பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

நாடு முழுவதும் சுங்கத்துறை இணையதளம் முடக்கம்: ஏற்றுமதி, இறக்குமதியில் கடும் பாதிப்பு 

தொழில்நுட்பக் காரணங்களால் நாடு முழுவதும் சுங்கத்துறை இணையதளம் (www.icegate.gov.in)  கடந்த 4 நாள்களாக அடியோடு முடங்கியுள்ளது.

Published On :29 ஜனவரி 2024, 10:14 pm IST

தொழில்நுட்பக் காரணங்களால் நாடு முழுவதும் சுங்கத்துறை இணையதளம் (www.icegate.gov.in)  கடந்த 4 நாள்களாக அடியோடு முடங்கியுள்ளது. இதனையடுத்து தொடர்ச்சியாக ஏற்றுமதி இறக்குமதி ஆவணப் பரிவர்த்தனையில் கடும் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.
அகில இந்திய அளவில் சுங்கத்துறை ஆவண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஐஸ்கேட் (www.icegate.gov.in) என்ற ஒருங்கிணைந்த இணைய தளம் செயல்பட்டு வருகிறது. மத்திய சுங்கம் மற்றும் தீர்வை வாரியத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள இந்த இணையதளத்தின் மூலம் ஏற்றுமதி, இறக்குமதிக்கான வெளிநாட்டு வர்த்தகத்தின் ஒட்டுமொத்த ஆவணப் பரிவர்த்தனைகளும் நடைபெற்று வருகின்றன. வர்த்தகர்கள், சுங்கத்துறை முகவர்கள் தங்களது ஆவணங்களை இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்த பின்னர் அதிகாரிகள் ஆவணங்களை மதிப்பீடு மற்றும் ஆய்வு செய்து சரக்குகளை விடுவித்த பின்னர்தான் சரக்குகளை வெளியே எடுக்க முடியும். எனவே இந்த இணையதளத்தின் செயல்பாட்டில்தான் இத்துறையின் அனைத்து செயல்பாடுகளும் அடங்கியுள்ளன. 
முடங்கிய இணையதளம்: இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஆக. 22) திடீரென சுங்கத்துறை இணையதளம் முடங்கியது. இதனையடுத்து சென்னை, மும்பை, கொல்கத்தா, தில்லி உள்ளிட்ட இடங்களில் உள்ள சுங்கத் துறை ஆணையரகங்களில் ஆவண பரிவர்த்தனை பணிகள் முடங்கின. இதனால் இணையதளம் மூலம் எவ்வித பதிவேற்றமும் செய்ய முடியவில்லை. ஏற்கெனவே பதிவேற்றம் செய்யப்பட்டு ஆய்வு நிலையில் இருந்து வந்த ஆவணங்களையும் மேற்கொண்டு பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. 
சென்னை சுங்கத்துறை ஆணையரக கட்டுப்பாட்டில் சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி அதானி ஆகிய மூன்று துறைமுகங்கள் மற்றும் முப்பதுக்கும் மேற்பட்ட சரக்குப் பெட்டக நிலையங்கள் உள்ளன. இங்கெல்லாம் ஒவ்வொரு கட்டத்திலும் ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும். அப்போதுதான் ஏற்றுமதியோ இறக்குமதியோ செய்ய முடியும். இணையதளம் முடங்கிவிட்டதால் இவையனைத்திலும் சரக்குகளை கையாள்வதும், ஏற்றுமதி, இறக்குமதி பணிகளும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுங்கத்துறை அதிகாரிகள், முகமை அலுவலக ஊழியர்கள், லாரி ஓட்டுநர்கள், கூலித் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் வேலையின்றி இணையதளத்தின் செயல்பாட்டிற்காக காத்திருக்கின்றனர். இந்தியாவில் ஏற்றுமதி, இறக்குமதி நடைபெறும் அனைத்து இடங்களிலும் இதே போன்ற நிலைமை இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. 
தாமதத்திற்கான கூடுதல் கட்டணங்களை நீக்கக் கோரிக்கை: இதுகுறித்து சென்னை சுங்கத்துறை முகவர் சங்கத் தலைவர் கே.வி.வி.கிரி கூறியது, சுங்கத்துறை இணையதளம் முடங்கியுள்ளதால் ஆவணப் பரிவர்த்தனையில் கடும் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து சங்கங்களும் இணைந்து பிரதமர் நரேந்திர மோடிவரை இப்பிரச்னையை எடுத்துச் சென்றுள்ளோம். தற்போதைய விதிகளின்படி இறக்குமதியாகும் சரக்குகள் துறைமுகத்தை வந்தடைந்த 24 மணி நேரத்திற்குள் ஆவணப் பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் முதல் நாள் தாமதத்திற்கு ரூ.5 ஆயிரமும், அடுத்தடுத்த நாள்களுக்கும் தொடர்ந்து தண்டத் தொகை செலுத்த வேண்டும். தற்போது இணையதளம் முடங்கியுள்ள நிலையில் இத்தண்டத்தொகையை இறக்குமதியாளர்கள் கட்டாயம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தவிர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கும்படி சுங்கத்துறை முதன்மை ஆணையர்களிடம் கடிதம் அளித்துள்ளோம். இதனையடுத்து இணையதளம் சீராகும்வரை தண்டத்தொகைய நீக்கி ஆவண பரிவர்த்தனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இணையதளக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்ய தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. வியாழக்கிழமை பிற்பகல் ஒரிரு மணி நேரம் இயங்கிய இணையதளம் மீண்டும் முடங்கிச் செயலிழந்தது. இதே நிலை நீடித்தால் நிலைமை மேலும் சிக்கலாகும் என்றார் கிரி. 
தொழில்நுட்பக் கோளாறுகள் விரைவில் சரிசெய்யப்படும்: இது குறித்து சுங்கத் துறை வட்டாரத்தில் கூறியது: இணையதளம் சுங்கத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் இதன் தொழில்நுட்பக் கட்டமைப்பு அனைத்தையும் மேலாண்மை செய்வது தேசிய தகவல் மையம்தான். தற்போதைய இணையதளத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இப்பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தேசிய தகவல் மைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள இப்பிரச்னை அடுத்த ஓரிரு நாள்களில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கிறோம் என்றனர். சுங்கத்துறை இணையதளம் முடங்கியுள்ளதையடுத்து துறைமுகங்களிலிருந்து வெளியே எடுத்துச் செல்ல வேண்டிய சரக்குப் பெட்டகங்கள் இங்குள்ள முனையங்களில் தேங்கியுள்ளன. மேலும் ஏற்றுமதிக்காக வரவேண்டிய சரக்குப் பெட்டகங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் கப்பல்களுக்குத் தேவையான சரக்குகள் வந்து சேர முடியாத நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.