தாய்மொழியை மறந்தால் பண்பாடு, நாகரிகம் அழியும்: உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர்

தாய்மொழியை மறந்தால் பண்பாடு, நாகரிகம் அழிந்துபோகும் என்று உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் கா.மு.சேகர் கூறினார்.
Updated on
1 min read

தாய்மொழியை மறந்தால் பண்பாடு, நாகரிகம் அழிந்துபோகும் என்று உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் கா.மு.சேகர் கூறினார்.
உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ்க் கவிதை, சிறுகதை, புதினம் மற்றும் ஆய்வு நூல்களைத் தேர்வு செய்து நூல் அரங்கேற்றம் செய்ய உள்ளது. இதன் முதல் நிகழ்வாக உலகத் தமிழ்ச் சங்க கூட்டரங்கில் நூல் அரங்கேற்றம் மற்றும் குதிரையாளி நூல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் கா.மு.சேகர் பேசியது:
இலக்கியப் படைப்புகள் காலத்தின் கண்ணாடிகளாக உள்ளன. சமூக சிந்தனைகளைத் தூண்டும் கருத்துகளை கவிஞர்கள், எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளில் வெளிப்படுத்தி வருகின்றனர். வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்ற வாழ்வியலை சங்க இலக்கியங்கள் நமக்கு கற்றுக் கொடுத்தன. இன்றைய வாழ்வியல் எப்படி போய்க் கொண்டிருக்கிறது என்பதை தற்கால இலக்கியங்கள் சொல்கின்றன. இந்த சமூகத்தின் மீதான அக்கறையை, மொழியால் இலக்கியப் படைப்பாளிகள் வெளிப்படுத்துகின்றனர். தாய்மொழியை மறந்தால் நமது பண்பாடு, நாகரிகம், கலாசாரம் அனைத்தும் அழிந்துபோகும். இந்த மொழியைக் காக்க ஏராளமான படைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக நூல்கள் அரங்கேற்றத்தை உலகத் தமிழ்ச் சங்கம் தொடங்கியுள்ளது என்றார்.
திருக்குறளில் எழுத்தும் சொல்லும் என்ற ஆய்வு நூல், மருதத் திணை, அப்பாவின் வேட்டி ஆகிய கவிதை நூல்கள் குறித்து பேராசிரியர் அ.கி.ராமசாமி, குதிரையாளி ஹைக்கூ கவிதை நூல் பற்றி, கவிஞர் வதிலை பிரபா நூல் மதிப்புரை வழங்கினர்.
அவ்வையார் - வரலாற்று நாடகக் காப்பியம், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர் வாணமதி என்ற மதிவதனியின் எச்சங்கள் - சிறுகதை குறித்து பேராசிரியர் இரா.மோகன் மதிப்புரையாற்றினார். நூல் ஆசிரியர்கள் அவ்வை நிர்மலா, க.ஜெய்சங்கர், கவிஞர் மீனாசுந்தர், கவிஞர் பொம்பூர் குமரேசன், சிங்கப்பூர் புலம்பெயர் கவிஞர் சுபிபிரேம் ஆகியோர் ஏற்புரையாற்றினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com