அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை அதிகரிக்கப்படுமா?

உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை என்றாலே தனியார் மருத்துவமனைகளின் தாக்கம் அதிகம் என்ற நிலையை மாற்றவும், வெளிப்படைத் தன்மையை...
அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை அதிகரிக்கப்படுமா?
Updated on
3 min read

உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை என்றாலே தனியார் மருத்துவமனைகளின் தாக்கம் அதிகம் என்ற நிலையை மாற்றவும், வெளிப்படைத் தன்மையை உணர்த்தவும் அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. குறிப்பாக, பிரதான உறுப்புகளான இருதயம், சிறுநீரகம், கணையம், கல்லீரல், நுரையீரல் தொடர்பான மாற்று அறுவைச் சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளைப் போன்று அரசு மருத்துவமனைகளிலும் நிகழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அரசு மருத்துவமனை வட்டாரங்களில் மேலோங்கியுள்ளது.

திருக்கழுங்குன்றத்தைச் சேர்ந்த மருத்துவத் தம்பதி அசோகன்- புஷ்பாஞ்சலி ஆகியோரது மகனான ஹிதேந்திரனின் மரணம்தான் தமிழகம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் உறுப்பு தானத்துக்கான விதையாக அமைந்தது. 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த நிகழ்வு நடைபெற்றது. அதற்கு முன்பும் உறுப்பு தானம் இருந்திருந்தாலும், 11-ஆம் வகுப்பு மாணவரான ஹிதேந்திரனின் இருதயம் பெங்களூரைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமியான அபிராமிக்கு பொருத்தப்பட்ட சம்பவமே நாடெங்கும் பரவியது.

அதன்பிறகு, மூளைச் சாவு அடைந்தவர்களின் குடும்பத்தினர் உறுப்பு தானம் வழங்குவது அதிகரிக்கத் தொடங்கியது. இவற்றை முறைப்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு உடல் உறுப்புகள் தான குழுமத்தை 2008 செப்டம்பரில் தொடங்கியது

தமிழக அரசு. மேலும், இதற்கென ட்ற்ற்ல்:ற்ய்ர்ள்.ர்ழ்ஞ் என்ற இணையதளத்தையும் உருவாக்கி, இதில் பதிவு செய்வதைக் கட்டாயப்படுத்தியது. அதன்பிறகு, அனைத்து உறுப்பு தானங்களும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு மாதம் வாரியாகவும், ஆண்டு வாரியாகவும் பட்டியலிடப்பட்டு வருகின்றன.

சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ள மாவட்டங்களை வடக்கு, மேற்கு, தெற்கு என மூன்று மண்டலங்களாகப் பிரித்து அந்தந்த மண்டலங்களுக்கு தனிக் கண்காணிப்பாளர்களாக மருத்துவர்களை நியமித்து, அனைத்து உறுப்பு தானமும் அரசின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.


இருப்பினும், இன்றுவரை இருதய மாற்று அறுவைச் சிகிச்சை என்பது தனியார் மருத்துவமனைகளிலேயே நடைபெறுகிறது என்ற குறை உள்ளது. இதற்கு ஆதாரமாக கடந்த 8 ஆண்டுகளில் நடைபெற்ற உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளில் 90 சதவீதத்துக்கும் மேல் தனியார் மருத்துவமனைகளிலேயே நடைபெற்றிருப்பதை உடல் உறுப்புகள் தான குழுமமே பட்டியலாக வெளியிட்டுள்ளது. பிரதான உறுப்புகளான இருதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம், சிறுகுடல் ஆகியவற்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


வடக்கு மண்டலம்: சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதி மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மணடலத்தில்தான் 2008-ஆம் ஆண்டு அக்டோபர் தொடங்கி 2016 ஆகஸ்ட் மாதம் வரையில் 645 பேர் தங்களது உடல் உறுப்புகளை (மொத்த எண்ணிக்கை 2,205) தானம் அளித்துள்ளனர்.


மேற்கு மண்டலம்: கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், நாமக்கல் மற்றும் சுற்றுப் பகுதி மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 136 பேர் தங்களது உடல் உறுப்புகளை (மொத்த எண்ணிக்கை 366) தானம் செய்துள்ளனர்.


