காலங்களைக் கடந்த காதல் சின்னங்களுள் ஒன்றாக விளங்கும், திருவாரூர் மாவட்டம், மகாதேவப்பட்டணத்தில் உள்ள மராட்டிய மன்னர் கோட்டையை அழிவிலிருந்து காக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி செய்த மராட்டிய மன்னர்களில் குறிப்பிடத்தக்க இடம் பெற்றவர் துளஜா. இவரது ஆட்சிக் காலம் கி.பி. 1729-1735 வரை எனப்படுகிறது. இவர் தனது சகோதரர்கள் சாக்கோட்டை சகசி மன்னர், தஞ்சை சரபோஜி மன்னர் ஆகியோருடன் இணைந்து ஆட்சி செய்ததாக தருமாகூடம் என்ற வரலாற்று நூல் தெரிவிக்கிறது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள மகாதேவப்பட்டணம் பகுதிக்கு தனது சகாக்களுடன் வேட்டையாட வந்த மராட்டிய மன்னர் துளஜா, ஒரு முயலானது வேட்டை நாயைத் துரத்திச் செல்வதைக் கண்டு வியந்தார், அந்த இடத்தில் 56 ஏக்கர் பரப்பில் ஒரு பெரிய கோட்டையை அமைத்தார் என்பது மகாதேவப்பட்டணம் மராட்டிய மன்னர் கோட்டையின் வரலாறு.
இந்தக் கோட்டைக்கு மற்றொரு சுவாரஸ்யமும் உள்ளது. அது, ஷாஜஹான் தனது மனைவி மும்தாஜுக்காக தாஜ்மகாலை கட்டியது போலவே, தனது காதலின் நினைவாக துளஜா மன்னர் இந்தக் கோட்டையைக் கட்டினார் என்பதே. இதன்மூலம், காலங்களைக் கடந்து நிற்கும் காதல் சின்னங்களுள் ஒன்றாக விளங்குகிறது இந்த மராட்டிய மன்னர் கோட்டை. 15 அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட சுற்றுச் சுவர்கள் உள்ள இந்தக் கோட்டைக்குள் 63 நாயன்மார்களின் சிலைகள் உள்ளன. துளஜா மன்னரின் காதலி உமாபாய் அடக்கம் செய்யப்பட்ட இடம், அரிய ஓவிய வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. உமாபாயின் உடலுடன் அவர் பயன்படுத்திய தங்க ஊஞ்சல் உள்ளிட்ட தங்க ஆபரணங்களும் 30 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டதாகவும் செவிவழிச் செய்திகள் உள்ளன.
மாதவ பூமி என்ற பெயர் பிற்காலத்தில் மகாதேவப்பட்டணமாக மருவியதைப் போல, துளஜா மன்னரின் காதலி உமா பாயின் பெயர் பிற்காலத்தில் ஊமை அப்பாயி என மருவி வழங்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தக் கோட்டை தற்போது கடுமையாகச் சிதிலமடைந்து, யாரும் உள்ளே செல்ல முடியாத நிலையில் உள்ளது. கோட்டையின் பிரம்மாண்ட சுற்றுச் சுவர்கள் விரிசல் விழுந்த நிலையிலும், ஆங்காங்கே துண்டிக்கப்பட்டும் அவற்றின் கம்பீரத்தை இழந்திருப்பது வரலாற்று ஆர்வலர்களுக்குப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. உள்ளிக்கோட்டை, ஆலங்கோட்டை, தளிக்கோட்டை, நல்லிக்கோட்டை, பரவாக்கோட்டை, அத்திக்கோட்டை, நெடுவாக்கோட்டை, ஆவிக்கோட்டை, சுந்தரக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை ஆகியன மகாதேவப்பட்டணத்தைச் சுற்றியுள்ள ஊர்களின் பெயர்கள். இவற்றின் மூலம், மகாதேவப்பட்டணமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் கடந்தகால வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம் பெற்றவையாக இருந்திருக்க வாய்ப்புள்ளதை அறிய முடிகிறது. கலைநுட்பம் பொருந்திய இந்தக் கோட்டையை அழிவிலிருந்து மீட்டெடுத்து, அதன் வரலாற்றுப் பெருமையை வருங்காலச் சந்ததியினரும் அறிந்துகொள்ளச் செய்ய மத்திய, மாநில அரசுகளும், தொல்லியல் துறையினரும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் வரலாற்று ஆர்வலர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
திமுகவினர் ரூ. 8,000 கூப்பன் வழங்குவதாக தவெக மனு: நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

சபரீசன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் டி.கே. சிவக்குமார் பங்கேற்பு!

கருப்பு பக்கா கமர்சியல் திரைப்படம்: ஆர். ஜே. பாலாஜி
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


