
சென்னை: வார்டு வரையறை உள்ளிட்ட தயாரிப்பு பணிகளில் தமிழக அரசு ஒத்துழைத்தால் வரும் ஜுலை இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்திட இயலும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டுமென்று கோரி பாடம் நாராயணன் என்ற சமூக ஆர்வலர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் உரிய ஏற்பாடுகளை நிறைவு செய்து வரும் மே மாதம் 14-ஆம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தர விட்டிருந்தது.
இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதன் தனிச் செயலாளர் ராஜசேகர் என்பவர் கடந்த 3-ஆம் தேதி அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அந்த மனுவில் 'தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலை முழுமை செய்யும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை,எனவே நீதிமன்றம் உத்தரவில் கூறியிருந்தபடி வருமே மாதம் 14-ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல்களை நடத்த முடியாது. எனவே கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்' என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. முன்பே நீதிமன்றம் கூறியிருந்தபடி மே மாதம் 14-ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். நீதிமன்ற உத்தரவை பின்பற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும். பொதுமக்களின் பிரச்சினைளை தீர்க்கத்தான் நீதிமன்றமே தவிர அரசை நடத்துவதற்கு அல்ல என்று நீதிமன்றம் தனது கண்டங்களைப் பதிவு செய்தது. பின்னர் தேர்தல் நடத்துவது தொடர்பான விரிவான பதில் மனுவினை தாக்கல் செய்யுமாறு ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விரிவான பதில் மனுவினை தாக்கல் செய்தாது. அதில் வார்டு வரையறை, இட ஒதுக்கீடு மற்றும் குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் சட்டத் திருத்தம் உள்ளிட்ட சீர்திருத்தங்களை தமிழக அரசு விரைந்து நிறைவேற்றினால் வரும் ஜுலை 31-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்திட இயலும் என்று மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.