/

பரபரப்பான சூழ்நிலையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்கூட்டம்!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னையில் 28 ஆம் தேதி அதிமுக நாடாளுமன்ற

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:44 pm

DIN


சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னையில் 28 ஆம் தேதி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது.

அதிமுகவில் ஏற்பட்ட பிளவை தொடர்ந்து டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள் 19 பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு சபாநாயகர் ப.தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த பரபரப்பான் அரசியல் சூழ்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 28 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர், அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், மாநில நிர்வாகிகள், என சுமார் 200 பேர் கலந்துகொள்கின்றனர். இதற்காக, தனித்தனியாக கடிதம் எதுவும் அனுப்பப்படவில்லை. தொலைபேசி மூலம் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கான தேதி முடிவு செய்யப்படும் என தெரிகிறது. சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சி பதவிகளில் இருந்து நீக்கவும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் கட்சியில் நியமிக்கப்படவுள்ள வழிகாட்டு குழுவுக்கும் ஒப்புதல் பெறப்படும் என தெரிகிறது.

அதாவது, அதிமுக பொதுச் செயலாளர் செயல்பட முடியாத நிலையில், பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் பரிந்துரைத்தால் பொதுக்குழுவை கூட்டலாம் என்பது அக்கட்சியின் சட்ட விதியில் உள்ளது. எனவே, அதன் அடிப்படையில், ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதலை பெற்று பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், அதிமுகவை பொறுத்தவரை உறுப்பினர்களை சேர்த்தல், நீக்குதல் போன்ற அனைத்து அதிகாரங்களும் பொதுச் செயலாளருக்கே இருக்கிறது. எனவே, விரைவில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையத்திடம் கடிதம் அளிக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.