தெற்கு மண்டலம்: திருச்சி தொடங்கி கன்னியாகுமரி வரையிலான தென் மாவட்டங்களை உள்ளடக்கிய தெற்கு மண்டலத்தில் 72 பேர் தங்களது உடல் உறுப்புகளை (மொத்த எண்ணிக்கை 162) தானம் செய்துள்ளனர்.


இந்த 3 மண்டலங்களிலும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற உறுப்பு தானம், சிகிச்சை விவரங்கள் சேர்க்கப்படவில்லை. செப்டம்பர் மாதத்தில் தெற்கு மண்டலத்தில் குறிப்பிடும்படியாக திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரியைச் சேர்ந்த சிறுவன் அவினாஷின் இருதயம் உள்ளிட்ட 6 உறுப்புகள், தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர் சரவணனின் சிறுநீரகம் உள்ளிட்ட 5 உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, கடலூரைச் சேர்ந்த காவலர் பழனிவேலின் உறுப்புகள் சென்னை தனியார் மருத்துவமனையில் தானம் அளிக்கப்பட்டது.


கடந்த 2008, செப்டம்பர் முதல் 2016, ஆகஸ்ட் மாதம் வரையில் மொத்தம் 853 பேர் தங்களது 4,755 உறுப்புகளை தானமாக அளித்துள்ளனர். இவற்றின் மூலம் நடைபெற்ற பெரும்பாலான உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளும் தனியார் மருத்துவமனைகளில்தான் என்பதை மறுப்பதற்கில்லை. இதுதொடர்பாக, திருநெல்வேலியில் 2 சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ள திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (டீன்) சித்தி அத்திய முனவரா கூறியதாவது:


திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் சிறுநீரகம், கருவிழி மாற்று அறுவைச் சிகிச்சைக்கு மட்டுமே அரசிடம் அனுமதி பெற்றுள்ளோம். இதில், குறிப்பிடும்படியாக 2 சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துள்ளோம்.
மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் ரூ. 180 கோடியில் பல்நோக்கு மருத்துவமனை கட்டும் பணி நடைபெறுகிறது. அதிநவீன உபகரணங்களுடன் 2017-இல் இது பயன்பாட்டுக்கு வரும். அப்போது, இருதயம் உள்ளிட்ட பிரதான உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நடைபெறும் நிலை வரும் என்றார் அவர்.


உடல் உறுப்புகள் தான குழுமத்தின் தென் மண்டலத்துக்கான ஒருங்கிணைப்பாளரும், மருத்துவருமான அன்புராஜன் கூறியதாவது:
சென்னையில் உள்ள 3 அரசு மருத்துவமனைகளில் பிரதான உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கான வசதிகள் உள்ளன. திருநெல்வேலியில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வசதி உள்ளது. இதர அரசு மருத்துவமனைகளிலும் பிரதான உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை அளிக்க வேண்டுமெனில், அதற்கென நவீன உபகரணங்கள், சிறப்பு மருத்துவர்களை கொண்டு தமிழக அரசின் உறுப்புகள் தான குழுமத்துக்கு விண்ணப்பித்து உரிய அனுமதி பெற வேண்டும். இதற்கு, அந்தந்த அரசு மருத்துவமனை தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் ஆர்வம் செலுத்த வேண்டியது அவசியமானது என்றார் அவர்.


8 ஆண்டுகளில் பெற்ற கொடை!

கடந்த 8 ஆண்டுகளில் (2016 செப்டம்பர் தவிர்த்து) 853 பேர் உறுப்புகளை கொடையளித்துள்ளனர். இவற்றில், இருதயம் 244, நுரையீரல் 126, கல்லீரல் 804, சிறுநீரகம் 1558, கணையம் 11, சிறுகுடல் 2 என மொத்தம் 2,745 பிரதான உறுப்புகள் கொடையளிக்கப்பட்டுள்ளன. இவை தவிர, இருதய வால்வுகள் 682, கருவிழி 1283, தோல் 43, ரத்த நாளங்கள் 2 என ஒட்டுமொத்தமாக 4,755 பேர் பயன் பெற்றுள்ளனர்.
உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்காகக் காத்திருப்போர் பட்டியலும் ஆயிரக்கணக்கில் நிலுவையில் உள்ளது. இவற்றில் முன்னுரிமை அடிப்படையில் கொடை உறுப்புகள் வழங்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com