வெயிலின் தாக்கம்: பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்...!

வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகளை சென்னை மாவட்ட
வெயிலின் தாக்கம்: பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்...!

சென்னை: வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகளை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.  

வானிலை மையம் அறிவிப்பின்படி, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அனல்காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, சென்னைவாசிகள் வெயிலின் தாக்கத்திலிருந்து பாதிக்காமல் இருக்க கடைபிடிக்கவேண்டியவை:

1. வெப்ப அலை, காற்று தொடர்பான வானிலை முன்னறிவிப்புகளை ஊடகம், பத்திரிகைகள் உள்ளிட்டவற்றில் வெளிவரும் செய்திகளை தொடர்ந்து கவனிக்கவும். போதுமான நீர் அருந்தவும். வெளிர் நிற, பருத்தி ஆடைகளை அணியவும். வெளியே செல்லும் போது குடை, தொப்பி உள்ளிட்டவற்றை பயன்படுத்தவும்.

2. சூரிய ஒளி நேரடியாக படும் இடமான தலை, கழுத்து, முகம் ஆகியவற்றை ஈரத்துணியால் பாதுகாக்கவும். பயணத்தின் போது குடிநீரை உடன் எடுத்து செல்லவும்.

3. நீர்ச்சத்து குறையாமல் இருக்க, லஸ்ஸி, எலுமிச்சை பழச்சாறு, மோர், கஞ்சி உள்ளிட்ட எளிய நீராகாரங்களை பருகவும்.

4. வெப்ப பாதிப்பின் அறிகுறிகளான சோர்வு, தளர்வு, தலைவலி, வியர்வை, மயக்கம் ஏதேனும் ஏற்படுவதை பொறுத்து மருத்துவரை அணுகவும். அதுபோல், செல்லப் பிராணிகளுக்கு நிழலான இடம், போதிய நீர் கொடுத்து பராமரிக்கவும்.

5. ஈரத்துணி, மின்விசிறிகளை பயன்படுத்தவும். இரவு நேரங்களில் வீட்டின் ஜன்னல்களை திறந்து வைக்கவும். குளிர்ந்த நீரில் குளிக்கவும்.

6. களப்பணியாளர்கள் நேரடியாக சூரிய ஒளியின் தாக்கத்தை தவிர்க்கவும். வெளிப்பணியின் போது, உரிய ஓய்வு எடுத்துக்கொள்ளவும்.

7. கர்ப்பிணித் தொழிலாளர்கள், மருத்துவச் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

தவிர்க்கப்பட வேண்டியவை:
1. நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகள், செல்லப்பிராணிகளை விட்டுச் செல்ல வேண்டாம்.

2. நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வெளியில் செல்வதை தவிர்க்கவும். கருப்பு நிற ஆடைகள், கனமான, இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்கவும்.

3. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது கடின வேலைகளை தவிர்க்கவும். அதுபோல், அதிக வெப்பத்தை உணரும்போது, சமைப்பதை தவிர்க்கவும். மேலும், சமையலறை பகுதி ஜன்னல்கள், கதவுகளை திறந்து வைக்கவும்.

4. நீர்ச்சத்து பாதிக்கக்கூடிய தேனீர், காபி, மது மற்றும் பாட்டில் குளிர்பானங்களை தவிர்க்கவும். அதுபோல், அதிக புரதச்சத்து, பழைய, ஜீரணமாகாத உணவுகள் உள்ளிட்ட உணவுகள் உண்பதை தவிர்க்கவேண்டும் என  சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com