வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும்: ஜி. ராமகிருஷ்ணன்

மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

News image
Updated On :21 செப்டம்பர் 2016, 7:51 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி: மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியது: பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் மக்களுக்கு எதிரான பிரச்னைகள் அதிகரித்துள்ளன. மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படாமல் விலங்களை பாதுகாப்பதில்தான் அக்கரை காட்டுகிறது. சமூக கொடுமைகள் பல வடிவங்களில் அதிகரித்து வருகின்றன.
ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதனை அனுமதிக்க முடியாது. நவீன மயமாக்கல் கொள்கையை எதிர்த்து வலுவான போராட்டத்தை நடத்தும் வகையில் மாற்றுத் திட்டத்தை உருவாக்கும் முயற்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது.

போராடி பெற்ற சலுகையை பறிக்க அனுமதிக்க முடியாது. ஓய்வூதியர்கள் நீங்கள் வசிக்கும் பகுதியில் மக்களின் அடிப்படை தேவைகளுக்காக வலுவாக குரல் கொடுப்பதன் மூலம் ஜனநாயகத்தை பலப்படுத்த முடியும். உங்களுக்கு பணியில் இருந்துதான் ஓய்வு கிடைத்துள்ளது. ஜனநாயகத்தை பாதுகாக்க ஓய்வு கிடையாது.

நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற சமூகத்தை விட, எதிர்கால சந்ததியினருக்காக மிகச்சிறந்த சமூகத்தை உருவாக்க நாம் பாடுபட வேண்டும் என்றார் அவர்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டி: 2003 முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்து வருகிறது. ஓய்வூதியம் வழங்குவதை மத்திய, மாநில அரசுகள் 3 ஆவது சலுகையாக கருதக் கூடாது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது.

தற்போது மத்திய அரசு ஓய்வூதியத்தை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தை அனுமதிக்க முடியாது. ஓய்வூதியம் வழங்க வேண்டியது அரசின் கடமை. ஆகவே மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

பல வருடங்களுக்கு பிறகு காவிரி பிரச்னையில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இனியும் மத்திய அரசு தாமதிக்காமல் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.
காவிரி நீர், முல்லைபெரியாறு அணை போன்ற இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணுவதுடன், இப்பிரச்னைகளில் மத்திய அரசு நடுநிலையாக செயல்பட வேண்டும்.

ராம்குமார் மரணத்தில் எழும் பல்வேறு சந்தேகங்களுக்கு விடை கிடைக்க வேண்டும். காவல் நிலைய மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். ஆகவே பணியில் இருக்கும் நீதிபதிகளை கொண்டு ராம்குமார் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றங்கள் அதிகரித்து விட்டன. சிறையில் கூட கைதிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளாட்சியில் வெற்றி வாய்ப்பு இடங்களை தேர்வு செய்து அங்கு இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த முயற்சி ஆளும் முயற்சி மேற்கொண்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தேதியை உடனடியாக அறிவிப்பதோடு, இடஒதுக்கீடு அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெறும் வகையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்து அமை்பபுகளிலும் மின்னணு இயந்திரம் மூலம் வாக்குப் பதிவு நடத்த வேண்டும். மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி அமைத்து உள்ளாட்சித் தேர்தலை சந்திப்போம்.


தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணி தொடர்ந்து செயல்படும். எல்லைப் பகுதியில் 18 ராணுவவீரர்கள் கொல்லப்பட்டது கண்டனத்துக்குரியது. இந்திய எல்லையில் பாகிஸ்தான் ஊடுருவலை தடுக்க வேண்டும். காஷ்மீர் பிரச்னையில் நிரந்தர தீர்வு காணும் வகையில் மத்திய அரசு தரப்பு மக்களையும் அழைத்துப் பேச வேண்டும் என்றார் அவர்.

பேட்டியின்போது, கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலர் கே.ஜி. பாஸ்கரன், மின்வாரிய நல அமைப்பின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.