புதுவையில் ஜனவரி 25-இல் சர்வதேச பாய்மரப் படகுப் போட்டி
புதுவையில் சர்வதேச அளவிலான பாய்மரப் படகுப் போட்டி ஜனவரி 25-இல் தொடங்குகிறது.
இது தொடர்பாக, புதுவை பிரெஞ்சு துணைத் தூதரக அலுவலகத்தில் முதல்வர் வி.நாராயணசாமி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரெஞ்சு அரசின் நிதி உதவியுடன், புதுச்சேரி சுற்றுலாத் துறை இணைந்து வருகிற ஜனவரி 25 முதல் 28-ஆம் தேதி வரை சர்வதேச அளவிலான பாய்மரப் படகுப் போட்டியை நடத்துகிறது. போன்சூர் இந்தியா திட்டத்தின்கீழ், கலை, கலாசார நிகழ்ச்சிகளுடன் இந்தப் போட்டி நடத்தப்பட உள்ளது. பிரான்சிலிருந்து ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட 10 வீரர்களும், இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் இந்தப் போட்டியில் பங்கேற்பார்கள்.
புதுச்சேரியின் பாய்மர படகுப் பயிற்சியாளர் அமைப்பும், பிரெஞ்சு தேச பாய்மரப் படகுப் பயிற்சியாளர்கள் அமைப்பும் இணைந்து இந்தப் போட்டியை நடத்த உள்ளன.
முந்தைய காலத்தில் நமது நாட்டு வணிகர்கள் கடல் மார்க்கமாக பாய்மரப் படகில் அயல் நாடுகளுக்குச் சென்று வணிகம் செய்துள்ளனர். புதுவை அரிக்கன்மேடு பகுதியில், கிரேக்க தேசத்தோடு நாம் வணிகம் செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அயல் நாடுகளில் பிரபலமான பாய்மரப் படகுப் போட்டிகள், இந்தியாவில் பிரபலமாகவில்லை.
இந்தப் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு விருதுகள் வழங்கப்படும். இதன் மூலம், புதுவையின் சுற்றுலா பெருமை மேம்படுவதோடு, பிரெஞ்சு நாட்டுடனான நட்பும் பலமாகும். பொலிவுறு நகரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கும் பிரெஞ்சு அரசு உதவி வருகிறது என்றார் முதல்வர் நாராயணசாமி.
துணைத் தூதர் கேத்தரின் ஸ்வாட், சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், எம்எல்ஏ க.லட்சுமிநாராயணன், சுற்றுலாத் துறை இயக்குநர் முனுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

