நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் குறைகிறது: கவலையில் விவசாயிகள்!
பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நீர்ப்பிடிப்புப் பகுதியில் இதமான சூழல் நிலவிய போதிலும் அணைகளுக்கு நீர்வரத்து இல்லை.


திருநெல்வேலி: பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நீர்ப்பிடிப்புப் பகுதியில் இதமான சூழல் நிலவிய போதிலும் அணைகளுக்கு நீர்வரத்து இல்லை.
நிகழாண்டு தென்மேற்கு பருவ மழை உரிய நேரத்தில் தொடங்கியது. மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் நீடித்த மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்தது. பிற அணைகளான கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, கொடுமுடியாறு, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்தது.
எனினும் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை நீடிக்கவில்லை. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. புதன்கிழமை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்வரத்து 610.88 கனஅடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்வரத்து 12 கனஅடி, கடனாநதி அணையில் 23 கனஅடியாக குறைந்து காணப்படுகிறது.
நிகழ் கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து வினாடிக்கு 1054.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. ஒரு வாரத்தில் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 16 அடி குறைந்துள்ளது.
நீர்மட்டம் நிலவரம்: புதன்கிழமை நிலவரப்படி பாபநாசம் அணை-84.95 அடி, சேர்வலாறு அணை-93.70 அடி, மணிமுத்தாறு அணை-73.43 அடி, கடனாநதி அணை- 51.70 அடி, ராமநதி அணை-53 அடி, கருப்பாநதி அணை-25.10 அடி, குண்டாறு அணை-29.87 அடி, அடவிநயினார் அணை-55.50 அடி, வடக்குப்பச்சையாறு அணை-22.70 அடி, நம்பியாறு அணை-12.59 அடி, கொடுமுடியாறு அணை-24 அடியாகவும் இருந்தது.
விவசாயிகள் கவலை: தாமிரவருணி பாசனத்தில் கார் பருவ சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது. பாசனத்துக்கு தொடர்ந்து செப்டம்பர் மாதம் இறுதி வரை தண்ணீர் வழங்க வேண்டிய நிலையில் பிரதான அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருவது கவலை அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு அணைகளில் மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார், வடக்குப் பச்சையாறு அணைகள் பாசனம் பெறும் நிலங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இதமான சூழல் நிலவி வந்த போதிலும் அணைகளுக்கு நீர்வரத்து பெரிய அளவில் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...