சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் மனைவியிடம் வருத்தம் தெரிவித்தார் முனிசேகர்
ராஜஸ்தானில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுடப்பட்ட விவகாரம் தொடர்பாக, அவரது மனைவியிடம் இன்ஸ்பெக்டர் முனிசேகர் வருத்தம் தெரிவித்துள்ளார்.


ராஜஸ்தானில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுடப்பட்ட விவகாரம் தொடர்பாக, அவரது மனைவியிடம் இன்ஸ்பெக்டர் முனிசேகர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள மூவிருந்தாளியைச் சேர்ந்தவர் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன். இவர் அண்மையில் ராஜஸ்தானில் கொள்ளையரைப் பிடிக்கச் சென்றபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின.
இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில் பெரியபாண்டியன் இறந்தார் எனவும், முனிசேகருடன் சென்ற மற்ற 4 போலீஸார் குறித்து தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை என்றும் கூறப்பட்டுவந்தது.
இதனிடையே, வழக்கை விசாரித்துவரும் ராஜஸ்தான் போலீஸார், பெரியபாண்டியனின் உடலில் பாய்ந்தது முனிசேகரின் துப்பாக்கிக் குண்டுதான் எனத் தெரிவித்தனர். இதுகுறித்து தமிழக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில், பெரியபாண்டியனைக் காப்பாற்றுவதற்காக முனிசேகர் கொள்ளையரை நோக்கிச் சுட்டபோது, துப்பாக்கிக் குண்டு தவறுதலாக பெரியபாண்டியன் மீது பட்டதால் அவர் இறந்துள்ளார் என, காவல் துறை தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், மூவிருந்தாளியில் உள்ள இல்லத்தில் பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை இரவு கூறியதாவது:
ராஜஸ்தானில் கொள்ளையரைப் பிடிக்கச் சென்ற தமிழக போலீஸாரை அவர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதனால் கொள்ளையரை நோக்கி போலீஸார் துப்பாக்கியால் சுட்டுத் தப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மற்றவர்கள் தப்பிய நிலையில் என் கணவர் அங்கேயே சிக்கியுள்ளார்.
அப்போது என் கணவரும் தன்னுடன் வந்துவிட்டார் என நினைத்து, கொள்ளையரை நோக்கி முனிசேகர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், துப்பாக்கிக் குண்டு தவறுதலாக பாய்ந்ததில் என் கணவர் இறந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
இதற்காக, என் கணவருடன் சென்ற இன்ஸ்பெக்டர் முனிசேகரும், 4 போலீஸாரும் நேரில் வந்து என்னிடம் கூறி வேதனை தெரிவித்தனர். என் கணவரும், முனிசேகரும் நண்பர்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே, இந்தச் சம்பவத்தில் எந்த உள்நோக்கமும் இருக்க வாய்ப்பில்லை. நேர்மையான, நல்ல அதிகாரியை இழந்துவிட்டோம் எனக் கூறி, மிகவும் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்டனர்.
இத்தாக்குதலில் ஈடுபட்ட ராஜஸ்தான் கொள்ளையருக்கு சட்டப்படி தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
இதனிடையே, பெரியபாண்டியனின் நினைவிடத்தில் 16ஆம் நாள் சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், அவரது உறவினர்களும், அவர் பணியாற்றிய மதுரவாயல் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...