எடப்பாடி பழனிசாமி அணியில் புதுவை அதிமுக எம்எல்ஏக்கள் : அன்பழகன் எம்எல்ஏ தகவல்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியில்தான், புதுவை மாநில அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேரும் உள்ளதாக, அந்த மாநில அதிமுக எம்எல்ஏ அன்பழகன் கூறினார். 
Updated on
2 min read

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியில்தான், புதுவை மாநில அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேரும் உள்ளதாக, அந்த மாநில அதிமுக எம்எல்ஏ அன்பழகன் கூறினார். 
இது குறித்து புதுச்சேரியில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுவை அரசு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், இதுதொடர்பாக ஆளுநரும், முதல்வரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற கடன் தொகைக்கான தவணைத் தொகை ரூ.177 கோடியை, வருகிற ஜனவரி 25-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. ஊழியர்களின் சம்பளம், உள்கட்டமைப்புப் பணி மற்றும் பல்வேறு திட்டங்களில் சேமிப்பு என்ற விகிதத்தில், அதிலிருந்து பணத்தைப் பிடித்தம் செய்து கடனை அடைக்க உள்ளதாகத் தெரிகிறது. 
இந்த நிலை தொடர்ந்தால், வரும் நிதியாண்டில் மாநில வளர்ச்சி பாதிக்கப்படும். நிதி நிலை தொடர்பாக சிறப்பு சட்டப் பேரவைக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் வலியுறுத்தியும் பதில் இல்லை. மற்றொருபுறம் அரசுக்கான வரி வராமல் உள்ளது. கேபிள் டிவி கேளிக்கை வரியாக ஆண்டுக்கு ரூ.10 கோடி வசூலாக வேண்டும். இதை கடந்த 10 ஆண்டுகளுக்கு வசூலித்தாலே ரூ.100 கோடி வருவாய் கிடைக்கும். வரி மோசடி செய்பவர்கள் முதல்வருடன் இருந்துகொண்டு, வரி செலுத்த வேண்டியதில்லை என்கின்றனர். இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
புத்தாண்டையொட்டி உணவகங்கள், அரசு மற்றும் தனியார் இடங்களில் நடனம், கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்காக அரசுத் துறையினர் போட்டி போட்டுக்கொண்டு அனுமதி கொடுத்துள்ளனர். இதில் பங்கேற்பவர்களிடம் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வோர் நுழைவுச் சீட்டுக்கும் 40 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ஆனால், அதிகாரிகள் துணையுடன் குறைந்த வரியில் போலி நுழைவுச் சீட்டு வழங்கப்படுகிறது. 
பட்ஜெட்டில் அறிவிக்காத திட்டங்களுக்கு நிதியைச் செலவிடக் கூடாது என ஆளுநர் கூறுகிறார். ஆனால், பட்ஜெட்டில் அறிவித்த இலவச அரிசி, புதிதாக 10 ஆயிரம் பேருக்கு முதியோர், விதவை உதவித் தொகை, இலவச வேட்டி, சேலை, பண்டிகைக் கால சர்க்கரை உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சம்பளம் இல்லை. ஆனால், சட்ட விரோதமாக நியமிக்கப்பட்ட நியமன எம்எல்ஏக்களுக்கு சம்பளம் வழங்கக் கோருகிறார் ஆளுநர். ஆளுநர் திட்டங்களைத் தடுப்பதாகக் கூறி முதல்வர் காலம் தாழ்த்தி வருகிறார். பட்ஜெட்டில் அறிவித்து, நிதி ஒதுக்கிய திட்டங்கள் எப்படி தடுக்கப்படுகின்றன என்பதை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும். 
இரட்டை இலைச் சின்னம் கிடைக்க புதுச்சேரி அதிமுகவின் எம்எல்ஏக்கள் 4 பேரும் கையொப்பம் இட்டுள்ளோம். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில்தான் நாங்கள் 4 பேரும் (புதுவை எம்எல்ஏக்கள்) உள்ளோம். கட்சியும், இரட்டை இலைச் சின்னமும் எங்குள்ளதோ அங்குதான் நாங்கள் இருப்போம் என்றார் அவர். 
அப்போது, காரைக்கால் எம்எல்ஏ அசனா உடனிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com