சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரியில் நாளை (ஆகஸ்ட் 2) 8ஆவது ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சி தொடங்குகிறது. 350க்கும் மேற்பட்ட கலாசார, ஆன்மிக அமைப்புகள் இந்தக் கண்காட்சியில் பங்குபெற இருக்கின்றன. நூற்றுக்கணக்கான நிறுவனங்களும், ஊடகங்களும் இதன் புரவலர்களாகக் களம் இறங்கியிருக்கின்றன.
வனம், வன விலங்குகளைப் பாதுகாத்தல், சுற்றுச் சூழலைப் பாதுகாத்தல், ஜீவராசிகளிடம் கருணைகாட்டுவது, தாய் தந்தையர் ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தல், பெண்களைப் போற்றல், தேசப்பற்று ஆகிய ஆறு முக்கிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இக்கண்காட்சி நடைபெறவுள்ளது.
""பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஹிந்து ஆன்மிகம் தொடர்பாகத் தெளிவான புரிதலை ஏற்படுத்தி, ஹிந்து தர்மத்தின் மீதுள்ள தவறான கற்பிதங்களை உடைப்பதுதான் எங்களது பிரதான நோக்கம். ஹிந்து தத்துவம் என்றால் என்ன என்பதை ஆறு அம்சங்கள் மூலமாகச் சொல்கிறோம். இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையான இந்த ஆறு அம்சங்களை ஹிந்து ஆன்மிகத்துடன் இணைத்து கண்காட்சியில் சொல்லவுள்ளோம்'' என்று கண்காட்சியின் நோக்கம் குறித்து விளக்கினார் ஹிந்து ஆன்மிகக் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளரான பத்திரிகையாளர் குருமூர்த்தி.
சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா சென்றிருந்தேன். ஹிந்து ஆன்மிகத்திற்கு மனித நேயத் தன்மை குறைவு என்ற தவறான கருத்து நிலவுவதை அறிந்து வருந்தினேன். ஹிந்து ஆன்மிகத்திற்கு மனிதத் தன்மை இல்லை என்று சொல்வது எவ்வளவு அபத்தம்...? ஹிந்து ஆன்மிகத்தில் உள்ள அம்சங்களை ஒரு கண்காட்சியாகச் செய்வது சமூகக் கடமையெனத் தோன்றியது.
அதன் அடிப்படையில்தான் 2009 ஆம் ஆண்டு இந்தக் கண்காட்சியை முதல்முதலில் நடத்தினோம். ஹிந்து ஆன்மிகத்தில் மனித நேயத் தன்மை குறைவு என்றவர்களுக்கு இதுதான் எங்களின் ஆன்மிகத்தின் மனிதத் தன்மை என முகத்தில் அடித்தாற்போல சொன்னது அந்தக் கண்காட்சி. அதன் 8- ஆவது ஆண்டுத் தொடர்ச்சிதான் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது' என்கிறார் அவர்.
ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சிக்காக உருவாக்கப்பட்ட விவேகானந்தர் ரதங்கள் அரசுப் பள்ளிகளுக்குச் செல்வதற்கு திராவிடர் கழகம் பலத்த கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. "திராவிடர் கழகத்தின் பார்வையே தவறு, ஹிந்து என்ற வார்த்தை மதத்தை மட்டும் குறிப்பிடுவது அல்ல. இதை நான் சொல்லவில்லை இந்தியாவின் உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது. பாரத தேசத்தின் பாரம்பரியம், வாழ்க்கை முறை. பாரத தேசத்தின் பொதுவான அம்சங்களின் தொகுப்பைத்தான் ஹிந்து என்கிறது உச்ச நீதிமன்றம். ஹிந்து என்றால் என்ன என உச்ச நீதிமன்றம் என்ன சொல்லியிருக்கிறதோ அதைத்தான் ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சி தனது தாரக மந்திரமாக ஏற்றுக்கொண்டுள்ளது இதை மதக் கண்ணோட்டத்துடன் பார்ப்பது தவறாகும்' என்கிறார் குருமூர்த்தி.

