ஒக்கி புயலில் மாயமான மீனவர்களை மீட்கக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.எம்.ஆன்டோ லெனின் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அவர்கள் தாக்கல் செய்த மனு: ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பேரிழப்பு ஏற்பட்டது. ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் வீடு திரும்பவில்லை. மீனவர்களை மீட்பதில் மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டவில்லை. நவம்பர் 31 ஆம் தேதியே ஹெலிகாப்டர்கள் மூலம் தேடியிருந்தால் மீனவர்கள் பலரை மீட்டிருக்கலாம்.
மீனவக் கிராமங்களில் நடத்திய ஆய்வில், 551 மீனவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை என்பது தெரியவந்துள்ளது. மாயமான 551 மீனவர்களை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, ஒக்கி புயலில் மாயமான மீனவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கரை திரும்பியுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இவ்வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், அப்துல்குத்தூஸ் ஆகியோர் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இதேகோரிக்கையை வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து இந்த வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.