சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண் பெறுவதில் சிக்கல்

கைவிரல்கள், கண்களை இழந்த மாற்றுத் திறனாளிகள் தனித்துவ ஆதார் எண் பெறுவதில் பெறும் சிரமங்கள் இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

News image
Updated On :24 அக்டோபர் 2016, 5:25 am

கே.பாலசுப்பிரமணியன்

கைவிரல்கள், கண்களை இழந்த மாற்றுத் திறனாளிகள் தனித்துவ ஆதார் எண் பெறுவதில் பெறும் சிரமங்கள் இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஆனால், மாற்றுத் திறனாளிகளும் அடையாள அட்டை பெற உரிய வாய்ப்புகள் இருப்பதாக தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தனித்துவ ஆதார் எண் வழங்கும் பணிகள் தற்போது மாநில அரசின் கேபிள் தொலைக்காட்சி நிறுவனமான இணைய சேவை மையங்கள் மூலமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு முன்னதாக, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆணையத்தின் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

தனித்துவ ஆதார் எண், உயிரி பதிவேடு (பயோ-மெட்ரிக்) முறை மூலம் அளிக்கப்படுகிறது. அதாவது, விண்ணப்பதாரரின் இரு கைகளில் உள்ள பத்து விரல் ரேகைகள், கண்களின் கருவிழிப் படலம் ஆகியன பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் ஆதார் எண் வழங்கப்படுகிறது.

மாநிலத்தில் இதுவரை 95 சதவீதத்துக்கு மேற்பட்டோருக்கு ஆதார் எண்ணுக்காக அவர்களது கை விரல் ரேகைகள், கருவிழிப் படலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு ஆதார் எண்கள் அளிக்கப்பட்டுள்ளன.

சிக்கலில் மாற்றுத் திறனாளிகள்: விபத்திலோ, பிறப்பிலோ கண்களையும், கை விரல்களையும் இழந்தவர்களாக இருந்தால், அவர்களுக்கு ஆதார் எண் வழங்க உயிரி பதிவேடு எடுக்கப்படுவதில்லை. இதனால், அவர்கள் தனித்துவ ஆதார் எண்ணைப் பெறுவதில் சிக்கல் இருப்பதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புகார்கள் கூறப்படுகின்றன.

தோல் நோயால் பாதிக்கப்பட்டு கை விரல்கள் மடங்கிய நிலையில் இருப்பவர், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த எஸ். பத்மாவதி. அவர் ஆதார் எண்ணைப் பெற கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் முயற்சித்து வருகிறார். ஆனால், கை விரல் ரேகைகளைப் பதிவு செய்ய முடியாததால், ஆதார் எண் வழங்க இயலாது என்று அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆதார் எண் கிடைக்காததால், எரிவாயு உருளை மானியம் பெற முடியவில்லை என்றும், புதிய குடும்ப அட்டைக்காக ஆதார் எண்ணை இணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பத்மாவதி தெரிவித்தார்.
இதேபோன்று, கை விரல்கள், கருவிழிப் படலம் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கும் ஆதார் எண் மறுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
உரிமையை மறுக்க முடியாது: இந்தப் புகார்கள் குறித்து தேசிய மக்கள் தொகை பதிவேட்டு ஆணைய அதிகாரிகளிடம் கேட்டதற்கு அவர்கள் அளித்த விளக்கம்:
ஆதார் எண்ணுக்காக உயிரி பதிவேடு எடுக்கும் போது, ஒரு கையில் விரல் இல்லாவிட்டால் மற்றொரு கையில் உள்ள விரல்களின் ரேகைகளைப் பதிவு செய்து கொள்ளலாம். விரல்கள் இல்லாத கைகளின் புகைப்படத்தை எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
இதே நிலையே கண்ணுக்கும் பொருந்தும். இதேபோன்று, இரண்டு கைகளில் விரல்களும், கண் பார்வையும் இல்லாத மாற்றுத் திறனாளிகள் அதற்கான உரிய புகைப்படத்தை எடுத்து விண்ணப்பத்துடன் அனுப்பி வைக்கலாம்.
இந்தப் புகைப்படங்களை ஆதார் எண்ணுக்காக விண்ணப்பிக்கும் மையத்திலேயே எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பலாம். இந்தப் பணியை, ஆதார் எண்ணுக்காக உயிரி பதிவு செய்யும் அலுவலர்களே மேற்கொள்ள வேண்டும்.
கை விரல் ரேகைகளோ, கண்ணின் கருவிழிப் படலத்தையோ பதிவு செய்து அனுப்ப முடியவில்லை என்பதற்காக, பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஆதார் எண் வழங்கும் உரிமையை மறுக்க முடியாது என்றனர் அவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.