எஸ்.குருமூர்த்தி
""சுவாமி விவேகானந்தரை வெறும் ஒரு ஹிந்து மதத் துறவியாக உலகம் பார்க்கவில்லை. சமுதாய அவலங்களுக்குத் தீர்வு கண்ட, இந்தியாவின் பெருமைகளை உலகுக்கு எடுத்துரைத்த, அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவில் ஒவ்வொரு இந்தியனின் தன்னம்பிக்கையையும், நாட்டுப்பற்றையும் தட்டி எழுப்பிய வீரத்துறவி அவர். அவர் பாரத தேசத்தின் அடையாளம். அவரைக் கொச்சைப்படுத்துவதோ, விமர்சிப்பதோ இந்தியாவின் பண்பாட்டுக் கூறுகளையும், தேசப்பற்றையும் விமர்சிப்பதாகத்தான் இருக்கும்'' என்பது ஹிந்து ஆன்மிகக் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்களின் ஒருமித்த கருத்து.
இந்திய அரசியல் சட்டம் ஹிந்து என்பதை மதமாக மட்டும் கருதக் கூடாது என்கிறது. ஹிந்து மதத்தை, சீக்கிய மதத்தை, ஜைன மதத்தை, ஆரிய சமாஜத்தைப் பின்பற்றுபவர்கள் எல்லோரையும் ஹிந்துக்கள் என வரையறுத்துள்ளது நமது அரசியல் சட்டம். ஹிந்து மதம் எல்லா மதங்களையும் ஏற்கின்ற வாழ்க்கை முறை. அதை நாம் வெறுமனே மதம் என்பதற்குள் சுருக்கி விடக்கூடாது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட ஹிந்துக்களில் அடங்குவார்கள். சார்வாக மகரிஷி கடவுள் நம்பிக்கை இல்லாதவர். ஆனால், அவர் தன்னை ஹிந்துவாகவே அடையாளப்படுத்தினார். எங்கள் கண்காட்சியின் மீது புழுதிவாரித் தூற்றும் வீரமணி, கருணாநிதி போன்றவர்கள் கூட ஹிந்துக்கள்தான். அவர்களின் வழிகாட்டியான பெரியார் கூட இந்தியாவின் அரசியல் சாசனத்தின் படி ஹிந்துதான் என்கிறார் பத்திரிகையாளர் குருமூர்த்தி.
"மதங்களில் இரண்டு வகையுண்டு. தன்னுடைய மதம் மட்டும்தான் சரியானது. மற்றைய மதங்கள் எல்லாம் தவறானது எனக் கூறுகின்றவை குறுகிய மதங்கள். ஆனால், ஹிந்து தர்மம் மற்ற எல்லா மதங்களையும் ஏற்றுக் கொள்ளும் பரந்த சிந்தனைப் போக்கை உடையது. அதை மதம் என வரையறுப்பது தவறு. அது வாழ்க்கை முறை. எங்களது பண்பாடு கலாசாரம். எங்களின் ரத்தத்தில் ஊறிய எங்களது வாழ்க்கை முறை' என்கிறார் ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சியின் தன்னார்வலர்களில் ஒருவரான சச்சிதானந்தம்.
"இந்தக் கண்காட்சி மூலமாக மதப் பிரசாரம் செய்கிறோம் என்றதொரு அபாண்டமான பொய்யை சிலர் திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அழைக்காமல் எந்தப் பள்ளிக்கும் நாங்கள் செல்வதில்லை. அழைத்த பள்ளிகளுக்கு மட்டுமே செல்கிறோம். நாங்கள் யாரையும் எதற்காகவும் கட்டாயப்படுத்தவில்லை. கட்டாயப்படுத்தி மதத்தைப் பரப்பும் தேவை எங்களுக்கு இல்லை. அதை எங்கள் ஹிந்து தர்மம் ஆதரிக்கவில்லை' என்கிறார் தன்னார்வலர் சுவாமிநாதன்.
"விவேகானந்தர் இந்திய தேசத்திற்கான துறவி. அவர் எல்லோருக்கும் பொதுவானவர். அதனால்தான் அவரை மையப்படுத்தி ரதங்களை உருவாக்கி அவற்றை பள்ளிகளுக்கு அனுப்பினோம். விவேகானந்தரை மதத் துறவி என எல்லைப்படுத்துவது அவருக்கு செய்யும் பெரும் துரோகமாகும். மதப் பிரசாரத்தில் நாங்கள் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால் எங்களைத் தடை செய்யலாம் என்கிறார்கள் இந்தக் கண்காட்சியின் அமைப்பாளர்கள்.
