விடுதலைப் போராட்ட வரலாற்றிலும், திருநெல்வேலி வரலாற்றிலும் முக்கிய இடம் பிடித்த "திருநெல்வேலி கலகம்' பிறந்த நாள் (மார்ச் 13), அரசு விழாவாக அங்கீகாரம் கிடைக்கப் பெறாமலேயே ஆண்டுகளைக் கடந்த வண்ணம் உள்ளது.
விடுதலைப் போராட்ட வரலாற்றில் திருநெல்வேலி மாவட்டம் குறிப்பிடும்படியான பங்களிப்பை அளித்துள்ளது. பூலித்தேவன், கட்டபொம்மன், சுந்தரலிங்கம், பாரதியார், வ.உ.சி, வாஞ்சிநாதன் ஆகியோர் வித்திட்ட நாட்டுப்பற்று உணர்வால், ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் கொந்தளிப்பு, எழுச்சி ஏற்பட்டது. 1906-இல் தூத்துக்குடி, கொழும்பு துறைமுகங்களுக்கு இடையே வாடகைக் கப்பல்களை இயக்கும் சுதேசிக் கப்பல் கம்பெனி தொடங்கப்பட்டது. இந்த கம்பெனிக்கு நிதி திரட்ட வ.உ.சி உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தனர். 1908-இல் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் பங்கேற்ற சுதேசி இயக்க பிரசாரக் கூட்டங்கள் திருநெல்வேலி, தூத்துக்குடியில் நடைபெற்றன. அன்னிய நாட்டுப் பொருள்களைப் புறக்கணிக்கும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆங்கிலேயர்களை எதிர்த்து சிறை சென்ற விபின் சந்திரபால் விடுதலை பெற்ற நாளான 1908-ஆம் ஆண்டு, மார்ச் 8-ஆம் தேதியை, சுயராஜ்ய நாளாக விடுதலைப் போராட்ட வீரர்கள் கொண்டாடினர். இதற்காக திருநெல்வேலி, தூத்துக்குடியில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தாமிரவருணி ஆற்றின் தைப்பூச மண்டபத்தில் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா ஆகியோர் எழுச்சி உரையாற்றினர். தூத்துக்குடியில் விபின் சந்திரபால் விடுதலை விழாவைக் கொண்டாடிவிட்டு திருநெல்வேலிக்கு திரும்பிய வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் 1908-ஆம் ஆண்டு, மார்ச் 12-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இதன் எதிரொலியாக திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கலவரம் மூண்டது. நகராட்சி அலுவலகம், அஞ்சல் அலுவலகம், காவல் நிலையம் ஆகியவை தீ வைத்து எரிக்கப்பட்டன. மாணவர்கள் பள்ளிகளைப் புறக்கணித்தனர். 1908-ஆம் ஆண்டு, மார்ச் 13-ஆம் தேதி காலை வீரராகவபுரம் ரயில் நிலையம் அருகேயுள்ள பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. மக்கள் நடமாட்டம், போக்குவரத்து தடைப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் திரண்டு இந்துக் கல்லூரிக்குள் நுழைந்தனர். மாணவர்களை அழைத்துக் கொண்டு தெருக்களில் ஓடினர். கல்லூரி மூடப்பட்டது. கல்லூரி முதல்வர் உள்பட இருவர் தாக்கப்பட்டனர். சி.எம்.எஸ். கல்லூரிக்குள் புகுந்த கூட்டம், உதவிப் பேராசிரியரைத் தாக்கியது. கல்லூரி சேதப்படுத்தப்பட்டது. திருநெல்வேலி நகராட்சி அலுவலக கட்டடச் சுவர் இடிக்கப்பட்டது. அலுவலக ஆவணங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. அருகே இருந்த அஞ்சல் நிலையம் தீக்கிரையானது. நகராட்சி மண்ணெண்ணெய்க் கிடங்கு சேதப்படுத்தப்பட்டது. முன்சீப் நீதிமன்றம், காவல் நிலையம் தாக்கப்பட்டது.
கலவரத்தைக் கட்டுப்படுத்த ஆங்கிலேயர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் கோயில் பூசாரி, முஸ்லிம் இளைஞர் உள்பட 4 பேர் இறந்தனர். இந்த நிகழ்வு குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. சென்னை மாகாண சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது.
நகராட்சிக் கட்டடம் சேதப்படுத்தப்பட்டதால், அப்போதைய திருநெல்வேலி நகராட்சி மன்றத்தில் இந்த எழுச்சியைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டதாக 53 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை விரைவாக மேற்கொள்ளப்பட்டு, 37 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பொருள் சேதங்களுக்கு தண்டத் தீர்வை வசூலிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்துக்கு "திருநெல்வேலி கலகம்' எனப் பெயர் சூட்டப்பட்டது. இந்த வழக்கில் வ.உ.சி.க்கு 40 ஆண்டுகளும், சுப்பிரமணிய சிவாவுக்கு 10 ஆண்டுகளும் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
வாய்ப்பூட்டு சட்டம் அமலில் இருந்த போது தென் தமிழகத்தில் நடைபெற்ற இந்த எழுச்சியானது, சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பெரும் தீயெனப் பரவி மக்களிடையே சுதந்திர வேட்கையை அதிகரித்தது. இந்த நிகழ்வு நடைபெற்று 108 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் இந்த நாளை அரசு விழாவாக கொண்டாடாமல் உள்ளனரே என்ற ஆதங்கம் இன்றளவும் நீடித்து வருகிறது.
வரலாற்றை இழக்கும் மண்டபம்!
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இரா. நாறும்பூநாதன் கூறியது:
எழுச்சி நாளை திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும். பள்ளிகள், கல்லூரிகளில் திருநெல்வேலி எழுச்சி குறித்தும் பாரதி, சுப்பிரமணிய சிவா, வ.உ.சி. குறித்தும், தியாகிகள் குறித்தும் மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல புதிய பாடத் திட்டத்தை வகுக்க வேண்டும்.
திருநெல்வேலி கலகம் பிறந்த இடமான தைப்பூச மண்டபம் உரிய பராமரிப்பின்றியே காணப்படுகிறது. மண்டபத்தின் சுற்றுச் சுவர்களிலும், படிக்கட்டுகளிலும் செடிகள் முளைத்துள்ளதோடு, மண்டபத்தைச் சுற்றியும் புதர்கள் மண்டிக் காணப்படுகின்றன. சுவரொட்டிகள் ஒட்டப்படும் இடமாகவும் மாறிவிட்டது. போராட்ட வரலாற்றை இழந்து வரும் இந்த மண்டபத்தில் நிரந்தரமாகக் கண்காட்சிக் கூடம் அமைத்து, வருங்காலத் தலைமுறையினருக்கு அடையாளப்படுத்த வேண்டியது அரசின் கடமை என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

