புதுச்சேரியில் அரசு அமைவதில் தாமதம் : பள்ளிகள் திறப்பும் தள்ளிப்போக வாய்ப்பு

புதுச்சேரியில் அரசு அமைவதில் ஏற்படும் தாமதத்தால், ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறப்பும் பல்வேறு காரணிகளால் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

காரைக்கால் : புதுச்சேரியில் அரசு அமைவதில் ஏற்படும் தாமதத்தால், ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறப்பும் பல்வேறு காரணிகளால் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் அரசுப் பள்ளிகள் பொதுத்தேர்வு, கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 1-ஆம் தேதி திறப்பு செய்யப்பபடவுள்ளது. இதற்கான அறிவிப்பு மாணவர்களுக்கு ஏற்கெனவே செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளும், பெரும்பாலான சி.பி.எஸ்.இ. பாடத் திட்டப் பள்ளிகளும் இதே நாளில் பள்ளிகளை திறக்கவுள்ளன.

புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு கடலூர் மாவட்டத்தின் டெப்போவிலிருந்தே பாடப் புத்தகங்கள் பெறவேண்டியுள்ளது. தமிழகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னரே புதுச்சேரி மாநிலத்திற்கான பாடப் புத்தகங்கள் விநியோகம் செய்யப்படுவது பல ஆண்டுகளாக நடந்துவருகிறது.

இவ்வகையில் புத்தகங்களை வாங்குவதற்கு, புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வித்துறை மூலம் தமிழக அரசுத் துறைக்கு உரிய தொகை முன்கூட்டியே செலுத்தவேண்டும். இதுவரை புதுச்சேரி கல்வித்துறை மூலம் பாடப்புத்தகங்கள் பெறுவதற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக தெரியவில்லை என்கின்றனர் கல்வித்துறை வட்டாரத்தினர்.

மேலும் பள்ளி திறந்த நாள் முதல் மாணவர்களுக்கு பால் மற்றும் மதிய உணவு வழங்கவேண்டும். அதற்கான நிதியாதாரங்கள் அரசு நிர்வாகத்தில் வறட்சியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற பிரச்னைகள் சீரடைய அரசு நிர்வாகம் செயல்பாட்டில் இருக்கவேண்டும். புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து இன்னும் புதிய அரசு அமைக்கப்படவில்லை. முதல்வர் தேர்வு செய்யப்படுவதில் ஏற்படும் தாமதத்தால், அரசு அமைவதும் தாமதமடைந்துவருகிறது. அனைத்து அரசுத்துறைகளிலும் நிதி நிலைமை கவலையளிக்கக்கூடியதாக இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய அரசு அமைந்து, நிதி நிலை சீர் செய்யப்படவேண்டும் அல்லது நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்து, அரசுத்துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும். இவை நடக்காத வரை, புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் நீடிக்குமென அரசுத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பிரச்னை கல்வித்துறைக்கும் பொருந்தும். எனவே அறிவித்தவாறு 1-ஆம் தேதி பள்ளிகளை திறந்தால், மாணவர்களுக்கு பாடப் புத்தகம், பால், மதிய உணவு வழங்கலில் பெரும் சிக்கல் ஏற்படும். இது அரசுக்கு எதிரான விமர்சனங்களை எழுப்ப காரணமாகிவிடுமென அரசுத்துறை அதிகாரிகள் எண்ணுகிறார்கள்.

எனவே கடும் வெயிலை காரணம் காட்டி ஜூன் 1-ஆம் தேதி திறப்பு பள்ளிகளை கூடுதலாக 10 நாள்கள் தள்ளி திறக்க முடிவு எடுக்க வாய்ப்பிருப்பதாக கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. இது அரசு உத்தரவாக பிறப்பிக்கப்பட்டால், மாநிலத்தில் சி.பி.எஸ்.இ., மற்றும் தனியார் பள்ளிகளும் உத்தரவை ஏற்று செயல்படவேண்டியிருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com