கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்படுமா?

வறட்சியான காலத்திலும், குறைந்த தண்ணீரைக் கொண்டும் சாகுபடி செய்யக்கூடிய கரும்புக்கு நிகழாண்டில் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு...
கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்படுமா?
Updated on
2 min read

வறட்சியான காலத்திலும், குறைந்த தண்ணீரைக் கொண்டும் சாகுபடி செய்யக்கூடிய கரும்புக்கு நிகழாண்டில் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையையும், மாநில அரசு ஊக்கத் தொகையையும் வழங்காததால், பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர் கரும்பு விவசாயிகள்.
தமிழகத்தில் ஏறத்தாழ 3.50 லட்சம் ஹெக்டேரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கரும்பு சர்க்கரையாக மட்டும் பயன்படாமல், பல்வேறு வகையான பொருள்களைத் தயாரிக்கவும் உதவுகிறது. எத்தனால், ஆல்கஹால், கரும்புக் கழிவிலிருந்து உரம் என எண்ணற்ற பயன்கள் கரும்பின் மூலம் கிடைக்கின்றன. இது மட்டுமல்லாமல், கரும்பிலிருந்து மின் உற்பத்தியும் செய்யப்பட்டு வருகிறது.
சரியான விளைச்சல் இல்லாதது, பூச்சி பாதிப்பு, வெட்டுக் கூலி அதிகரிப்பு, கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் கரும்பு சாகுபடி பயிரிடுவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்தும் வருகிறது.
தமிழகத்தில் 2 பொதுத் துறை, 16 கூட்டுறவு ஆலைகள், 24 தனியார் சர்க்கரை ஆலைகள் என மொத்தம் 42 ஆலைகள் தற்போதைய கணக்குப்படி இயங்கி வருகின்றன. இந்த ஆலைகள் தினமும் 1,250 மெட்ரிக் டன் முதல் 7,000 மெட்ரிக் டன் வரை கரும்பு பிழிதிறன் வசதி கொண்டவையாகும். விவசாயிகளிடமிருந்து கரும்புகளை வாங்கும் சர்க்கரை ஆலைகள் ஒரு டன் கரும்பின் மூலமாக பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்து, டன்னுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்டுகின்றன.
விலை இன்னும் நிர்ணயம் செய்யவில்லை: வழக்கமாக அக்டோபர் மாதம் தொடங்குவதற்கு முன்பாகவே மத்திய அரசு, கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்துவிடும். அதன் அடிப்படையில், மாநில அரசும் ஊக்கத்தொகை, போக்குவரத்துப் படியை வழங்குவதுதான் இதுவரையிலான நடைமுறை.
2012-13-இல் ரூ. 1,700, 2013-14-இல் ரூ. 2,100, 2014-15-இல் ரூ. 2,200, 2015-16-இல் ரூ. 2,300 என மத்திய அரசு ஆண்டுதோறும் கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்தது. இதையொட்டி, மாநில அரசும் தனது பங்காக ஊக்கத்தொகையை ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது
ரூ. 350- ரூ. 450 வரை சேர்த்து வழங்கியது.
இதன்படி, கடந்தாண்டில் மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை
ரூ. 2,300, போக்குவரத்துப் படி உள்பட ஊக்கத்தொகை ரூ. 550 என மொத்தமாக ரூ. 2,850 டன் ஒன்றுக்கு வழங்கப்பட்டது.
ஆனால், நிகழாண்டில் அக்டோபர் மாதம் முடியும் நிலையில், இதுவரை மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை இன்னமும் அறிவிக்கவில்லை. இதுகுறித்து அரசுத் தரப்பில் விசாரித்த போது, கடந்தாண்டு விலையே நிகழாண்டும் நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
மத்திய அரசே விலையை இன்னும் அறிவிக்காத நிலையில், மாநில அரசும் மௌனம் சாதித்து வருகிறது. இதனால், முழுமையான பாதிப்பை சந்தித்து வருவது கரும்பு விவசாயிகளே என்றார் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலர் ஆர். ராஜா சிதம்பரம். அவர் மேலும் கூறியதாவது:
குறைந்தபட்ச ஆதரவு விலை, ஊக்கத்தொகையை மத்திய, மாநில அரசுகள் இதுவரை அறிவிக்காத பிரச்னை ஒருபுறமிருக்க, விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கரும்புக்கான நிலுவைத் தொகையை 10 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும், 2 பொதுத் துறை ஆலைகளும் இதுவரையில் வழங்கவில்லை. ஏறத்தாழ ரூ. 349 கோடி வரை இந்தத் தொகை நிலுவையில் உள்ளது. இதுகுறித்த கோரிக்கை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. கூட்டுறவு ஆலைகளும், பொதுத் துறை ஆலைகளும் இதுபோன்ற சிக்கலில் இருக்கும் போது வழிவகைக் கடனை தமிழக அரசு வழங்குவதுதான் நடைமுறையாகும். இதுகுறித்து தமிழக நிதி அமைச்சரிடம் முறையிட்டுள்ளோம். தீபாவளி பண்டிகைக்குள் நிலுவைத் தொகையை வழங்காவிடில், வீடுகளில் கருப்புக் கொடியை ஏற்ற உள்ளோம். மேலும், போராட்டத்தைத் தொடர வேண்டிய நிலை உள்ளது என்றார் ராஜா சிதம்பரம்.
குறைந்த தண்ணீரைக் கொண்டு சாகுபடி செய்யக் கூடிய கரும்பு விவசாயிகளின் நிலை நாளுக்கு நாள் தொடர்ந்து மோசமாகி வருகிறது. அந்த விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்கத்தான் வழியில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com