விவசாயிகளுக்கான குறுந்தகவல் திட்டம் முடக்கம்

வேளாண் பொருள்களின் விலை நிலவரம், அதன் சாகுபடி தொடங்கும் நேரம் போன்ற பயனுள்ள தகவல்களை விவசாயிகளுக்கு, வேளாண் விற்பனைத் துறை மூலமாக அளிக்கப்பட்டு வந்த குறுந்தகவல் வசதி கடந்த 7 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான குறுந்தகவல் திட்டம் முடக்கம்
Updated on
2 min read

வேளாண் பொருள்களின் விலை நிலவரம், அதன் சாகுபடி தொடங்கும் நேரம் போன்ற பயனுள்ள தகவல்களை விவசாயிகளுக்கு, வேளாண் விற்பனைத் துறை மூலமாக அளிக்கப்பட்டு வந்த குறுந்தகவல் வசதி கடந்த 7 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது.

வேளாண் விளைபொருள்கள் உற்பத்தித் திறனில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இருப்பினும் விளைபொருள்களின் விற்பனை விவசாயிகள் எதிர்பார்த்த அளவில் இருப்பதில்லை. சில நேரங்களில் குறிப்பிட்ட காய்கறிகளன் விலை கடுமையாக வீழ்ச்சியடைவதும், சில நேரங்களில் அதிகளவில் உயர்வதுமாக இருக்கிறது.

எந்தச் சந்தையில் எந்த விளைபொருளுக்கு அதிக விலை, அடுத்து எந்தப் பயிரைப் பயிரிடலாம், விளைந்த பொருளை உடனே விற்பனை செய்யலாமா அல்லது கிடங்கில் பாதுகாத்து பிறகு விற்பனை செய்யலாமா என்பன உள்ளிட்ட தகவல்கள் விவசாயிகளைச் சென்றடையும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. இந்த நிலையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மூலமாக, மாநில வேளாண் விற்பனை வாரியத்தின் பங்களிப்புடன் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தையறிவுத் திறன், தகவல் சேகரிப்பு, வழிகாட்டுதல் பிரிவு உருவாக்கப்பட்டது.

தமிழகத்தின் வேளாண் விளைபொருள்களின் தேவைகளை முன்னறிவிப்பு செய்தல், எதிர்கால விலை, மாநில, தேசிய சந்தை அளவில் முக்கிய விளைபொருள்கள் குறித்து ஆராய்தல், விளைபொருள்களின் விலைப்பட்டியல் மற்றும் சந்தை நிலவரம் குறித்து விவசாயிகளுக்கு தெரியப்படுத்துதல், ஆகியவை இவற்றின் பணியாகும்.

வேளாண் துறை மூலம் பெறப்பட்ட விவசாயிகளின் செல்லிடப்பேசி எண்கள் மாவட்டம் வாரியாக சேகரிக்கப்பட்டு, திருச்சியிலுள்ள சந்தை நுண்ணறிவுப் பிரிவு, வணிக மேம்பாட்டு மையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இவ்வாறாக மாநிலம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் விவசாயிகளின் செல்லிடப்பேசி எண்கள் பெறப்பட்டு, அவர்களுக்கு வேளாண் விளைபொருள்களின் சந்தை நிலவரம் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் குறுந்தகவலாக அனுப்பப்பட்டு வந்தன.

கடந்த 2014-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் விளைபொருள்களின் வருகை, விலைகள், பரிவர்த்தனை போன்ற தகவல்களை 277 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கும் தெரிவித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நெல், உளுந்து, காய்கறி வகைகள், எள்ளு, பருப்பு வகைகளின் விலைகள், முக்கியப் பொருள்களின் விற்பனை நடைபெறும் சந்தைப் பகுதியின் தற்போதைய நிலவரம் (உதாரணமாக ஈரோட்டில் மஞ்சள், பெரம்பலூரில் சின்ன வெங்காயம் போன்ற முக்கிய விளைபொருள்களின் விலை நிலவரம்), பயறு வகைகள் பயிரிட வேண்டிய காலம், வானிலை முன்னறிவிப்பு விவரங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு குறுந்தகவலாக அனுப்பப்பட்டன.இந்தத் திட்டம் கடந்த 7 மாதங்களாக முடங்கிக் கிடப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர் விவசாயிகள், வியாபாரிகள். இதுகுறித்து சந்தை நுண்ணறிவுப் பிரிவு, வணிக மேம்பாட்டு மையத்திலுள்ள அலுவலகத்தில் கேட்டால், ஆள்கள் இல்லை, அதனால் குறுந்தகவல் அனுப்பும் பணியை தற்போது தொடர முடியவில்லை என்ற பதில்தான் கிடைக்கிறது.

இங்கு பணியாற்றியவர்கள் வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டால், புதிய பணியாளர்களை நியமித்து, வழக்கம் போல குறுந்தகவல் அனுப்பும் பணியை விவசாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், கடந்த 7 மாதங்களாக இதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்கின்றனர் விவசாயிகள்.

-கு. வைத்திலிங்கம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com