
அதிமுக அணிகள் இணைவதற்கான காலக்கெடு வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டார்.
ஆகஸ்ட் 14-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அஇஅதிமுக-வை இணைக்கும் முயற்சியில் ஈடுபடப்போவதாக டிடிவி தினகரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதையடுத்து, அதிமுக அம்மா அணியின் புதிய நிர்வாகிகளை நியமித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன் பேசியதாவது:
நான் எப்போது வேண்டுமானாலும் அதிமுக தலைமை அலுவலகம் செல்வேன். அந்த உரிமை எனக்கு உண்டு. என்னை யாராலும் தடுக்க முடியாது.
கட்சியைப் பொறுத்தவரையில் யாரையும் நீக்கவும், இணைக்கவும் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு மட்டுமே உரிமை உண்டு. அதிமுக அமைச்சர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் எதற்காக பயப்படுகின்றனர் என்று அவர்களைத் தான் கேட்க வேண்டும்.
அதிலும் அமைச்சர் ஜெயகுமார் கூடுதலாக பயப்படுகிறார். அவருக்கு கட்சியின் மீனவர் பிரிவு செயலாளர் பதவி அளித்ததே சசிகலா தான். இரண்டு அணிகளும் இணைய நிச்சயம் வாய்ப்பில்லை என்பது எனக்கு எப்போதோ தெரியும்.
இனி அதிமுக-வை பலப்படுத்துவது தான் என்னுடைய முக்கியப் பணி. அமைதியாக ஒதுங்கி இருந்தது பயத்தினால் அல்ல. நான் யாருக்கும் பணிந்து போக வேண்டிய அவசிமும் இல்லை.
உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில் சொல்ல விரும்புகின்றேன். அது, அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகத்தான் தற்போதைய அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் சிலரின் நிலைமையாக உள்ளது.
நான் கடந்த இரண்டு மாதங்களாக வீட்டில் இருந்தபடியே அதிமுக-வை பலப்படுத்தும் பணியை துவங்கிவிட்டேன். தற்போது வெளிப்படையாக களமிறங்கிவிட்டேன்.
பிரிந்து சென்ற அனைவரும் எங்கள் சகோதரர்கள் தான். அவர்கள் விருப்பப்பட்டால் மீண்டும் இணையலாம். என்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகளை பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.