பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக தமிழகத்தில் உள்ள 500-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளை ஒருங்கிணைத்து, 2 லட்சம் மாணவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பெற்று கலந்தாய்வு நடத்துவது எளிதான விஷயமல்ல. அதற்கு விரிவான திட்டமிடல் தேவைப்படும் என்பதால் தான் மாணவர் சேர்க்கைக் குழு முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்தில் அமைக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்படுகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நடப்பாண்டில் துணை வேந்தர் இல்லாத நிலையில், அப்பொறுப்பை தற்காலிகமாக கவனித்து வரும் உயர்கல்வித்துறை செயலர், தொழில்நுட்பக்கல்வி இயக்குனர், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோரில் ஒருவர் இதற்கான முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யாதது அலட்சியத்தையே காட்டுகிறது. சசிகலாவை அரசியலுக்கு அழைத்து வர வேண்டும் என்பதற்காக போயஸ் தோட்டத்திற்கு படையெடுத்துச் சென்ற துணைவேந்தர்களைக் கொண்ட தமிழகத்தின் உயர்கல்வி கட்டமைப்பு, மாணவர்களின் தேவையை உணர்ந்து அதற்கேற்ற வகையில் செயல்படும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றத்தை தான் தரும் போலிருக்கிறது.