வாரியத்தில் இதுவரை சுமார் 4.50 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் மட்டும் சுமார் 1.05 லட்சம் வீட்டு வேலைப் பணியாளர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், பணிபுரியும் இடங்களில் மிகக் குறைந்த ஊதியம் பெறும் இவர்கள், அரசின் நலத் திட்டங்களையே பெரிதும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

அலைக்கழிப்பு: ஆனால், நல வாரிய அடையாள அட்டை கிடைப்பதில் உள்ள இழுபறியால், அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெற முடியாமல் அவதிப்படுவதாகப் பலர் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சென்னை வேளச்சேரியைசே சேர்ந்த உமாமகேஸ்வரி கூறியதாவது:

வீட்டு வேலை செய்வதன் மூலம் கிடைக்கும் குறைந்தபட்ச வருவாயைக் கொண்டு குடும்பம் நடத்தி வருகிறேன். இந்த நிலையில், நல வாரியத்தில் பதிவு செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலர், மருத்துவர் ஆகியோரிடம் சான்றிதழ் பெற்றுச் சென்றேன். ஆனாலும், நல வாரியத்தில் பல்வேறு காரணங்களைக் கூறி அலைக்கழிக்கின்றனர் என்றார்.

இதுகுறித்து பெண்கள் முன்னேற்றம் ஆராய்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ரேணுகா கூறியதாவது:

இந்த அடையாள அட்டையைப் பெற, முன்னர் சங்கங்களின் மூலமாக விண்ணப்பிக்கும் நடைமுறை இருந்தது. விண்ணப்பித்தால் ஒரு வாரத்துக்குள் கிடைத்துவிடும். ஆனால், இப்போது தொழிலாளர்களே நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. தேவையான ஆவணங்களுடன் சென்றாலும், ஏதாவது ஒரு குறை கூறி, பெயரைப் பதிவு செய்யாமல் அதிகாரிகள் திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

இதேபோல, நலத் திட்ட உதவிக்கு விண்ணப்பித்தாலும் 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை இழுத்தடிக்கின்றனர். தமிழக அரசு இதுவிஷயத்தில் தலையிட்டு, அமைப்புசாராத் தொழிலாளர்களின் நலன்களைக் காக்க வேண்டும் என்றார் அவர்.

உடல் உழைப்பு, அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கான நல வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தொழிலாளர்கள் நல வாரியம் குறிப்பிடும் சான்றுகளுடன் வந்தால், உறுப்பினராகப் பதிவு செய்து ஒரு வாரத்துக்குள் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. ஒரு சிலர் தவறான முகவரியுடன் விண்ணப்பிக்கின்றனர். அதனால், விசாரணை செய்து அதன் உண்மைத் தன்மையை அறிந்த பிறகுதான் அடையாள அட்டை வழங்க முடியும்.

மேலும், சரியான விவரங்களுடன் விண்ணப்பம் செய்வதற்கு தொழிற்சங்கங்களிடமும், தொழிலாளர்களிடமும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. நலத் திட்ட உதவிக்கு விண்ணப்பித்தோர் பட்டியல் ஏற்கெனவே அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் தேவை

பெண்களே முழுமையாக ஈடுபட்டு வரும் வீட்டு வேலைத் தொழிலுக்கு அங்கீகாரம் மறுக்கப்பட்டு வருகிறது. மேலும், வீட்டு வேலைகளான துணி துவைத்தல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வரும் இவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்படாமலே உள்ளது. எனவே, இந்த வேலை மூலம் கிடைக்கும் குறைந்தபட்ச வருவாயில் குடும்பம் நடத்தி வருகின்றனர்.

கடந்தாண்டு வீட்டு வேலைத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதிய அறிக்கையை அரசு வெளியிட்டது. ஆனால், இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்வதற்கான சட்டத்தை உடனே கொண்டு வர வேண்டும் என அந்தத் தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com