தமிழகத்தில் கோடை மழை பெய்யுமா? இதயத்தை கனமாக்கும் அதிர்ச்சித் தகவல்

ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் சென்னை உட்பட தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை கணிப்புகள் கூறப்பட்டன.
தமிழகத்தில் கோடை மழை பெய்யுமா? இதயத்தை கனமாக்கும் அதிர்ச்சித் தகவல்


சென்னை: ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் சென்னை உட்பட தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை கணிப்புகள் கூறப்பட்டன.

வானிலை குறித்து ஆராய்ந்து தனது பேஸ்புக்கில் பதிவு செய்து வரும் தமிழ் நாடு வெதர்மேன் பிரதீப், மார்ச் மாத இறுதியில் மழை பற்றி பதிவு செய்திருந்தார்.

அதில், சித்திரை பிறப்பிற்குப் பிறகு தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக மகிழ்ச்சி தரும் தகவலை  கூறியிருந்தார்.

ஆனால், நேற்று அவர் பதிவு செய்திருப்பதாவது, வரும் ஏப்ரல் மாதம் கடந்த 2009ம் ஆண்டைப் போல (ஏப்ரலில் கோடை மழை) ஒரு சிறப்பான மாதமாக இருக்கும் என்று மார்ச் மாத இறுதிப் பதிவில் கூறியிருந்தேன்.

ஆனால், ஆரம்பத்தில் ஆழ்ந்த மேகக் கூட்டம் உருவாகி, தமிழகத்தை நோக்கி வந்து தற்போது விலகிச் சென்றுவிட்டது.

இது வங்கக் கடலின் தெற்கு-மேற்கு அல்லது வங்கக் கடலில் மையப் பகுதியில் இலங்கைக்கு அருகே உருவாகும். ஆனால், இது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறும் வளிமண்டல மேக வளைவுக் கூட்டம் போலக் காணப்படவில்லை. இதற்கு மத்தியக் கோட்டு காலநிலை மண்டலத்தின் அதிர்வும் ஒரு காரணமாக உள்ளது. இதனால், இந்த மேக நகர்வு மழையைத் தருவதற்கு குறைந்த வாய்ப்புகளே உள்ளன.

மத்தியக் கோட்டு காலநிலை மண்டலத்தில் வடக்கு மண்டலத்தில் மேகக் கூட்ட நகர்வும், தெற்கு மண்டலத்தில் ஒரு மேகக் கூட்ட நகர்வும் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் நிலவும் வறட்சிக்கு இதுதான் இறுதி வாய்ப்பா என்றால், பர்மா அல்லது வங்கதேச கடற்கரைப் பகுதியில் இருக்கும் காற்றின் வேகமான ஓட்டம் இதனை திசைத் திருப்பிக் கொள்ள வாய்ப்பு உள்ளது என்பதே பதில்.

தமிழகத்துக்கு இந்த மேகக் கூட்டத்தினால் மழை பெய்ய வேண்டும் என்று இதயம் விரும்புகிறது. அதனால்தான் கடந்த 10 நாட்களாக மழை பெய்யுமா என்ற கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்லாமலேயே இருந்தேன். கடந்த 10 நாட்களாக தமிழகத்துக்கு அருகே ஒரு மேகக் கூட்டமும், பர்மாவுக்கு அருகே மற்றொரு மேகக் கூட்டமும் இருந்தது. ஆனால் தற்போது இரண்டும் பர்மா அல்லது வங்கதேசம் நோக்கி நகர்ந்துள்ளது.

தமிழகத்துக்கு மிக அருகே மேகக் கூட்டங்கள் உருவான நிலையிலும், வேகமான காற்றின் சுழற்சி நமக்கான மழை வாய்ப்பை பறித்துச் சென்றுவிட்டது.
 

நிச்சயம் அதில் ஏதேனும் ஒரு திடீர் மாற்றம் ஏற்படும், உருவான இடத்தின் மீதான தாய்மை உணர்வோடு திரும்பி வரும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. இதன் மூலம் தமிழகத்தில் நிலவும் மோசமான வறட்சி மாறும், அத்தனை பேரின் பிரார்த்தனையும் நிறைவேறும் என்று நினைத்தேன். ஆனால் கடவுளின் சித்தம் வேறாக உள்ளது என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com