ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

புத்தாண்டு கொண்டாட்டம்: கண்காணிக்கப்படுமா கிழக்கு கடற்கரைச் சாலை?

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள சில கடற்கரை பங்களாக்களில் அனுமதியின்றி புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு

News image
Updated On :28 டிசம்பர் 2017, 9:07 pm

DIN

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள சில கடற்கரை பங்களாக்களில் அனுமதியின்றி புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை மற்றும் கிழக்கு கடற்கரையோர சாலையில் அமைந்துள்ள ரிசார்ட்டுகள், நட்சத்திர விடுதிகள் ஆகியவற்றில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். இதற்காக ரிசார்ட்டுகள், நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டையொட்டி, கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், பல்சுவை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன. புத்தாண்டு கொண்டாட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (டிச.31) மாலை தொடங்கி மறுநாள் (ஜனவரி 1) அதிகாலை வரை நடத்துவதற்கு இவ்விடங்களில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக கடந்த வாரமே முன்பதிவும் தொடங்கிவிட்டது.
அனுமதியின்றி கொண்டாட்டம்: கிழக்கு கடற்கரைச் சாலையில் வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கம், அக்கரை, பனையூர், உத்தண்டி, கானத்தூர், முட்டுக்காடு ஆகியப் பகுதிகளில் கடற்கரையையொட்டிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான பங்களாக்கள் உள்ளன. இந்த பங்களாக்கள் பெரும்பாலானவை நீச்சல்குளம், அரங்கம் ஆகியவற்றுடன் உள்ளன. இந்த பங்களாக்கள் நாள் வாடகைக்கும் விடப்படுகின்றன. இவற்றை சிலர் வாடகைக்கு எடுத்து புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
காவல்துறை சிறப்பு அனுமதி தேவை: ரிசார்ட்டுகள், நட்சத்திர விடுதிகள், பங்களாக்கள் ஆகியவற்றில் புத்தாண்டு நடத்துவதற்கு காவல் துறை சார்பில் சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த அனுமதியை 16 விதிமுறைகளைப் பின்பற்றி காவல்துறை வழங்குகிறது. இந்த விதிமுறைகளில் ஏதேனும் ஒன்று மீறப்பட்டிருந்தாலும் காவல்துறை அனுமதி வழங்குவதில்லை. அனுமதியின்றி எந்த ரிசார்ட்டிலும் புத்தாண்டு நிகழ்ச்சியை யாரும் நடத்தவும் முடியாது.
ஆனால் கிழக்கு கடற்கரைச் சாலையில் சில பங்களாக்களில் காவல்துறையின் உரிய அனுமதி பெறாமலேயே புத்தாண்டு கொண்டாட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் கூறுகின்றனர்.
குடியிருப்பு பகுதிகளின் அருகேயுள்ள இந்த பங்களாக்களில், புத்தாண்டு நிகழ்ச்சிகள் முதல் நாள் மாலைத் தொடங்கி மறுநாள் நாள் அதிகாலை வரை நடைபெறுவதால் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன், சென்னையில் ஒரு ஹோட்டலில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட விபத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி இருவர் உயிரிழந்தனர். இதன் பின்னரே காவல்துறையினர் விழித்துக் கொண்டு புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கினர்.
அதேபோல், கிழக்கு கடற்கரை பங்களாக்களில் அனுமதியின்றி நடைபெறும் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகளையும், புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளையும் கட்டுப்படுத்த திடீர் ஆய்வு நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடற்கரையோர பங்களாக்களை சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் கூறுகின்றனர்.
காவல் துறையின் 16 கட்டுப்பாடுகள்
நட்சத்திர விடுதிகள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றுக்கு வரும் வாகனங்கள் முறையாக சோதனை செய்யப்பட வேண்டும். வாகனங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்பட்ட அரங்கத்திலேயே நடத்தப்பட வேண்டும். 
அனைத்து நுழைவாயில்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சிக்காக தாற்காலிக மேடைகள் அமைக்கப்பட்டால், அந்த மேடையின் ஸ்திரத்தன்மைமையை உறுதி செய்ய பொதுப் பணித் துறை, தீயணைப்புத் துறை ஆகியவற்றின் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும். நீச்சல் குளத்தின் மீதோ, அருகிலோ மேடை அமைக்கக் கூடாது. 
சாலைகளில் எக்காரணம் கொண்டும் வாகனங்கள் நிறுத்தப்படக் கூடாது. மதுபானங்கள் அனுமதிக்கப்பட்ட மதுபானக் கூடத்தில் மட்டுமே பரிமாறப்பட வேண்டும். காவல்துறையால் அளிக்கப்படும் நேரக் கட்டுப்பாடு கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும். 
கேளிக்கை நிகழ்ச்சிகளின்போது பெண்களை கேலி செய்வதை தடுக்க போதுமான பாதுகாப்பு ஊழியர்களை நியமிக்க வேண்டும். வளாகத்தினுள் பட்டாசு வெடிக்கக் கூடாது உள்ளிட்ட 16 விதிமுறைகளை சென்னை காவல்துறை விதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.