

தமிழகப் பள்ளிக் கல்வித்துறையில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்தது போல உயர்கல்வி மாணவர் சேர்க்கையிலும் சட்டரீதியான மாற்றங்கள் கொண்டு வரப்படுமா என்ற எதிர்பார்ப்பு அனைத்துத் தரப்பினரிடமும் எழுந்துள்ளது.
அகில இந்தியப் போட்டித் தேர்வுகளைக் கருத்தில் கொண்டு தமிழகப் பள்ளிக் கல்வித்துறையில் ஒன்றாம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரையில் படிப்படியாக பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு மட்டுமாவது நீட் தேர்விலிருந்து விலக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தபோதும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு, மத்திய அரசின் பாராமுகம் காரணமாக மருத்துவ மாணவர் சேர்க்கை, மாநில பாடத்திட்டத்தில் படித்து அதிக மதிப்பெண் குவித்த மாணவ, மாணவியரின் கனவுகளைச் சிதைப்பதாக இருந்தது.
மாநில பாடத்திட்டத்தில் கட்-ஆஃப் மதிப்பெண் 200க்கு 198 ஆக இருந்தாலும் கூட மருத்துவம் படிக்க முடியாமல் போன மாணவர்கள் பல ஆயிரம் பேர். இதற்கு யாரைக் காரணம் சொல்வது? கடைசி நிமிடம் வரை இழுத்தடித்த மத்திய அரசையா, மத்திய அரசு தங்களுக்கு நன்மை செய்யும் என்று நினைத்துச் செயல்பட்ட மாநில அரசையா, இந்த நாட்டின் இறுதி நம்பிக்கையான உச்சநீதிமன்றம் தங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்கும் என்று நம்பியவர்களையா? இந்த ஆண்டு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை இருóககும் என்று அரசியல்வாதிகளும் அமைச்சர்களும் சொன்னதை நம்பிக் கனவு கண்ட மாணவ, மாணவர்களையா? எது எப்படியோ அவர்களின் கனவு இந்த ஆண்டு நனவாகவில்லை என்பதுதான் நிதர்சனம்.
மருத்துவப் படிப்பில் மட்டுமில்லாமல் தொழிற்கல்விப் படிப்புகளான பொறியியல் மற்றும் வேளாண் படிப்புகளிலும் தமிழக மாணவ, மாணவியரின் உரிமைகள் பறிபோய்க் கொண்டிருக்கிறது. இனிமேலாவது தமிழக மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகள் பறிபோவதைத் தடுக்க அண்டை மாநிலங்களில் உள்ளதைப் போல சட்டம் கொண்டு வர வேண்டும் என்பதுதான் இப்போது எழுந்துள்ள கோரிக்கை.
ஆந்திர மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அம்மாநில மாணவர்கள் மட்டுமே சேர முடியும். அங்கு அகில இந்திய ஒதுக்கீடு கிடையாது. ஆனால் தமிழகத்தில் 15 சதவீத இட ஒதுக்கீடு உண்டு. இங்கு நீட் தேர்வு முடிவின் தரவரிசைப்படிதான் சேர முடியும். ஆந்திர மாநிலத்தில் படிக்கும் மாணவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்தால் ஆந்திராவில் எந்தக் கல்லூரியிலும் அவர்கள் சேர முடியாது. இதுதான் அங்குள்ள நிலை.
பொறியியல் படிப்பைப் பொறுத்தவரையில் சென்னை அண்ணா பல்கலைக் கழக தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தை இருப்பிடமாகக் கொண்ட பிற மாநில மாணவர்கள் முதலிடம் பெற்றனர். இதே நிலை வேளாண் பல்கலைக் கழகத்திலும் உள்ளது.
தமிழகத்தில் உள்ள ஒருவரின் கனவு ஐ.ஐ.டி.தான் என்றால் பெரும்பாலானவர்கள் இங்கிருந்து ஆந்திர மாநிலத்துக்குச் சென்று அங்கேயே தங்கிப் படிக்கின்றனர். இதற்குக் காரணம் அங்குள்ளபாடத்திட்டம். ஐ.ஐ.டி. தேர்வில் வெற்றி பெற முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் அண்ணா பல்கலைக் கழகத்தில் தமிழக இருப்பிடச் சான்றைக்கொடுத்து இங்குள்ள முன்னணிக் கல்லூரிகளில் இடம் பெற்று விடுகின்றனர்.
ஆனால் நமது அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் நிலைமை அவ்வாறு இல்லை. அந்த மாநிலத்தில் வசிப்பவர்கள் மட்டுமே அங்குள்ள கல்லூரிகளில் சேர முடியும். தமிழகத்தில் படித்த எந்தக் குடிமகனும் ஆந்திரத்தில் இருப்பிடம் இருந்தாலும் ஆந்திர மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எந்தக் கல்லூரியின் தரவரிசைப் பட்டியலிலும் இடம் பெற முடியாது. இப்போது கர்நாடகத்தில் படிக்க வேண்டுமானால் (நமது தமிழகத்தில் முன்பே செய்ததைப் போல) கன்னடத்தைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.
அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற பல ஆந்திர மாணவர்கள் அதிக கட்-ஆஃப் மதிப்பெண்ணுடன் சிறந்த கல்லூரிகளைத் தேர்வு செய்கின்றனர். ஆனால் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை என்பது நெஞ்சைத் தொடும் நிஜம். தமிழகத்தில் வசித்து இங்கு படிக்கும் மாணவர்கள் மட்டுமே இங்குள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சேர முடியும் என்று ஏன் சட்டம் கொண்டு வரக் கூடாது? வேண்டுமானால் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் பிற மாநில மாணவர்கள் சேரும் வகையில் செய்யலாம்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் உள்ள இளநிலைப் பட்டங்களில் சேர அகில இந்திய ஒதுக்கீடு 15 சதவீதம். தேசி அளவிலான தகுதித் தேர்வு எழுதி தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள தமிழகம் உள்ளிட்ட எந்த மாநில மாணவர்கள் வேண்டுமானாலும் இந்திய ஒதுக்கீட்டில் சேர முடியும்.
இதேபோல முதுநிலைப் படிப்பில் 25 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீடு உள்ளது. மீதமுள்ள 75 சதவீத இட ஒதுக்கீட்டிலும் தமிழக மாணவர்கள் மட்டும் சேர முடியாது.
இதற்கெனத் தனியாக நடக்கும் நுழைவுத் தேர்வில் எந்த மாநிலத்தவரும் தேர்வெழுதலாம். அதில் தேர்ச்சி பெற்றால் தமிழகக் கல்லூரிகளில் சேர்ந்து முதுநிலைப் படிப்புப் படிக்க முடியும்.
ஆனால் பிற மாநிலங்களில் உள்ளவேளாண் பல்கலைக் கழகங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டைத் தவிர வேறு ஒதுக்கீடுகளில் சேர முடியாது.
சம்பந்தப்பட்ட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான இருப்பிடச் சான்றைத் தர வேண்டும் மேலும் பல ஆண்டுகள் அங்கேயே படித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாநில மொழியையைம் படித்திருக்க வேண்டும். அப்போதுதான் அங்கு சேர முடியும்.
தமிழகப் பாடத்திட்டம் விரைவில் மாற உள்ள சூழ்நிலையில் உயர்கல்வித்துறையிலும் தேவையான மாற்றங்களைக் கொண்டு வந்து தமிழக மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும் என்பதுதான் கல்வியாளர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களின் எதிர்பார்ப்பு.
ஆந்திரத்தில் குடியேறும் தமிழகப் பெற்றோர்
பொதுவாக நம் அனைவருக்குமே நமது குழந்தைகளின் எதிர்காலம் குறித்த பயமும் எதிர்பார்ப்பும் அதிகம். இதனால் ஐ.ஐ.டி. மற்றும் மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பலர் ஆந்திர மாநிலத்துக்குக் குடியேறுவது கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது.
ஆந்திர மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள்தான் அதிகமாக ஐ.ஐ.டி.யில் சேர்கின்றனர். மேலும் அங்கு படித்தால் மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்ற நம்பிக்கையும் அதிகரித்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக ஈரோடு மாவட்டத்தில் இருந்து மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்பதற்காக ஆந்திர மாநிலத்தில் குடியேறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. 4 அல்லது 5 ஆண்டுகள் அங்கு சென்று தங்கிப் படித்து ஐ.ஐ.டி. அல்லது மருத்துவப் படிப்பில் சேர்கின்றனர்.
போலி இருப்பிடச் சான்று
மருத்துவப் படிப்புக்கான மோகம் அதிகரித்து வருவதால் இந்த ஆண்டு நடைபெற்ற கலந்தாய்வில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் போலி இருப்பிடச் சான்று கொடுத்து கலந்தாய்வில் பங்கேற்க வந்தது குறித்து விசாரணை நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு மாநில எல்லையோர கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அருகருகே உள்ள இரு மாநிலங்களிலும் ரேஷன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்றுள்ளனர். ஆனால் மொழிப்பிரச்னை காரணமாக வருவாய்த்துறையினரால் இப் பிரச்னையில் ஒன்றும் செய்ய முடியவில்லை. மருத்துவம், பொறியியல் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட தொழிற்கல்லூரிகளில் போலி இருப்பிடச் சான்று கொடுத்து கடந்த 4 ஆண்டுகளில் சேர்ந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தினால் மேலும் பல உண்மைகள் வெளியாகலாம் என்கின்றனர் பெற்றோர். இதன் மூலம் தமிழக மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.