தனியே ஆன்மிகம் மட்டுமல்ல. பல்லாங்குழி, தாயக்கட்டை, நொண்டி போன்ற பாரம்பரியமான 180 விளையாட்டுகளுக்கு புத்துயிர் கொடுப்பதாகவும் இந்த கண்காட்சி அமையவுள்ளது. தொலைந்துபோன இதுபோன்ற விளையாட்டுகளில் மாணவர்களைப் பங்கேற்கவைத்து அவர்களுக்குப் பரிசுகளும் வழங்க உள்ளனர். இதன்மூலம் நமது பாரம்பரிய விளையாட்டுகள் உயிர்ப்பிக்கப்பட்டு அடுத்த தலைமுறையினர் அவற்றை மறந்துவிடாமல் இருக்க உதவும் என்பது கண்காட்சி அமைப்பாளர்களின் நோக்கம்.
"வனவிலங்குகள் இல்லாமல் வனம் இருக்க முடியாது. வனம் இல்லாமல் வனவிலங்குகள் இருக்க முடியாது என்கிறது மகாபாரதம். 1900-களில் 42 சதவீதம் காடுகளும், 40,000 புலிகளும் இந்தியாவில் இருந்தன. ஆனால், இப்போது 19 சதவீதம் காடுகளும், 1800 புலிகளும் மட்டுமே உள்ளன. வன விலங்குகளை வழிபட்ட இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான வன விலங்குகள் கொல்லப்படுகின்றன என்றால், நமது பாரம்பரியத்தில் இருந்து நாம் விலகி வருகிறோம் என்பதுதானே காரணமாகும். இந்தப் பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டியது கடமை இல்லையா...? என்கிறார் தன்னார்வலர் பிரவீண்.
"பெண்களைத் தெய்வங்களாக வணங்கும் நாட்டில்தான், பெண்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நமது பண்பாட்டை விட்டு நாம் விலகிப் போனதுதானே இதற்குக் காரணமாக அமையமுடியும். பெண்களின் பெருமைகளை இந்தக் கண்காட்சி மூலமாகச் சொல்லவுள்ளோம்' என்கிறார்கள் அமைப்பாளர்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியப் பாரம்பரியத்தின் அடிப்படைக் கூறான "மாதா, பிதா, குரு, தெய்வம்' என்கிற கண்கண்ட தெய்வங்களான பெற்றோருக்கும், வழிகாட்டியான ஆசிரியருக்கும் அடுத்த நிலையில்தான் கடவுளே வைத்துப் போற்றப்பட வேண்டும் என்கிற கோட்பாட்டை இளைய தலைமுறைக்கு வலியுறுத்துவதுதான் இந்தக் கண்காட்சியின் நோக்கம். பெற்றோரை மதித்து வணங்காமலும், ஆசிரியர்களுக்கு மரியாதை இல்லாமலும் இளைய தலைமுறையினர் வாழத் தலைப்பட்டிருப்பதை தடுத்தாக வேண்டும் என்கிற உயரிய நோக்கம் இந்தக் கண்காட்சிக்கு இருக்கிறது.
தமிழ்நாட்டில் தொடங்கிய இந்தக் கண்காட்சி இப்போது நாடு தழுவிய பேரியக்கமாக உருவாகியுள்ளது. மும்பை, பெங்களூரு, புணே என இந்தியாவின் பிரதான நகரங்களில் இந்தக் கண்காட்சியை நடத்திவருகிறார்கள். மிக விரைவில் இதை இன்னும் விரிவுபடுத்தும் முனைப்புகளில் உள்ளனர்.
ஹிந்து தர்மத்தை மீட்டெடுக்கும் முனைப்பிலான இந்தக் கண்காட்சி இளம் சந்ததியினருக்கு முக்கியமான வழிகாட்டியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திா் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி!

மானாமதுரை திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் ராஜகண்ணப்பன் பிரசாரம்

அதிமுக வெற்றி பெற்றால் தமிழகம் வளா்ச்சி பெறும்: ஸ்ரீதா் வாண்டையாா்
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


