எனக்கெதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை: ஜயேந்திரர் பதில்

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில், எனக்கெதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று நீதிமன்றத்தில் இன்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி கூறியுள்ளார்.
Updated on
1 min read

சென்னை: ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில், எனக்கெதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று நீதிமன்றத்தில் இன்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி கூறியுள்ளார்.

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில், ஜயேந்திர சரஸ்வதி உட்பட காஞ்சி மடத்தின் மேலாளர் சுந்தரேச ஐயர் மற்றும் இளையமடாதிபதி விஜயேந்திர சரஸ்வதியின் சகோதரர் ரகு என 9 பேர் முக்கியக் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். வழக்கு விசாரணைக்காக இவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணையின் போது, 80 வயதாகும் ஜயேந்திரர், "தனக்கு எதிராக தொடரப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை, அனைத்தும் தவறு" என்று பல கேள்விகளுக்கு பதில் கூறியுள்ளார்.

மேலும் பல கேள்விகளுக்கு "எனக்கு தெரியாது" என்றும், "எனக்கு எதுவும் தெரியாது" என்றும் சில கேள்விகளுக்கு கை சைகையால் "இல்லை" என்றும் திரும்பத் திரும்பக் கூறினார்.

சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் எழுப்பப்பட்ட 91 கேள்விகளுக்கு ஜயேந்திரர் இவ்வாறு பதில் அளித்தார்.

இதே போல, விசாரணையின் போது கேள்விகளுக்கு பதில் அளித்த சுந்தரேச ஐயரும், ரகுவும், தங்களுக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட வழக்கு இது என்றும், இதில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தனர்.

வழக்குப் பின்னணி: சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணனை 2002-ஆம் ஆண்டில் மர்மக் கும்பல் வீடு புகுந்து அரிவாளால் வெட்டியது. இதில், ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, வேலைக்காரர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து, ஜயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, ரவி சுப்பிரமணியம், அப்பு, கதிரவன், மீனாட்சிசுந்தரம், ஆனந்த், கண்ணன் உள்ளிட்டோரை கைது செய்தனர். இதில் ரவிசுப்பிரமணியம் அரசுத் தரப்பு சாட்சியாக மாறினார்.

இந்த வழக்கு சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. விசாரணையின்போது, கதிரவன், அப்பு ஆகியோர் இறந்துவிட்டனர். ஜயேந்திரர் உள்பட 9 பேர் மீதான வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் தரப்பில் 55 சாட்சிகள் சாட்சியம் அளித்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், 9 பேரிடம் குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டியதுள்ளதால் மார்ச் 28-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com